“தமிழீழத்தைக் கைவிட்டால், `தம்பி`க்கும் வெடிதான்” கிட்டுவின் உறுதி: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 57) “விறுவிறுப்பான அரசியல் தொடர்…!!
“தமிழீழத்தைக் கைவிட்டால் தம்பிக்கும் வெடிதான்” கிட்டுவின் உறுதி: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-57)
இந்திய இராணுவம்:
இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை 1983க்கு பின்னர் திராவிட முன்னேற்றக் கழகமும் கலைஞர் கருணாநிதியும் வலியுறுத்திக் கொண்டிருந்தனர்.
இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பும் கோரிக்கையை எம்.ஜி.ஆர். ஆதரிக்கவில்லை.
இலங்கைத் தமிழர் பிரச்சனையைப் பொறுத்தவரை கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் ஏட்டிக்குப் போட்டியான நிலைப்பாட்டையே மேற்கொண்டு வந்தனர்.
ஈழப் போராளி அமைப்புக்களைப் பொறுத்தவரை இந்திய இராணுவம் தேவையில்லை என்ற கருத்தையே கொண்டிருந்தன.
ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈரோஸ், புலிகள் இயக்கம், புளொட் ஆகிய அமைப்புக்கள் இந்திய இராணுவம் நேரடியாகத் தலையிடத் தேவையில்லை. ஆயுத உதவியை மட்டும் இந்தியா வழங்கினால் போதுமானது என்று கூறிவந்தன.
பெங்களூரில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் புளொட் தலைவர் உமா மகேஸ்வரன் கூறியது இது:
“இந்தியா இராணுவம் அனுப்பத் தேவையில்லை. எமது போராட்டத்தை ஆதரித்தால் போதுமானது. எம்மிடம் பயிற்சி பெற்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தமிழீழ விடுதலையை நாம் பார்த்துக் கொள்வோம்.”
புளொட் அமைப்பினால் “வங்கம் தந்த பாடம்” என்றொரு புத்தகமும் வெளியிடப்பட்டது.
இந்திய இராணுவம் பங்களாதே~pல் நடந்துகொண்ட முறைகளைப் பற்றி அதில் விபரிக்கப்பட்டிருந்தது.
பெண்களை பலாத்காரப்படுத்தியமை, பங்களாதேசில் இருந்து முற்போக்கு சக்திகளை கொன்று குவித்தமை போன்ற சம்பவங்களை அவற்றில’ முக்கியமாக குறிப்பிட்டிருந்தன.
இந்திய இராணுவம் தொடர்பாக கடும் விமர்சனத்தை முன்வைத்த ஒரேயொரு ஈழப்போராளி அமைப்பு அப்போது புளொட் அமைப்புத்தான்.
‘வங்கம் தந்ந பாடம்’ என்னும் நூலை தயாரித்தவா சந்ததியார், டொமினிக் போன்றவர்களுக்கு முக்கிய பங்கு இருந்தது. பின்னர் சந்ததியார் புளொட் உட்பிரச்சனையால் கொல்லப்பட்டார்.
‘வங்கம் தந்ந பாடம்’ நூலின் ஆயிரக்கணக்கான பிரதிகள் குழிவெட்டிப் புதைக்கப்பட்டன.
சந்ததியார், மற்றும் புளொட் அமைப்புக்குள் நடைபெற்ற உட்கொலைகள் பற்றி இந்திய புலனாய்வுப் பிரிவினர் அறிந்தே இருந்தனர்.
சந்ததியாரும், மற்றும் உட் பிரச்சனைகளில் சம்பந்தப்பட்டவர்களும் இந்திய எதிர்ப்பாளர்கள் என்றும், அதனால்தான் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்றும் கூறிவிட்டார் உமா மகேஸ்வரன்.
அதனால்தான் ‘வங்கம் தந்த பாடம்’ மண்ணோடு மண்ணாக மறைக்கப்பட்டது.
நம்பநட
ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பில் பத்மநாபா ஆரம்ப நாள் முதலே இந்தியா தெடர்பாக சந்தேகங்களை கொண்டிருந்தவர்.
இந்திய முதலாளித்துவ அரசுடன் நம்ப நட, நம்பி நடவாதே என்ற நிலைப்பாடே இருக்கவேண்டும் என்பதுதான் பத்மநாபாவின் உறுதியான கருத்தாக இருந்தது.
தற்போது இதனைச் சொல்லும் போது பலருக்கு ஆச்சரியம் ஏற்படலாம். பின்னாளில் இந்தியாவின் உற்ற நண்பராக கருதப்பட்டவர் பத்மநாபா. அவரது 1985ம் ஆண்டு நிலைப்பாடு பற்றியே இப்போது குறிப்பிடுகிறேன்.
அதேபோல ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பின் இராணுவத் தளபதியாக இருந்த டக்ளஸ் தேவானந்தாவும் இந்தியாவின் நேரடித் தலையீட்டை அப்போது விரும்பவில்லை.
