துர்க்கை அம்மன் கோவில் நகைகளை கொள்ளையடித்த கிட்டு..!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 58) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!
திருக்கோணமலையில் கன்னியா பகுதியில் இராணுவத்தினர் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.
வாகனத் தொடர்களில் முப்பது இராணுவத்தினர்வரை பயணம் செய்து கொண்டிருந்தனர்.
திடீர் என்று கண்ணிவெடிகள் முழங்கத் தொடங்கின.
பின்னால் வந்த வாகனங்களில் இருந்த இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தபடி பின்வாங்கிச் சென்றனர்.
கண்ணிவெடியில் சிக்கி 9 இராணுவத்தினர் வரை பலியானார்கள். வர்ணகுலசூரியா, தென்னகோன், தயானந்த, கொல்மன, திலகரட்ண, ரணவீர, புஞ்சிநிலமே, பியதாச, விஜித்தா ஆகியோரது பெயர்கள் பலியான இராணுவத்தினர் பட்டியலில் வெளியாகியிருந்தன.
இத்தாக்குதல் 28.3.86ல் நடைபெற்றது. திருமலை மாவட்ட புலிகளின் பொறுப்பாளர்களில் ஒருவரான புலேந்தி அம்மான் தலைமையில் மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டது.
31.3.86 அன்று அதிகாலையில் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சென்று கொண்டிருந்தனர்.
எதிரே வந்து கொணடிருந்த இராணுவத்தினர் அவர்களைக் கண்டுவிட்டனர்.
தப்பி ஓடினால் இராணுவத்தினர் சரமாரியாகச் சுடுவார்கள். வேறு வழியில்லை என்பதால் புலிகளும் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய ஆரம்பித்தனர்.
இராணுவத்தினர் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை.
திடீர் துப்பாக்கிப் பிரயோகத்தினால் அதிர்ச்சியடைந்து விட்டனர்.
சுதாகரித்துக் கொண்டு பதிலடியில் இறங்குவதற்கிடையில் இராணுவத்தினரின் தரப்பில் ஐந்துபேர் வரை பலியானார்கள். புலிகள் தரப்பில் எதுவித சேதமும் ஏற்படவில்லை.
கறுப்பு உடை
பாகிஸ்தானில் இலங்கை இராணுவத்தினருக்கு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் விஷேட பயிற்சி வழங்கப்பட்டது.
அவ்வாறு பயிற்சி பெற்று வந்த இராணுவத்தினருக்கு கறுப்பு உடை கொடுக்கப்பட்டது.
கறுப்பு உடை அணிந்த இராணுவத்தினர் மாங்குளம்-கொக்காவில் பகுதிகளுக்கு இடையே புலிகளது தாக்குதலை எதிர்கொண்டனர்.
2.4.86 அதிகாலையில் புலிகளது அணியொன்று பதுங்கியிருந்து அத்தாக்குதலைத் தொடுத்தது.
அதிகாலை நேரம் என்பதால் இராணுவத்தினர் பலத்த தாக்குதலை எதிர்பார்த்திருக்கவில்லை. அலட்சிய மனோபாவத்தோடு ரோந்தில் ஈடுபட்டனர்.
ஆர்.பி.ஜி ரொக்கட் லோஞ்சர், ஏ.கே. 47 போன்ற ஆயுதங்களால் புலிகள் தாக்குதல் நடத்தினார்கள்.
இரண்டாவது லெப்ரினன்ட் எம்.ஏ.எம்.ஜி.மல்லவாராய்ச்சி, கோப்ரல் பியதாசா, கோப்ரல் செனரத் பண்டா, லான்ஸ் கோப்ரல் கருணாதிலக உட்பட ஒன்பது இராணுவத்தினர் பலியானார்கள்.
இராணுவத்தினரிடமிருந்து வு.56-1, ரவைக்கூடுகள்-5, மோட்டார் n~ல்-2, ஏ.கே.ரவைகள்-125 ஆகியவை புலிகளால் கைப்பற்றப்பட்டன.
