ஜனாதிபதியின் கூற்றுக்கு கூட்டமைப்பு கடும் கண்டனம்…!!
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாகஇலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் போது வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்தப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமைக்கு எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கையும் ஏற்றுக்கொண்டு அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக உறுதிமொழி வழங்கியிருந்தது.
இவ்வாறு அரசாங்கம் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை ஒருபோதும் மீறமுடியாதென வலியுறுத்தியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அழுத்தங்களை வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை. அது குறித்த விசாரணைகள் முற்றிலும் உள்நாட்டு விசாரணையாகவே அமையுமென ஜனாதிபதி சிறிசேன தெரிவித்திருந்தார்.
இலங்கைப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வெளிநாட்டு நிபுணர்கள் தேவையில்லை. வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வரவும் ஒருபோதும் இணங்க மாட்டேன். எமது நாட்டு நீதித்துறையில் எமக்கு நம்பிக்கையுள்ளது.
வெளிநாடுகளில் அரசியலமைப்பு மனித உரிமைகள் போன்ற பலவேறு துறைகளில் நிபுணர்களாக இருக்கும் இலங்கையர்களை விசாரணைக்காக வரவழைக்கலாம். இவ்விடயத்தில் சர்வதேச தலையீட்டுக்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை என ஜனாதிபதி பிபிசிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் இக்கருத்துகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பகிரங்கப்படுத்துகையில்,ஐநா மனித உரிமைகள் பேரவையில் கடந்த வருடம் அக்டோபரில் இலங்கை அரசாங்கமும் ஏற்றுக்கொண்டு வாக்குறுதியளித்து நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானத்தில் விசாரணைப் பொறிமுறையை முன்னெடுக்கும் போது பொதுநலவாய, வெளிநாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்கள் பங்கேற்பதற்கான அவசியம் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி அதற்கு முரணான கருத்துகளை வெளிப்படுத்தியிருக்கின்றார். இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடுமையாக கண்டிக்கின்றது.
சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் ஒருபோதும் மீறமுடியாது. ஐநா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். விசாரணைகளை அதற்கேற்ற முறையில் முன்னெடுக்க வேண்டும்.
ஐநா தீர்மானத்தை முழுமையாக முன்னெடுப்பதற்கும், விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள் பங்கேற்று நீதியான விசாணை நடைபெறுவதற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து அழுத்தங்களை கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
Average Rating