சென்னையில் தி.மு.க. பிரமுகர் துப்பாக்கியால் சுடப்பட்ட வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது…!!
சென்னை மேற்கு சைதாப்பேட்டை, நாகப்பா கார்டன் பகுதியில் வசிப்பவர் ஜெகநாதன். தி.மு.க. பிரமுகரான இவர், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் செய்கிறார். இவர் கடந்த 11-ந் தேதி அன்று காலையில் ஸ்கூட்டரில் தனது வீட்டிலிருந்து சென்றார். அதே பகுதியில் உள்ள கருணாநிதி தெருவில் போகும்போது, 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் வழிமறித்து தாக்கினார்கள்.
ஜெகநாதன் துப்பாக்கியால் சுடப்பட்டார். காரில் வந்த 5 பேர், ஜெகநாதனை அரிவாளால் வெட்டினார்கள். படுகாயம் அடைந்த ஜெகநாதன் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். தலையில் அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால், அரிவாள் வெட்டு சரியாக தலையில் படவில்லை. மேலும் துப்பாக்கி குண்டும், குறி தவறி தோள்பட்டையில் பாய்ந்து விட்டது.
ஆபரேஷன் மூலம் குண்டு அகற்றப்பட்டது. ஜெகநாதன் உயிர் பிழைத்துக்கொண்டார். தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக குமரன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஜெகநாதன் துப்பாக்கியால் சுடப்பட்ட இந்த சம்பவம், சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்ய கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். இணை கமிஷனர் அருண், துணை கமிஷனர் கண்ணன் ஆகியோர் மேற்பார்வையில், சைதாப்பேட்டை உதவி கமிஷனர் தங்கராஜ், குமரன் நகர் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து, சம்பவம் நடந்த அன்று இரவே அரிஹரன், வினோத்குமார், சொரி சுரேஷ், அடையாறு கார்த்திக் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
பிரபல ரவுடி சி.டி.மணியின் ஆட்களான இவர்கள்தான், ஜெகநாதனை தாக்கியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ஜெகநாதனை துப்பாக்கியால் சுட்டது வினோத்குமார் என்று கண்டறியப்பட்டது. அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
ஜெகநாதனுக்கும், சென்னை வேளச்சேரியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பக்தா என்ற பத்மநாபனுக்கும் (வயது 48) ரியல் எஸ்டேட் தொழிலில் முன்பகை இருந்துள்ளது. அந்த பகையில், தனது கூட்டாளியான ரவுடி சி.டி.மணி மூலம், ஜெகநாதனை தீர்த்துக் கட்ட சதித்திட்டம் தீட்டி பத்மநாபன் செயல்பட்டுள்ளார்.
ஏற்கனவே ஒருமுறை சி.டி.மணி தனது ஆட்களுடன் சென்று ஜெகநாதனை துப்பாக்கியால் சுட்டுள்ளார். வெடிகுண்டும் வீசப்பட்டது. அப்போதும் ஜெகநாதன் தப்பி விட்டார். அந்த முயற்சி தோல்வியில் முடியவே 2-வது முறையாக இப்போதும் அவர் மீது சி.டி.மணியின் ஆட்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த முறையும் அதிர்ஷ்டவசமாக ஜெகநாதன் உயிர் தப்பி விட்டார்.
இந்த வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபர் பத்மநாபன் மற்றும் ஜாபர்கான்பேட்டை ரவுடி துறவி அருண், தியாகராயநகர் ரவுடி கேட் ராமு என்ற ராமமூர்த்தி ஆகிய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
குண்டர் சட்டத்தில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி சி.டி.மணி, சிறையில் இருந்தபடியே சதித்திட்டம் வகுத்துள்ளார். இதனால் அவரையும் இந்த வழக்கில் போலீசார் கைது செய்ய உள்ளனர். வக்கீல் ஒருவர் உள்ளிட்ட மேலும் 4 பேரை இந்த வழக்கில் தேடி வருவதாகவும் போலீசார் கூறினார்கள். மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகள் பயன்படுத்திய கார் மற்றும் 3 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Average Rating