இத்தாக்குதல் மாத்தையாவின் வழிநடாத்தலின் கீழ் நடத்தப்பட்டது. புலிகள் தரப்பில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
துப்பாக்கிச் சமர்
5.4.86 சனிக்கிழமை, மட்டக்களப்பு கரடியனாற்றில் புலிகளது கெரில்லா அணியொன்று காத்திருந்தது.
கரடியனாறு வழியாக இராணுவத்தினர் தொடர்வண்டிகளில் ரோந்துசெல்வது வழக்கம்.
காலையிலிருந்து புலிகளது அணி காத்திருந்தது.
நண்பகல் 12 மணியாகியும் இராணுவத்தினர் ரோந்து வருவதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை.
பிற்பகல் ஒரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது, தூரத்தில் ஒரு புள்ளியாக வாகனம் ஒன்று தெரிந்தது. ‘வருகிறார்கள்’ என்று ஊகித்து தயாராக காத்திருநடதார்கள்.
அவர்கள் காத்திருப்பது தெரியாமல் தொடர் வாகனங்களில் வேகமாக வந்து கொண்டிருந்தனர் இராணுவத்தினர்.
வாகனத் தொடரின் முதல் வாகனமாக வந்த கவசவண்டி தமது எல்லைக்குள் வந்ததும் புலிகளது ரொக்கட் லொஞ்சர் பறந்தது.
கவச வண்டி சேதமாகி நகராமல் நின்றுவிட்டது.
துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் கெரில்லாக்கள, டிரக் வண்டிகளில் வந்த இராணுவத்தினர் கீழே குதித்து டிரக் மறைவில் நின்று துப்பாக்கிப் பிரயோகம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
சுமார் இரண்டு மணிநேரம் துப்பாக்கிச் சமர் நடைபெற்றது.
இராணுவத்தினர் தரப்பில் ஏழுபேர் பலியானதாக ஞாபகம், புலிகள தரப்பில் ஒருவர் பலியானார்.
வீடுகளில் கொள்ளைகள்
86ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ் குடாநாட்டில் தனியார் வீடுகளில் பரவலான கொள்ளைகள் நடைபெறத் தொடங்கின.
யாழ்ப்பாணத்தில் இருந்த பிரபல பணக்காரர்கள், வர்த்தகர்கள் ஆகியோரது வீடுகள்தான் குறிவைத்து கொள்ளையிடப்பட்டன.
நவீனரக ஆயுதங்களோடு கொள்ளையர்கள் தோன்றியதால் அவர்கள் தனிப்பட்ட நபர்கள் அல்ல: இயக்கங்கள்தான் கொள்ளைகளுக்குப் பின்னணியில் நிற்கின்றன என்று மக்கள் புரிந்து கொண்டனர்.
எந்த இயக்கம் கொள்ளையில் ஈடுபடுகிறது என்பது தெரியாமல்போனதால் மக்கள் மத்தியில் இருந்து கொள்ளைகளைக் கண்டித்து பொதுவான கோரிக்கைகள் விடப்பட்டன.
கொள்ளையர்களை பிடித்துத் தாருங்கள் என்று கேட்டார்கள் மக்கள்.
நாங்களும் அவர்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம் என்றன இயக்கங்கள்.
வெறுத்துப்போன மக்கள் வீதித்தடைகளை போட்டார்கள். கொள்ளையர்களை பிடித்துத் தந்தால்தான் வீதியைத் திறப்போம் என்று எதிர்ப்புக் காட்டினார்கள்.
சகல இயக்கங்களும் தனியார் வீடுகளில் நடைபெற்ற கொள்ளைகளைக் கண்டித்து பத்திரிகைகளில் அறிக்கை விட்டன.
யாழ் நடந்த இரு கொள்ளைகள்
86ல் நடைபெற்ற இரண்டு கொள்ளைகள்தான் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியிருந்தன.
ஒன்று யாழ்ப்பாணம் பொருமாள் கோவில் கொள்ளை. இன்னொன்று தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவில் கொள்ளை.
பெருமாள் கோவில் கொள்ளையில் ஈடுபட்டது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். மக்கள் விடுதலைப் படையின் யாழ் மாவட்ட தொடர்பாளராக இருந்தவர் கபூர் என்று அழைக்கப்பட்ட பாலா.
