கல்லூரி நிர்வாகத்தின் சித்ரவதை தாங்காமல் 3 மாணவிகள் பலியானார்களா…!!
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே பங்காரம் எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா சித்த மருத்துவ கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்த மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகியோர் கடந்த 23–ந் தேதி கல்லூரியின் அருகில் உள்ள விவசாய கிணற்றில் பிணமாக கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கல்லூரிக்கு எதிராக நடத்திய பல்வேறு போராட்டங்களின் விளைவாக கல்லூரி நிர்வாகத்தினர், கூலிப்படையை ஏவி மாணவிகளை கொலை செய்து கிணற்றில் வீசி விட்டதாக அவர்களின் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.
இதையடுத்து கல்லூரி தலைவர் சுப்பிரமணியன், தாளாளர் வாசுகி, இவர்களது மகன் சுவாக்கர் வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி, கல்லூரி ஆதரவாளர் வெங்கடேசன் ஆகியோர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கலாநிதி, சுவாக்கர் வர்மா ஆகியோரை கைது செய்தனர். கல்லூரி தாளாளர் வாசுகி, சென்னை தாம்பரம் கோர்ட்டிலும், வெங்கடேசன் சைதாப்பேட்டை கோர்ட்டிலும் சரண் அடைந்தனர்.
இதையடுத்து தாளாளர் வாசுகியை போலீசார் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலூர் சிறையில் அடைத்தனர். பின்னர் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி கோர்ட்டு உத்தரவின்படி வாசுகியை சின்னசேலம் போலீசார், 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர்.
இதனிடையே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த போலீஸ் டி.ஜி.பி. அசோக்குமார் உத்தரவிட்டார். அதன்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று இந்த வழக்கின் விசாரணையை தொடங்கினார்கள்.
சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நாகஜோதி, விழுப்புரம் வண்டிமேடு பூப்பால வீதியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வந்தார்.
அவரிடம் கள்ளக்குறிச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு மதிவாணன், சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் மாணவிகள் இறந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட சில ஆவணங்களை தாக்கல் செய்தனர்.
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு நாகஜோதி கள்ளக்குறிச்சிக்கு சென்றார். மாஜிஸ்திரேட்டு தமிழ்ச்செல்வியிடம் வழக்கு சம்பந்தமாக ஆலோசனை நடத்தினார்.
அதன் பிறகு சின்னசேலம் அருகே மாணவிகள் படித்த சித்த மருத்துவ கல்லூரிக்கு சென்றார். கல்லூரிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு இருந்தது. எனவே, கல்லூரி கட்டிடத்தை சுற்றி பார்த்தார். கல்லூரி அருகே வசிப்பவர்களிடம் கல்லூரி குறித்து விசாரணை நடத்தினார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அவரிடம் கல்லூரி குறித்து பல்வேறு தகவல்களை கூறினார்கள். இந்த கல்லூரியில் எப்போதும் ஏதாவது பிரச்சினைகள் நடந்து கொண்டே இருக்கும்.
இது கல்லூரி மாதிரி செயல் படவில்லை. மாணவ– மாணவிகளை கட்டிட தொழிலாளர்களாகவும் பயன்படுத்தினார்கள் மாணவ – மாணவிகளை சித்ரவதை செய்தார்கள். உள்ளே என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை என்று கூறினார்கள்.
பின்னர் கல்லூரி அருகே மாணவிகள் பிணமாக கிடந்த விவசாய கிணற்றை நாகஜோதி பார்வையிட்டார். அந்த பகுதியில் குடியிருந்தவர்களிடம் சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தார். கிணற்றின் அருகே கண்டெடுக்கப்பட்ட தடயங்கள் குறித்தும் விசாரணை நடத்தினார்.
கிணற்றை குத்தகைக்கு எடுத்திருந்தவரிடமும் மாணவிகள் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து முதன் முதலாக தகவல் தெரிவித்தவரிடமும் விசாரணை நடத்தினார். அந்த பகுதியை சேர்ந்த ஊராட்சிமன்ற துணை தலைவரிடமும் விசாரணை நடைபெற்றது.
பின்னர் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜராகி நீதிபதி சுபா அன்புமணியிடம், 3 மாணவிகள் இறந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தனர்.
கல்லூரி நிர்வாகத்தினரின் சித்ரவதை தாங்காமல் 3 மாணவிகள் பலியானார்களா? என்பது குறித்து விசாரிக்க கல்லூரி தாளாளர் வாசுகியை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக நாளை (திங்கட்கிழமை) விழுப்புரம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளார்கள்.
கள்ளக்குறிச்சி மகளிர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டிருந்த வாசுகி நேற்று மீண்டும் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டார். பின்னர் நீதிபதி உத்தரவின்படி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
நாளை காலை விழுப்புரம் கோர்ட்டில் வாசுகி ஆஜர்படுத்தப்படுகிறார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினால் அவர்களிடம் வாசுகி ஒப்படைக்கப்படுவார். போலீஸ் காவலில் வாசுகியிடம் விசாரித்தால் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தனக்கு எதிராக சதி செய்து வருகிறார் என்று ஏற்கனவே வாசுகி குற்றம் சாட்டினார். இது தொடர்பாகவும் உண்மை நிலை தெரிய வரும்.
விசாரணை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறியதாவது:–
சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. கல்லூரி தாளாளர் வாசுகி மற்றும் கல்லூரி ஆதரவாளர் வெங்கடேசனை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே 3 மாணவிகளின் இறப்புக்கு உண்மையான காரணம் என்ன என்பது தெரிய வரும். அவர்கள் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம்.
கல்லூரி மாணவிகள் 3 பேர் சாவு தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்க விரும்பினால் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஏசுபாதத்தின் செல்போன் எண் 9498183909–க்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Average Rating