இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க சர்வகட்சி பிரதிநிதிகள் குழு தீர்மானம்

Read Time:3 Minute, 29 Second

இன நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவினர் இவ்வாரம் கூடி முக்கிய தீர்மானங்களை மேற்கொண்டுள்ளனர். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் மற்றுமொரு முக்கிய கூட்டம் நாளை திங்கட்கிழமை அரசாங்க சமாதானச் செயலகத்தில் நடைபெறவுள்ளது. மத்திய அரசுக்கு வரையறுக்கப்படும் அதிகாரங்கள் தொடர்பில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவினர் கடந்த கூட்டத்தில் பெரும்பாலும் இணக்கம் கண்டுள்ள நிலையில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய அதிகாரங்கள் குறித்து நாளைய கூட்டத்தில் பிரதானமாக ஆராயப்படவுள்ளது. இதேவேளை, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவினர் இடைக்கால தீர்வுத் திட்டம் ஒன்றை அடுத்து வரும் வாரங்களில் ஜனாதிபதியிடம் கையளிப்பார்களெனக் குழுவுடன் தொடர்புடைய வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டன.

இவ்விடைக்கால தீர்வு யோசனையில் சர்ச்சைக்குரிய விடயங்களை மக்கள் தீர்ப்புக்கு விடுவது குறித்தும் யோசனை முன்வைக்கப்படுமென எதிபார்க்கப்படுகிறது.

சமஷ்டி மற்றும் ஒற்றையாட்சி என்ற சொற்பதங்கள் இடைக்கால தீர்வு யோசனையில் உள்ளடங்காதென அறிய வரும் நிலையில் அரசின் தன்மை குறித்து சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவினர் கடந்த ஒன்றரை வருடங்களாக எத்தகைய தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசின் தன்மை குறித்தும் மக்கள் தீர்ப்பினை அறியும் வாக்கெடுப்பு நடத்துவதற்கான யோசனைகள் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினர்கள் சிலர் ஆதரவு வெளியிட்டுள்ளனர். எனினும், இதற்கு சிங்கள கடும்போக்கு கட்சிகள் தமது கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் சிங்கள கடும் போக்கு கட்சிகளின் ஆதரவை வரவு- செலவு திட்ட வாக்கெடுப்பில் பெற வேண்டியுள்ள அரசாங்கம் வாக்களிப்பின் பின்னர் இடைக்காலத் தீர்வு யோசனையை வெளியிடுவதுடன் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தை இதன்மூலம் குறைக்கலாமென்ற எதிர்பார்ப்பில் உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இறந்துபோன பெண்ணின் சொத்து ஆள் மாறாட்டம் செய்து அபகரிப்பு பள்ளிக்கூட தாளாளர் கைது
Next post வங்கியில் கடன் வாங்கி தருவதாக 3 பேரிடம் ரூ. 3 லட்சம் மோசடி செய்ததாக புகார் கோர்ட்டு உத்தரவுபடி 4 பேர் மீது வழக்குப்பதிவு