அவரது தலைமையில்தான் பெருமாள் கோவில் கொள்ளை நடத்தப்பட்டது.
கொள்ளை நடவடிக்கைக்காக வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது பொருமாள் கோவிலுக்கு அருகே ரெலோ உறுப்பினர்கள் அந்த வாகனத்தை மறித்தனர்.
ஒவ்வொரு இயக்கமும் வீதிப்பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுவது வழக்கம். வீதியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த ரெலோ உறுப்பினர்தான் வாகனத்தை மறித்தார்.
“யார் நீங்கள்?” என்று அந்த உறுப்பினர் கேட்டார். தாமதம் இல்லாமல் வேனில் இருந்தவர்கள் சொன்னார்கள்: “நாங்கள் எல்.ரி.ரி.ஈ.”
வாகனத்தை மறித்தவர் வழிவிட்டு விலகிக் கொண்டார்.
எந்தவொரு இயக்க வாகனம் என்றாலும் மற்றொரு இயக்கம் சோதனையிடவோ, தடுக்கவோ முற்படுவதில்லை.
யாழ் நகருக்குள் பெருமாள் கோவில் இருப்பதால் அப்பாதை வழியாக இயக்க வாகனங்கள் சென்று வருவது வழக்கம்.
அப்படியிருந்தும் இரவோடு இரவாக பெருமாள் கோவில் நகைகள் சுத்தமாக துடைத்து எடுக்கப்பட்டன.
பொருமாள் கோவில்
விசாரிக்க வந்தவர்கள்
மறுநாள் காலையில் பொருமாள் கோவில் கொள்ளைச் சம்பவம் காட்டுத்தீபோலப் பரவிவிட்டது.
இயக்கங்கள் கோவிலில் கைவைக்கத் துணிவார்களா? என்றும் பலர் சந்தேகப்பட்டனர்.
கொள்ளைபற்றி விசாரிக்கவும், என்ன நடந்தது என்று அறியவும் பொருமாள் கோவிலுக்கு வந்தனர் இயக்கங்களின் முக்கியஸ்தர்கள்.
விசாரிக்க வந்த இயக்கங்களில் ஒன்று ஈ.பி.ஆர்.எல்.எஃப். கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கிறோம். ஏதாவது தகவல் கிடைத்தால் எமக்குத் தெரியப்படுத்துங்கள் என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப். சார்பாகவும் பெருமாள் கோவில் நிர்வாகத்திடம் சொல்லப்பட்டது.
முதல்நாள் இரவு தன்னால் மறிக்கப்பட்ட வேன்தான் கொள்ளையில் சம்பந்தப்பட்டது என்று புரிந்து கொண்ட ரெலோ உறுப்பினர் விசியத்தை அவிழ்த்து விட்டார்.
புலிகள்தான் கொள்ளை நடத்தியிருக்க வேண்டும். அவர்களது வாகனம்தான் சந்தேகத்திற்கு இடமாக நடமாடியது என்று ரெலோ முலம் செய்தி பரவிவிட்டது.
யாரோ தமது பெயரைப் பாவித்து விட்டார்கள் என்று தெரிந்து புலிகளும் விசாரணையில் இறங்கினர்.
அவர்களுக்கு ரெலோ மீதுதான் முதலில் சந்தேகம். பின்னர் விசாரித்துக் கொண்டு போனபோது தான் ஈ.பி.ஆர்.எல்.எஃப். தான் கைவரிசை காட்டியிருக்கிறது என்று ஓரளவு தெரிந்து கொண்டனர்.
எனினும், கிட்டு அதனை பெரிதுபடுத்த விரும்பவில்லை. நிரூபிக்கக்கூடிய ஆதாரமில்லாதது மட்டும் அதற்கு காரணமல்ல.
துர்க்கை அம்மன்
வேறு ஒரு காரணம் இருந்தது. அதுதான் துர்க்கை அம்மன் கோவில் கொள்ளை.
பொருமாள் கோவில் கொள்ளையை புலிகள் வெளிப்படுத்த நினைத்தால், துர்க்கை அம்மன் கோவில் கொள்ளையை ஈ.பி.ஆர்.எல்.எஃப். அம்பலப்படுத்திவிடும்.
