துணை நடிகை-பெண் என்ஜினியர் கட்டிப் புரண்டு சண்டை
சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் டிஸ்கோ ஆடியபோது, ஒரு பெண் என்ஜீனியர் தனது காலை மிதித்து விட்டதால், கோபமடைந்த துணை நடிகை ஒருவர் அந்த பெண் என்ஜீனியருடன் குடுமி பிடி சண்டை போட்டார். இதுதொடர்பாக போலீஸார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை நகர நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்கள் உள்ளிட்டவற்றில் நள்ளிரவில் நடைபெறும் பேயாட்ட நடனங்கள், காவல்துறைக்கு பெரும் தலை இடியாக மாறி வருகிறது. இந்த நடனங்களில் ஆபாசம் அளவுக்கு அதிமாக உள்ளதாக புகார்கள் வருகின்றன. இது போதாதென்று, அவ்வப்போது பிரபல பெண்கள் அதிகமாக குடித்து விட்டு சண்டை போடுவதும் அதிகரித்து வருகிறது. இதற்காகவே இதுபோன்ற நடன நிகழ்ச்சிகள் நடைபெறும் ஹோட்டல்கள், கிளப்கள், உல்லாச ஓய்வு விடுதிகளை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில், துணை நடிகை ஒருவருக்கும், பெண் என்ஜீனியர் ஒருவருக்கும் இடையே கடும் கட்டிப்பிடி சண்டை நடந்துள்ளது. இந்த ஹோட்டலில் உள்ள பாரில் மது அருந்தி விட்டு பலரும் ஜோடி ஜோடியாக தங்களை மறந்த நிலையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். அதில் பிரபல துணை நடிகையும் ஒருவர். இவர் அடிக்கடி இதுபோன்ற ஆட்டங்களில் கலாட்டா செய்வதில் பிரபலமானவர்.
உல்லாச பானத்தை உள்ளே இறக்கி விட்டு, உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தார் துணை நடிகை. அவருக்கு அருகே கம்ப்யூட்டர் என்ஜீனியர் ஒருவர் தனது துணையுடன் ஆடிக் கொண்டிருந்தார். இருவருமே நல்ல மப்பில் இருந்துள்ளனர்.
அப்போது பெண் என்ஜீனியரின் கால், துணை நடிகையின் காலில் தெரியாமல் பட்டு விட்டது. அவ்வளவுதான் உக்கிரதாண்டவத்தை ஆரம்பித்து விட்டார் அந்த துணை நடிகை.
பெண் என்ஜீனியரின் தலை முடியைப் பிடித்து இழுத்து ஆவேசமாக சண்டை போட்டார். பதிலுக்கு அந்தப் பெண்ணும், துணை நடிகையின் தலை முடியைப் பிடித்து ஆய்ந்து விட்டார். இருவரும் கட்டி உருண்டு சண்டை போட்டனர்.
போதையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த திடீர் சண்டையைப் பார்த்ததும் மப்பு போய் விட்டது. மிரண்டு போய் சண்டையைப் பார்க்க ஆரம்பித்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் உள்ளே பாய்ந்து இரு பெண்களையும் பிரித்து விட்டனர்.
சண்டை அத்துடன் முடிந்தது என்று எல்லோரும் நினைத்தனர். ஆனால் சண்டையை முடித்து விட்டு வெளியே வந்த இருவரும் கார் பார்க்கிங் பகுதியில் மறுபடியும் கட்டி உருள ஆரம்பித்தனர்.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து இருவரையும் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றனர். இருவரும் போலீஸில் புகார் கொடுத்தனர். இருவரது புகார்களையும் வாங்கிக் கொண்ட போலீஸார், இருவருக்கும் போதை தெளியும் வரை காத்திருந்தனர்.
போதை தெளிந்த நிலையில் தாங்கள் சண்டை போட்டது தவறுதான், இனிமேல் இதுபோல நடக்காது என்று இருவரும் போலீஸில் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து இருவரையும் எச்சரித்த போலீஸார் இப்போது போங்கள், ஆனால் புகார் அப்படியேதான் இருக்கும். வழக்குப் பதிவு செய்துள்ளோம். இருவரும் சமாதானமாகப் போவதாக மீண்டும் தெரிவித்தால் புகாரை வாபஸ் பெற்றுக் கொள்ள அனுமதிப்போம் என்று கூறி இரு பெண்களையும் அனுப்பி வைத்தனர்.