மலேசியத் தமிழர்கள் மீதான அடக்குமுறை – அமெரிக்கா கவலை

Read Time:4 Minute, 24 Second

மலேசியாவில் தமிழர்கள் மீதான அடக்குமுறை நடவடிக்கைக்கு அமெரிக்கா அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளது. மலேசியாவில் மலாய் இனத்தவர்களுக்கு சமமாக தாங்களும் நடத்தப்பட வேண்டும், சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மலேசதியத் தமிழர்கள் முன்வைத்துள்ளனர். இதுதொடர்பான முறையில் போராடி வருகின்றனர். ஆனால் மலேசிய அரசு தமிழர்கள் மீது அடக்குமுறை நடவடிக்கைகளை ஏவி விட்டுள்ளது. தமிழர்களைக் கைது செய்து அவர்கள் மீது கொலை முயற்சி, தேச துரோக வழக்குகளைப் போட்டு வருகிறது. இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழுவின் சட்ட ஆலோசகரான வக்கீல் உதயக்குமார் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மலேசிய அரசின் நடவடிக்கைக்கு அமெரிக்க அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது. இது பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாகும் என்று அது தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நான்சி பெக் கூறுகையில், மலேசியாவில் வாழும் அனைவருக்கும் பேச்சு சுதந்திரமும், அமைதியான முறையில் கூடி தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம்.

எந்த நாட்டினராக இருந்தாலும் அவர்களின் பேச்சுரிமையை யாரும் மறுக்க முடியாது. அமைதியான முறையில் கூடி தங்களது கருத்துக்களைத் தெரிவிப்பதையும் தடுக்கக் கூடாது.

மலேசியாவில் அமைதியான முறையில் கூடி கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு மலேசிய அரசு விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகள் குறித்து அமெரிக்கா ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளது.

மலேசியாவில் அமைதியான முறையில் கூடி கருத்துக்களை வெளியிட காவல்துறை அனுமதி பெற வேண்டும் என்று அந்நாட்டுச் சட்டம் கூறுகிறது. ஆனால் சில அரசியல் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் தலையீட்டின் பேரில், அவர்களுக்கு சாதகமானவர்களுக்கு மட்டும் இவை வழங்கப்படுவதாக அமெரிக்க மனித உரிமை அறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியினர், அரசை விமர்சிப்பவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோருக்கு இந்த அனுமதி வழங்கப்படுவதில்லை என்றார் பெக்.

மலேசியத் தமிழர்களுக்கு ஆதரவாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ள இந்த கருத்து ஹிண்ட்ராப் அமைப்பினருக்கு ஆறுதலைத் தந்துள்ளது.

சரமாரி கைதுகள்

இதற்கிடையே, ஹிண்ட்ராப் அமைப்பினரை மலேசிய அரசு வரிசையாக கைது செய்ய ஆரம்பித்துள்ளது. மட்டும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் தேச துரோக குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகின்றன.

மேலும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தைப் பிரயோகிக்கப் போவதாக பிரதமர் அப்துல்லா அகமது படாவி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் பெருமளவிலான தமிழர்கள் கைது செய்யப்படும் அபாயம் எழுந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மதுரை அருகே மனைவியின் கள்ள காதலன் மீது தாக்குதல்; கணவர் கைது
Next post 18 வயது மன்மத ராசாவுடன் ஓட்டம் பிடித்த 32 வயது மன்மத ராணி…!