3 நாட்களாக மரண போராட்டம் 60 அடி ஆழ குழிக்குள் விழுந்த 6 வயது சிறுவன் உயிரோடு மீட்பு
அரியானாவில், 60 அடி ஆழமுள்ள குழிக்குள் தவறி விழுந்த 6 வயது சிறுவன், 3 நாள் மரண போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டான். அரியானா மாநிலம், சகாதாபாத் மாவட்டத்தில் உள்ளது ஹால்தேரி. இக்கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்சந்தர். விவசாயத் தொழிலாளி. இவரது மனைவி கரம்ஜீத். இவர்கள் மகன் பிரின்ஸ் (வயது 6). சிறுவன் பிரின்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் அக்கம்பக்கத்தில் உள்ள சிறுவர்களுடன் சேர்ந்து வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அந்தப் பகுதியில் சில நாட்களுக்கு முன்புதான் 60 அடி ஆழத்துக்கு ஆழ்துளை கிணறு ஒன்று போட்டிருந்தனர். ஆனால் கிணற்றை தோண்டியவர்கள் அதை மூடாமல் அப்படியே விட்டு விட்டுச் சென்று விட்டனர்.
இந்நிலையில் ஆழ்துளை கிணற்றின் அருகே விளையாடிய சிறுவன் பிரின்ஸ், திறந்திருந்த குழிக்குள் தவறி விழுந்து விட்டான். இதுபற்றி அறிந்ததும் அவனது பெற்றோரும், கிராம மக்களும் பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர். அவர்கள் சிறுவனை மீட்க முதலில் ஒரு கயிறு ஒன்றை ஆழ்துளை கிணற்றுக்குள் விட்டனர். ஆனால் சிறுவன் அக்கயிற்றை பிடிக்க முயன்ற போது, அது நழுவி விட்டது. இதில் அவன் மேலும் அதிக ஆழத்தில் விழுந்தான். இதனால் கிராம மக்கள் செய்வதறியாது திகைத்தனர்.
இந்நிலையில் சிறுவன் பிரின்ஸ் குழிக்குள் விழுந்த தகவல் அரியானா முதல்வர் ஹூடாவை எட்டியது. உடனே சிறுவனை உயிருடன் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ஒட்டுமொத்த அரியானா மாநில அரசும் சிறுவனை உயிருடன் மீட்கும் பணியில் முழு மூச்சுடன் இறங்கியது. குருசேத்திரம் உதவி கமிஷனர் டி.கே.சர்மா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சஞ்சய் குமார் மற்றும் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஹால்தேரி கிராமத்துக்கு விரைந்து வந்தனர்.
சிறுவன் விழுந்த குழியின் அகலம் வெறும் 16 அங்குலம் ஆகும். இதனால் அதே குழியின் வழியாக சிறுவனை வெளியில் எடுப்பது நடக்காத காரியமாக இருந்தது. இதைத் தொடர்ந்து அம்பாலாவில் உள்ள ராணுவ என்ஜினீயர்களுக்கு தகவல் தரப்பட்டது. உடனே அங்கிருந்து கலோனல் எஸ்.கே.விதார்த்தி தலைமையில் என்ஜினீயர்கள் விரைந்து வந்தனர். சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர் பிரவீன் கார்க் தலைமையில் ஒரு மருத்துவக் குழுவினரும் தேவையான கருவிகளுடன் அங்கு வந்து முகாமிட்டனர். ஆம்புலன்சு வாகனம் ஒன்றும் தயார் நிலையில் வைக்கப்பட்டது.
இந்நிலையில் சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க முதலில் குழாய் வழியாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறுவனை உயிருடன் மீட்க என்ஜினீயர்கள் விïகம் வகுத்தனர். அதிர்ஷ்டவசமாக சிறுவன் குழிக்குள் விழுந்த இடத்தில் இருந்து 10 அடி தூரத்தில் ஒரு கிணறு பயன்படுத்தாமல் கிடந்தது. இதையடுத்து அந்தக் கிணற்றில் குழி தோண்டி, அதன்வழியாக சிறுவன் சிக்கி இருக்கும் ஆழ்துளை கிணற்றுக்கு சுரங்கம் அமைத்து, அதன் வழியாக சிறுவனை மீட்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கிணற்றில் குழி தோண்டும் பணி உடனடியாக தொடங்கியது. வெட்டி போட்ட மண் மற்றும் சகதி கிரேன் மூலம் உடனுக்குடன் அகற்றப்பட்டது.
இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு புறம் குழிக்குள் உள்ள சிறுவனின் நிலையை அறிய ஒரு சிறிய காமிராவை உள்ளே அனுப்பினர். அதில் சிறுவன் குழிக்குள் உட்கார்ந்த நிலையில் உயிருடன் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவனுக்கு பிஸ்கட், சாக்லேட், தண்ணீர் மற்றும் குளுக்கோஸ், டீ மற்றும் உணவு ஆகியவை அவ்வப்போது அனுப்பப்பட்டன. அவற்றை சிறுவன் வாங்கிச் சாப்பிட்டான். இக்காட்சி காமிராவில் தெரிந்தது. பின்னர் சீரான இடைவெளியில் ஆக்ஸிஜன் மற்றும் உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டன.
எனினும் நேற்றுமுன்தினம் இரவில் சிறுவனிடம் எந்த அசைவும் இல்லாததால் மீட்பு குழு கவலை அடைந்தது. உடனே சிறுவனின் பெற்றோரும், நெருங்கிய உறவினர்களும் குழி வழியாக சிறுவனுக்கு தைரியம் ஊட்டினர். இதையடுத்து சிறுவன் பதட்டம் அடையாமல் பதில் அளிக்கத் தொடங்கினான். இதனால் நிம்மதி அடைந்த ராணுவத்தினர் மீட்புப் பணியை முடுக்கி விட்டனர். ஆனால் மேலும் ஒரு சோதனையாக இரவு நேரத்தில் அங்கு மழை பெய்தது. இதனால் குழிதோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டன. பின்னர் நேற்று காலையில் பணிகள் மீண்டும் தொடங்கின. குழிக்குள் இருக்கும் சிறுவன் பயப்படாமல் இருப்பதற்காக காமிராவில் ஒரு சிறிய மின்விளக்கையும் இணைத்து உள்ளே அனுப்பப்பட்டது. பெற்றோரும், உறவினர்களும் அவ்வப்போது சிறுவனுடன் பேசி தைரியப்படுத்தினர்.
இந்நிலையில் மீட்பு பணியை பார்க்க சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். உடனே போலீசார் அந்த இடத்தைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்தனர். சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒருநிமிடம் கூட அங்குமிங்கும் அசையவில்லை. அவர்கள் அங்கேயே காத்துக் கிடந்தனர். ஹால்தேரி மற்றும் அக்கம்பக்கத்தைச் சேர்ந்த சீக்கிய குழு, இலவச உணவு தயாரித்து, மீட்புக் குழுவினருக்கும், அங்கிருந்த பொதுமக்களுக்கும் வழங்கியது.
அரியானா மாநில முதல்-மந்திரி ஹூடா ஹால்தேரிக்கு நேற்று விரைந்து வந்தார். சிறுவன் விழுந்த குழியை பார்வையிட்ட அவர், மீட்புப் பணிகள் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், சிறுவனை மீட்பதற்காக அதிநவீன கருவிகள் மும்பையில் இருந்து விமானப்படை மூலம் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். தற்போது சிறுவனை மீட்பதுதான் முக்கியமான விஷயம். குழியை மூடாமல் அலட்சியமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றியெல்லாம் பிறகு பார்க்கலாம். சிறுவனை மீட்க லண்டன் மற்றும் ஹாலந்தில் உள்ள நிபுணர்களுடன் தொடர்பு கொண்டுள்ளோம். இங்குள்ள நிலைமையை விளக்கி, அவர்களின் ஆலோசனைகளை கேட்டு வருகிறோம் என்று தெரிவித்தார். குருசேத்திரம் எம்.பி.யும், பிரபல தொழிலதிபருமான நவீன் ஜிண்டால், உள்ளூர் எம்.எல்.ஏ. கே.எல்.சர்மா ஆகியோரும் ஹால்தேரிக்கு வந்து அதிகாரிகளிடம் மீட்புப் பணி பற்றி கேட்டறிந்தனர். பின்னர் அவர்கள் அங்கேயே முகாமிட்டு மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டனர்.
இதனிடையே சிறுவன் பிரின்ஸ் பற்றிய செய்தி நாடு முழுவதும் பரவியது. சிறுவனுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் அளிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். சிறுவனை உயிருடனும், ஆரோக்கியத்துடன் மீட்க பிரதமர் மன்மோகன்சிங் பிரார்த்தனை செய்ததாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி அரியானா முதல்வர் ஹூடாவை தொடர்பு கொண்டு மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் சிறுவன் பிரின்சை உயிருடன் மீட்டு அவனது தாயாரிடம் ஒப்படைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு உத்தரவிட்டார்.