புலிகள் உத்தரவாதம்.
தெல்லிப்பளையில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் கொள்ளை கிட்டுவின் தலைமையில்தான் நடந்தது.
புலிகள் இயக்கத்தின் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்கள் மட்டுமே பொறுக்கி எடுக்கப்பட்டு மிக இரகசியமாக நடத்தப்பட்ட கொள்ளை அது.
கிட்டு, திலீபன், அருணா ஆகியோர் முக்கிய பங்கு வகித்தார்கள்.
இரவோடு இரவாக, அப்போதைய மதிப்பில் 25இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட நகைகள் கொள்ளையிடப்பட்டன.
கொள்ளைச் செய்தியால் தெல்லிப்பளையில் மக்கள் கொதித்துப் போனார்கள்.
நகைகளைத் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று வீதித்தடைகளைப் போட்டு எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
வழக்கம்போல சகல இயக்கங்களும் சென்று விசாரணை நடத்தின. புலிகள் அமைப்பினரும் ‘கொள்ளையர்களை பிடித்தே தீருவோம்’ என்று உத்தரவாதம் வழங்கிவிட்டு வந்துவிட்டார்கள்.
புலிகள் இயக்க உறுப்பினர்கள் தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் என்பதால் கோவில் கொள்ளைகளில் அவர்கள் ஈடுபட மாட்டார்கள் என்று பொதுமக்களில் ஒரு சாரார் பேசிக்கொண்டனர்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பு கம்யூனிச சித்தாந்தம் கொண்ட அமைப்பு என்பதும், கடவுள் நம்பிக்கை அவர்களுக்கு கிடையாது என்றும் மக்களுக்கு தெரியும்.
எனவே-இரண்டு கொள்ளைகளையும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். செய்திருக்கலாம் என்று பரவலான பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியிருந்தன.
நல்லூரில் கண்
இதற்கிடையே யாழ்ப்பாணத்தில் பிரபலமானதும், வருமானம் கூடியதுமான நல்லூர் கந்தசாழிக் கோவில் மீதும் இயக்கங்களுக்கு ஒரு கண்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்கும், புலிகள் அமைப்புக்கும் இடையே யார் முந்திக்கொள்வது என்று இரகசியமாக ஒரு போட்டியே நடந்து கொண்டிருந்தது.
அதற்கடையே ரெலோ முந்திக் கொள்ள இருப்பதாக கிட்டுவுக்கு யார் மூலமோ தகவல் கிடைத்துவிட்டது.
நல்லூர் தேர் திருவிழாவுக்கு முதல்நாள் இரவு கொள்ளையை நடத்த ரெலோ திட்டமிட்டிருப்பதாக கிட்டுவுக்கு தெரிந்து விட்டது.
உடனே கிட்டு ஒரு காரியம் செய்தார். ‘நல்லூர் கோவிலுக்குள் குண்டு’ என்று ஒரு வாந்தியைப் பரப்பிவிட்டார். நினைத்தது போலவே வதந்தி காட்டுத் தீயாகப் பரவியது.
குண்டு இருக்கிறதா, இல்லையா என்று தெரிந்தால் தேர் திருவிழா நடத்தலாம்.
பக்தர்கள் கோவிலுக்கு வெளியே திரண்டு என்ன ஆகுமோ என்று பயந்து கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு வாகனம் வந்து நின்றது.
வாகனத்தில் இருந்து ஒரு பக்தர்போன்ற தோற்றத்தோடு கிட்ட இறங்கிவந்தார்.
கிட்டுவைக் கண்டதும் பக்தர்கள் முறையிட்டனர். “பயப்படாதீர்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று சொன்னார் கிட்டு.
கிட்டுவும் சிலரும் கோவிலுக்குள் சென்று தேடுதல் நடத்தினார்கள்.
வெளியே நின்றவர்களுக்கு ஒரே திக்.திக். எந்த நேரமும் வெடிச்சத்தம் கேட்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு.
உள்ளேயிருந்து வந்த கிட்டு சொன்னார்: “யாரோ புரளி கிளப்பிவிட்டார்கள். குண்டும் இல்லை, ஒன்றும் இல்லை.”
