லெபனானில் மசூதி- டி.வி.கோபுரம் தகர்ப்பு
லெபனான் நாட்டில் உள்ள டி.வி. ஒளிபரப்பு கோபுரங்கள் மற்றும் மசூதி ஆகியவற்றின் மீது இஸ்ரேல் குண்டுகள் வீசித் தாக்கி அழித்தன. இந்த மாதிரியான தாக்குதல் இன்னும் ஒருவாரத்துக்கு நீடிக்கும் என்றும் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை தாக்குதல் நடத்த அமெரிக்கா ஒப்புதல் அளித்து உள்ளது என்றும் இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பாலஸ்தீன தீவிரவாதிகள் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 2பேரை கடத்தி சிறைப்பிடித்து வைத்து உள்ளனர். அவர்களை விடுவிப்பதற்காக கடந்த 12-ந் தேதி லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் விமானத்தாக்குதல் நடத்தப்பட்டது. அது முதல் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
நேற்று காலை 6மணிக்கே விமானத் தாக்குதலை தொடங்கிவிட்டது. பெய்ரூட் நகரின் தெற்குப்பகுதியில் ஹெஸ்புல்லா தீவிரவாதிகள் வலுவாக உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. ஹெஸ்புல்லா தீவிரவாதிகளின் தலைமை அலுவலகம் குண்டுவீசி தகர்க்கப்பட்டது. ஹெஸ்புல்லா தலைவர் நஸரல்லாவின் வீடும் தரைமட்டமாக்கப்பட்டது.
டி.வி.ஒளிபரப்பு கோபுரங்கள்
லெபனானின் 4 இடங்களில் உள்ள தனியார் டெலிவிஷன் ஒளிபரப்பு கோபுரங்களையும் இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழித்தது. இந்தத் தாக்குதலில் எல்.பி.சி.ஐ.டெலிவிஷன் நிலைய ஊழியர் ஒருவர் பலியானார். இன்னொரு ஊழியர் காயம் அடைந்தார். பிïச்சர் டி.வி.நிலையத்தின் ஒளிபரப்புக்கோபுரமும் சேதப்படுத்தப்பட்டது. தனியார் ரேடியோ நிலையங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின. பெனான் நாட்டின் வடக்குப்பகுதியில் உள்ள கேசர்வான் மலைப்பகுதியில் உள்ள செல்போன் நெட்வொர்க்குகளும் சேதப்படுத்தப்பட்டன.
அரசுக்குச்சொந்தமான டெலி லிபன் டி.வி.க்குச்சொந்தமான ஒளிபரப்புக் கோபுரம் மற்றும் ஹெஸ்புல்லா வுக்குச் சொந்தமான அல்-மனார் டி.வி.ஒளிபரப்புக்கோபுரம் ஆகியவற்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் அரசாங்க டி,வி.யின் ஊழியர் ஒருவர் காயம் அடைந்தார்.
லெபனான் நாட்டின் தெற்குப்பகுதியில் உள்ள துறைமுகநகரான சிடோன் னில் 5 குண்டுகளை இஸ்ரேல் போர்விமானங்கள் வீசின. இவற்றில் ஒரு குண்டு ஷியா முஸ்லிம்களின் மசூதி இருக்கும் வளாகத்தை தாக்கியது. இந்த வளாகம் 4மாடிகள் கொண்டது. ஹெஸ்புல்லா தீவிரவாதிகள் இந்த வளாகத்தைப் பயன்படுத்தி வந்தனர். இப்போது இந்த வளாகம் சேதப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் காயம் அடைந்தனர். லெபனானின் தெற்கு பகுதியில் தான் அதிக அளவில் தாக்குதல் நடப்பதால் அந்தப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வடக்குநோக்கி ஓடத்தொடங்கி உள்ளனர்
முன்னதாக ஹெஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேல் நாட்டின் 12 ராக்கெட்டுகளை வீசித் தாக்கினர். இதைத் தொடர்ந்து தான் நேற்றைய தாக்குதல் அதிகாலையே தொடங்கியது.
5பேர் பலி
நேற்றைய தாக்குதலில் 5 அப்பாவி லெபனான் மக்கள் பலியானார்கள். டயர் நகரில் காரில் சென்ற கணவனும் மனைவியும் இஸ்ரேலின் குண்டு வீச்சுக்கு பலியானார்கள். காரில் இருந்த அவர்களது உறவினர்கள் 4 பேர் காயம் அடைந்தனர். இதுவரை நடந்த தாக்குதலில் மொத்தம் 350 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் 26 பேர் லெபனான் ராணுவவீரர்கள்.12பேர் ஹெஸ்புல்லா தீவிரவாதிகள்.
ஒரு வாரம் நீடிக்கும்
போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலாளர் கோபி அணன் கேட்டுக்கொண்டு இருக்கிறார். போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.கோபி அணன் கோரிக்கையை ஏற்க இஸ்ரேல் மறுத்து விட்டது. இந்த நிலையில் பிரான்சு, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் போரை நிறுத்த முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றன. இதற்கிடையில் மேலும் ஒரு வாரம் போர்நிறுத்தம் நீடிக்கும் என்று இஸ்ரேல் அதிகாரிகள் அறிவித்து உள்ளனர். இதற்கான ஒப்புதலை அமெரிக்கா வழங்கி உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.அடுத்தவாரம் ஞாயிற்றுக்கிழமை வரை போர் நீடிக்கும் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர்.