சிறுவன் பிரின்சுக்காக மும்பை, கொல்கத்தா, அமிர்தசரஸ் உள்பட நாடு முழுவதும் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் பிரார்த்தனைகள் நடைபெற்றன. சென்னையிலும் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில் மத வேறுபாடின்றி ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நவீன கருவிகள்
இந்நிலையில் சிறுவன் பிரின்சை உயிருடன் மீட்க மும்பை தீயணைப்பு படையினரின் உதவியை அரியானா அரசு கோரியது. இதைத் தொடர்ந்து மண்டல துணை தீயணைப்பு அதிகாரி பிரபாத் ரகன்தாலே என்பவர் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் ஹரியானாவுக்கு விமானம் மூலம் விரைந்தனர். (முன்பு குஜராத் மாநிலத்தில் இதேப் போன்று 200 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் ஒன்றரை வயது சிறுவன் ஒருவன் தவறி விழுந்த போது, அவனை இந்தக் குழுவினர்தான் உயிருடன் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது) இவர்கள் சிறுவனை மீட்க நாலரை டன் எடையுள்ள துளையிடும் கருவிகள், மண்ணை வெட்டும் உபகரணங்கள், கயிறு உள்ளிட்ட அனைத்தையும் விமானத்திலேயே கொண்டு வந்தனர். இரண்டரை மணி நேர பயணத்துக்கு இக்குழுவினர் ஹால்தேரிக்கு வந்து சேர்ந்தனர்.
சுரங்கம் அமைத்தனர்
உடனே அவர்களின் துணையுடன் ராணுவ என்ஜினீயர்கள் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். பிரிகேடியர் ஜே.மான் என்பவர் மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து நடத்தினார். இதனால் மீட்புப் பணி வேகம் பிடித்தது. முதலில் ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் இருந்த ஆழம் வரை, கிணற்றில் குழி தோண்டப்பட்டது. பின்னர் அங்கிருந்து சிறுவன் சிக்கிய ஆழ்துளை கிணற்றுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி மும்முரமாக நடந்தது. முதல்-மந்திரி ஹூடா மீட்புப் பணிகளை நேரடியாக மேற்பார்வையிட்டார். கவர்னர் கித்வாயும் அங்கு வந்தார்.
குழிக்குள் சிறுவன் இருந்த இடத்துக்கு கீழே உள்ள மண் பகுதி மிகவும் மென்மையாக இருந்ததால், சுரங்கம் தோண்டும் போது ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடும் வாய்ப்பு இருப்பதை நிபுணர்கள் அறிந்தனர். இதனால் சுரங்கம் அமைக்கும் பணி மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்தது. இப்பணி நேற்று இரவு 7 மணி அளவில் முடிந்தது.
வெற்றிகரமாக மீட்பு
இதைத் தொடர்ந்து மீட்புக் குழுவைச் சேர்ந்த ராணுவ வீரர் நேற்று இரவு 7.15 மணி அளவில் சுரங்கம் மூலம் சிறுவன் இருக்கும் இடத்தை அடைந்தார். உடனே அவரது உதவியுடன் சிறுவன் சுரங்கம் வழியாக மெதுவாக தவழ்ந்தபடி வெளியே வந்தான்.
இதையடுத்து மருத்துவர்கள் குழு உள்ளே இறங்கி சிறுவனின் உடல்நிலையை சோதித்தது. பின்னர் அவனுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின் அவர்கள் ஒவ்வொருவராக வெளியே வந்தனர்.
இதைத் தொடர்ந்து இரவு 7.50 மணி அளவில் ராணுவ வீரர் ஒருவர், சிறுவனை வெள்ளை நிறத் துணியால் சுற்றி நெஞ்சோடு அணைத்தபடி வெளியே கொண்டு வந்தார். 50 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு வெளியே வந்த சிறுவன் பிரின்ஸ் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தான். சிறுவனை உயிருடன் பார்த்ததும், அங்கு கூடியிருந்த ராணுவத்தினர், அதிகாரிகள், பொதுமக்கள் கைத்தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
தாய்-தந்தை கண்ணீர்
மீட்கப்பட்ட சிறுவனை ராணுவத்தினர் அவனது தாய்-தந்தையிடம் ஒப்படைத்தனர். ஆழ்துளை கிணற்றில் சிறுவன் விழுந்தது முதல் எங்கும் நகராமல் அந்த இடத்திலேயே 2 நாளாக தவம் கிடந்த அவர்கள் மகனை உச்சி முகர்ந்து வாரி அணைத்து ஆனந்த கண்ணீர் வடித்தனர். அப்போது அவனது தந்தை ராம்சந்தர், கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினார். பின்னர் மீட்புக் குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார்.