கழுத்தில் உள்ள கருமையை நீங்குவதற்கு…!!
சிலருக்கு கழுத்துப் பகுதியில் கருமையான படலம் படர்ந்திருப்பது போன்று இருக்கும். கழுத்தில் உள்ள இந்த கருமையைப் போக்குவதற்கு பலர் கடைகளில் விற்கும் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். என்ன தான் விலை உயர்ந்த க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தினாலும் கழுத்தில் உள்ள கருமை நீங்காமல் இருக்கும்.
அப்படி அதிக பணத்தை க்ரீம்களுக்கு செலவழிப்பதற்கு பதிலாக, சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டு கழுத்தைப் பராமரித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில் சமையலறையில் உள்ள சில பொருட்களில் ப்ளீச்சிங் தன்மை இருக்கிறது.
எனவே அந்த பொருட்களைக் கொண்டு தினமும் கழுத்தைப் பராமரித்து வந்தால், விரைவில் கழுத்தில் உள்ள கருமையைப் போக்க முடியும். சரி, இப்போது கழுத்தில் உள்ள கருமையைப் போக்க உதவும் அந்த சமையலறைப் பொருட்கள் என்னவென்றும், அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் காண்போம்.
கற்றாழை
கற்றாழை ஜெல்லில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக நிறைந்துள்ளது. மேலும் இது சிறந்த ஸ்கின் லைட்னரும் கூட. எனவே இந்த ஜெல்லை கழுத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இல்லாவிட்டால், தினமும் இரவில் படுக்கும் முன் கற்றாழை ஜெல்லை கழுத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவலாம். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்.
எலுமிச்சை சாறு
பாதி எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் கலந்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், கழுத்தில் உள்ள கருமை அகலும்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும். எனவே வெள்ளரிக்காய் சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.
பேக்கிங் சோடா
4-5 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை, 1-2 டேபிள் ஸ்பூன் நீருடன் கலந்து பேஸ்ட் செய்து, கழுத்தில் தடவி உலர வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் கருமைகள் வெளியேற்றப்படும்.
தேன்
1/2 டீஸ்பூன் பட்டை பொடியில், 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, கழுத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இந்த முறையினால் கழுத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, தழும்புகள் இருந்தாலும் மறைந்துவிடும்.
ஆரஞ்சு தோல்
ஆரஞ்சு தோல் சரும செல்கள் புதுப்பிக்க உதவும். மேலும் இது சிறந்த ஸ்கரப்பரும் கூட. எனவே சிறிது ஆரஞ்சு பொடியில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, கழுத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
தக்காளி
தக்காளியை சாறு எடுத்து, அதனை கழுத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கழுத்தில் உள்ள கருமை மறைந்துவிடும்.
ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் சரிசம அளவில் கலந்து, காட்டனை பயன்படுத்தி கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை என, தினமும் பின்பற்றி வந்தால், விரைவில் கழுத்தில் உள்ள கருமை மறையும்.
இளநீர்
இளநீர் கூட கழுத்து கருமையை மறைக்க உதவும். அதற்கு இளநீரை கழுத்தில் தினமும் தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் கழுத்தில் உள்ள கருமை மட்டுமல்லாமல், தழும்புகளும் மறையும்.
சந்தனப் பொடி
பொதுவாக சருமத்தின் நிறம் அதிகரிக்க சந்தனப் பொடி கொண்டு ஃபேஸ் பேக் போடப்படும். அத்தகைய சந்தனப் பொடியை கழுத்தில் தடவி வர, கழுத்தில் உள்ள கருமை வேகமாக மறையும்.
அதற்கு இரவில் படுக்கும் முன், சந்தனப் பொடியை ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் செய்து, கழுத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வர, கழுத்தில் உள்ள கருமை நீங்கும்.
Average Rating