பெஷாவர் தற்கொலைப்படை தாக்குதல்: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு…!!
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில், ஆப்கானிஸ்தான் எல்லையில் கைபர் பகுதி அமைந்துள்ளது. பழங்குடியினர் பெருந்திரளாக வாழ்கிற இந்த பகுதி, அடர்ந்த காடுகள் நிறைந்தது என்பதால் உள்நாட்டு தீவிரவாதிகளுக்கும், வெளிநாட்டு தீவிரவாதிகளுக்கும் சொர்க்கபுரியாக திகழ்ந்து வருகிறது.
அங்கு பதுங்கியுள்ள தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. குறிப்பாக அங்குள்ள டிரா பள்ளத்தாக்கு பகுதியில் இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஆனாலும் தீவிரவாதிகள் ஆதிக்கத்தை முற்றிலுமாக அங்கு கட்டப்படுத்த முடியவில்லை.
இந்த நிலையில் அங்கு கார்கானோ என்ற இடத்துக்கு அருகே ஜாம்ருத் பகுதியில் சந்தை, போலீஸ் சோதனை சாவடி ஆகியவை அமைந்துள்ள இடத்தில் நேற்று காசடார் படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதி ஒருவன் குண்டுகளை வெடிக்கச் செய்தான்.
இந்த தாக்குதலில் போலீசார் உள்பட 11 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
பலியானவர்களில் காசடார் படையின் உதவி லைன் அதிகாரி நவாப் ஷா, பழங்குடியினர் பத்திரிகை யூனியன் தலைவர் மகபூப் ஷா ஆகியோரும் அடங்குவார்கள். 7 வயது குழந்தை ஒன்றும், இதில் சிக்கி உயிரிழந்திருக்கிறது.
இந்த தாக்குதல் பற்றி கைபர் ஏஜென்சி போலீஸ் அதிகாரி சஹாப் அலி ஷா கூறுகையில், “தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் எந்த வகையிலான தாக்குதல் என்பதை உடனடியாக உறுதிபட கூற முடியவில்லை. இருப்பினும், இது தற்கொலைப்படை தாக்குதல் போன்று தோன்றுகிறது. இதில் 11 பேர் பலியாகி இருப்பது உறுதியாகி உள்ளது” என்றார்.
இந்த குண்டுவெடிப்பு தொடர்பான காட்சிகள், அங்குள்ள டெலிவிஷன் சேனல்களில் ஒளிபரப்பாகின. அந்த காட்சிகளில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததை காண முடிந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸ் படையினர், மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ்கள் மூலமாக அங்குள்ள ஹயாதாபாத் மருத்துவ வளாகத்துக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் ஒரு சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. பலியானவர்களின் உடல்களும் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அந்த மருத்துவ வளாகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த தாக்குதலுக்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.
குண்டுவெடிப்பு நடந்த இடம், போலீஸ் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்படுகிறது. தடயங்களும் சேகரிக்கப்படுகின்றன.
தாக்குதல் நடந்த பகுதியின் உள்ளாட்சி அதிகாரி முனிர் கான் கூறும்போது, “இரு சக்கர வாகனம் ஒன்றில் வெடிகுண்டுகளை ஏற்றி வந்த நபர், தனது வாகனத்தை காசடார் படையினர் சென்ற வாகனத்துடன் மோதச்செய்து, குண்டுகளை வெடிக்க வைத்தான்” என கூறினார்.
Average Rating