பக்தர்களுக்கு நிம்மதி. கிட்டுவுக்கு நன்றி சொல்லிக் கொண்டார்கள்.
அதன்பின்னர் கோவிலைச் சுற்றி வெளிவீதியில் கிட்டு அங்கப் பிரதட்சணம் செய்த காட்சியும் பக்தர்களின் நெஞ்சங்களை நெகிழச் செய்துவிட்டது.
கிட்டுவின் அங்கப்பிரதட்சணமும் கோவில் கொள்ளைகளோடு புலிகளை இணைத்துப் பேச முடியாதளவுக்கு செய்திருந்தது.
திருப்பி ஒப்படைப்பு
துர்க்கை அம்மன் கோவில் கொள்ளையை அடுத்து நடைபெற்ற சில சம்பவங்கள் புலிகள் இயக்கத் தலைமைக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டன.
கொள்ளையில் பங்கு கொண்ட உறுப்பினர்களில் சிலரும், ஏனைய உறுப்பினர்களும் படகில் தமிழகம் சென்றபோது கடற்படைத் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.
கொள்ளையில் பங்கு கொண்டவரான அருணா தமிழகம் சென்று திரும்பிவரும் போது படகு தாக்குதலுக்கு உள்ளானது. படகில் இருந்தவர்கள் பலியானார்கள். அருணா கைது செய்யப்பட்;டார்.
யாழ்ப்பாணத்திலிருந்து படகில் தமிழகம் புறப்பட்டார் திலீபன். படகை ஹெலிகொப்டர் ஒன்று தாழப்பறந்து துரத்தத் தொடங்கியது.
ஹெலிகொப்டரில் இருந்து கொடுக்கப்பட்ட தகவலையடுத்து கடற்படைப் படகுகளும் திலீபன் சென்ற படகை குறிவைத்து விரைந்தன.
படகு ஓட்டியின் சாமர்த்தியத்தால் படகு திரும்பி கரைக்கு விரைந்தது.
கடலில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களில் பலியானவர்கள் பலர் துர்க்கை அம்மன் கோவில் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற உண்மை கிட்டுவுக்கு உறுத்தலாகிவிட்டது.
திலீபன் தப்பியதும் மயிரிழையில் தான் அடுத்தது தனக்குத்தான் என்று நினைத்துக் விட்டார் கிட்டு.
தெய்வக் குற்றம்தான் துரத்துகிறது என்ற சந்தேகம் ஆழமாய்ப் பதிந்துவிட்டது.
கொள்ளை நடந்து பல மாதங்கள் ஆகிவிட்டபோதும் நகைகள் பத்திரமாக இருந்தன.
கிட்டு ஒரு முடிவுக்கு வந்து விட்டார்.
இரவோடு இரவாக துர்க்கை அம்மன் ஆலயத்துக்குள் கொண்டுபோய் நகைகளைப் போட்டுவிட்டு திரும்பிவந்து விட்டார்கள்.
விடிந்தபோது கோவில் நிர்வாகத்தினருக்கு பேராச்சரியம்.
“திருப்பி ஒப்படைத்தவர்களுக்கு நன்றி. அம்பாள் கருணை காட்டுவார்.” என்று ஒரு அறிக்கை விட்டது கோவில் நிர்வாகம்.
ஒரு சில நகைகளைத் தவிர மீதி அனைத்தும் அப்படியே இருந்தன.
ஒரு சில நகைகளைக் காணவில்லை என்ற விடயத்தைப் பற்றி கோவில் நிர்வாகம் வெளியே சொல்லவிரும்பவில்லை.
கிடைத்ததே பெரும் பாக்கியம். திருப்பி ஒப்படைக்கப்பட்டதே அம்பாளின் அருள் என்று பேசாதிருந்துவிட்டனர்.
உண்மையில் புலிகள் இயக்கத்தினரிடம் இருந்த காரணத்தால்தான் நகைகள் பத்திரமாக திருப்பி ஒப்படைக்கக் கூடியதாக இருந்தது என்பதும் உண்மைதான்.
Average Rating