எந்த நேரத்தில் நாம் சுயநலவாதிகளாக இருக்கலாம்…!!
சுயநலவாதிகளாக இருப்பது பெரும்பாலும் நல்லதல்ல. ஒருவன் சுயநலவாதியாக இருந்தால் அவனைச் சுற்றியிருப்பவர்கள் வெறுப்பாகத் தான் பார்ப்பார்கள்; அவனை ஒதுக்கவும் செய்வார்கள்.
ஆனாலும், அதையெல்லாம் கண்டுகொள்ளாதீர்கள். நாம் நம் வாழ்க்கையின் சில கட்டங்களில் சுயநலவாதிகளாக இருந்து தான் ஆக வேண்டும். நம்மையும் அறியாமல் சில சமயம் நாம் சுயநலவாதிகளாக இருந்திருப்போம்.
அதை எண்ணி வருத்தப்படாதீர்கள். என்னதான் இருந்தாலும் நமக்கு நாம் தான் முதலில் முக்கியம். நமக்கு என்ன தேவையோ அதை சுயநலவாதியாக இருந்தால் தான் சாதித்துக் கொள்ள முடியும். எப்போதெல்லாம் நாம் சுயநலவாதிகளாக இருந்து கொள்ளலாம் என்பது குறித்துப் பார்க்கலாமா?
நம்மை சரியாக நடத்தாத போது.
உங்களை யாரும் மதிக்கவில்லையா? சரியாக நடத்தவில்லையா? அவர்களிடம் கண்டிப்பாக ஒரு சுயநலவாதியாக நடந்து கொள்ளுங்கள். தப்பே இல்லை. கொஞ்சம் விட்டுக் கொடுத்தாலும் அவர்கள் நம்மை ஏறி மேய்ந்து விட்டுப் போய் விடுவார்கள். தேவைப்பட்டால், அவர்களுக்கு எதிராக ஒரு சிறு போராட்டமே நடத்துங்கள்.
கனவை நனவாக்க
உங்கள் கனவுகளுக்கு நீங்கள் தான் முதலாளி. அதை நனவாக்குவதும் உங்கள் கைகளில் தான் உள்ளது. அடுத்தவர்களிடம் போய் உங்கள் கனவுக்கு ஆலோசனை கேட்டுக் கொண்டு இருக்காதீர்கள். உங்கள் கனவு உங்களுக்கு முக்கியம் என்று நினைத்தால், அது கண்டிப்பாக நிறைவேறும் என்று தோன்றினால், யாரையும் கண்டு கொள்ளாதீர்கள். உங்கள் கனவு நனவாவது மட்டுமே முக்கியம். அப்போது சுயநலவாதியாகவே இருங்கள்!
உங்களுக்கு உண்மையாக
சில சமயம் சிலர் தங்களுடைய எதிர்பார்ப்பு பொய்யாகும் போது, உங்களுடைய சுயநலத்தை சாக்காகக் காரணம் காட்ட முயலுவார்கள். தளர்ந்து விடாதீர்கள். அந்த விஷயத்தில் நீங்கள் உங்களையே நம்புங்கள். உங்களுக்கு நீங்களே உண்மையாக நடந்து கொள்ளாவிட்டால் உங்கள் மகிழ்ச்சி தான் தொலைந்து போகும். உங்கள் நம்பிக்கையில் யாராவது கல்லைப் போட நினைத்தால், அவர்கள் தான் சுயநலவாதிகள்… நீங்களல்ல!
மற்றவர்கள் அதிகம் கேட்கும் போது
உங்களுடைய பொறுப்புணர்ச்சிகளைப் பற்றி மற்றவர்கள் அதிகம் உங்களிடம் பேசும் போது உஷாராக இருங்கள். அதுவும் நீங்கள் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் இந்தத் தாக்கம் அதிகமாகவே இருக்கும். அப்போது நீங்கள் முழுக்க முழுக்க சுயநலவாதிகளாகவே இருங்கள். உங்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுங்கள்.
உங்களை நீங்களே கவனித்துக் கொள்ள
உங்களை நீங்களே முதலில் கவனித்துக் கொள்ளவில்லை என்றால், மற்றவர்களை எப்படி கவனித்துக் கொள்ளப் போகிறீர்கள்? ‘தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும்’ என்ற பழமொழிக்கேற்ப முதலில் உங்கள் நலனைக் கவனியுங்கள். அது யாராக இருந்தாலும், உங்களுக்குப் பின்னாலேயே அடுத்தவர்களை வையுங்கள்.
அடுத்தவர்களுக்காக உங்கள் நேரமா?
உங்களுடைய பொன்னான நேரத்தை அடுத்தவர்களுக்காக எப்போதும் ஒதுக்க வேண்டாம். யார், என்ன கெஞ்சினாலும் சரி… உங்களுக்கான நேரத்தை அவர்களுக்கு ஒதுக்கி விடாதீர்கள். கூசாமல் ‘நோ’ சொல்லி விடுங்கள். இல்லையென்றால், உங்களைத் தங்கள் கால்களுக்கு அடியில் மிதித்துப் போட்டு விட்டு, அவர்கள் போய்க் கொண்டே இருப்பார்கள்.
முக்கியத்துவங்கள்
நிறைய விஷயங்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க நினைத்திருப்பீர்கள். அவைகளை சரியான முறையில் ஒழுங்குபடுத்தி வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதாவது அவசியமில்லை என்றால் உடனே தூக்கி எறிந்து விடுங்கள். உறவினருடன் தேவையில்லாமல் அரட்டை அடிக்கிறோமோ என்று கொஞ்சம் உணர்ந்தீர்கள் என்றாலும், அதற்கு மேலும் அங்கே நிற்க வேண்டாம்.
Average Rating