ரெலோ வரவேற்பு
ஒரே ஒரு இயக்கம்தான் இந்திய இராணுவத்தின் தலையீட்டை விரும்பியது: வரவேற்றது.
அந்த இயக்கம்தான் ரெலோ, கருணாநிதியின் நிலைப்பாட்டை ஆதரித்ததோடு, இந்திய இராணுவம் வந்தால் தமக்குத்தான் நல்ல வாய்ப்பு என்றும் ரெலோ நம்பியிருந்தது.
ஒரு பேட்டியொன்றில் சறீசபாரத்தினம் சொல்லியிருந்தது என்ன தெரியுமா?
“நாங்கள் போர் வீரர்கள். எமது அரசியலை இந்தியா பார்த்துக் கொள்ளட்டும்.”
அதேபோல தமிழர் விடுதலைக் கூட்டணியும் இந்தியாவின் நேரடித் தலையீட்டை விரும்பியது.
இந்தியா நேரடியாகத் தலையீட்டால் தமக்கு ஒரு முக்கிய பாத்திரம் கிடைக்கலாம் என்பதுதான் அந்த விருப்பத்தின் காரணமாக இருந்தது.
அமிர்தலிங்கம் அவர்கள் ஒரு பேட்டியில் சொன்னது இது:
“நாங்கள் நோயாளிகள். இந்தியா முன் வைக்கும் தீர்வை நாம் ஏற்றுக்கொள்வோம்.”
அமுதரின் கருத்து புலிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
‘வீரவேங்கை’ பத்திரிகையில் கோவை மகேசன் பின்வருமாறு எழுதியிருந்தார்.
“அமிர்தலிங்கம் கூறியதுபோல சுதந்திரத்தை நேசிக்கும் எந்தத் தமிழனும் கூறமாட்டான். சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் ஒட்டுப் போடும் எந்தத் தீர்வும் நீடித்து நிலைக்காது.
சுதந்திர ஈழமே ஒரே வழி என்பதை இந்திய அரசுக்கு உணர்த்துதே எமது ஒரே சிந்தனையும் செயலுமாக இருக்க வேண்டும்.
(ஈழப்போராளி இயக்கத் தலைவர்கள் தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன். இடமிருந்து வலமாக: பத்மநாபா(ஈ.பி.ஆர்.எல்.எஃப்), சிறீசபாரெத்தினம்(ரெலோ), மு.கருணாநிதி, பாலகுமார்(ஈரோஸ்)
பரவிய வதந்தி
ரெலோ இயக்கம் யாழ்ப்பாணத்தில் பரவலான பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கியிருந்தது.
யாழ்ப்பாணத்தில் இருந்த சுபாஸ் விடுதி, அசோகா விடுதி போன்றவற்றுக்கு சென்ற ரெலோ உறுப்பினர்கள் சொன்னது இது:
“அறைகள் தயாராக இருக்கட்டும். இன்னும் சில வாரங்களில் முக்கியமான ஆட்கள் வரப் போகிறார்கள்.” அவர்கள் கூறியது இந்திய இராணுவ அதிகாரிகளை.
பொதுமக்களிடமும் ‘இந்தியப்படை வரப்போகிறது’ என்று ரெலோ உறுப்பினர்கள் ஜாடைமாடையாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
1985இன் இறுதியில் பரவிய பெரிய வதந்தியும் அதுதான்.
‘இந்தியப் படை வந்தால் எங்கள் ஆட்சிதான்’ என்று ரெலோ உறுப்பினர்கள் சொல்லிக் கொண்டிருந்ததும் ஏனைய இயக்க உறுப்பினர்களுக்கு வெறுப்பூட்டியது.
அதனையடுத்து யாழ்ப்பாணத்தில் இரவோடு இரவாக சுவரொட்டிகள் தோன்றின.
“இந்தியப் படையினர் வந்தால் தமிழ் பெண்களின் மானம் போய்விடும்.”
“வேண்டாம், வேண்டாம் இநிதியப் படை இங்கே வேண்டாம். வங்கத்தில் பல்லாயிரம் தேச பக்தர்களை படுகொலை செய்தது இந்தியப் படை.”
“ஈழம் மற்றொரு பங்களாதேசமாக மாறவேண்டுமா? இந்தியப் படை இங்கே வரத்தான் வேண்டுமா?”
போன்ற வாகசங்கள் சுவரொட்டிகளில் காணப்பட்டன. சுவரொட்டிகளில் அதனை வெளியட்டவர்கள் -தமிழ் மக்கள் என்று குறிப்பிப்பட்டிருந்தது.
தமிழ் மக்களின் பெயரில் சுவரொட்டியை வெளியிட்டவர்கள் புலிகள். சுவரொட்டி வாசகங்களை தயாரித்தவர் திலீபன்.
திலீபன் சொன்னது.
இந்தியப்படையின் வருகையால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றி ஆராய யாழ்ப்பாணத்தில் ஒரு கலந்தரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தவர் டக்ளஸ் தேவானந்தா.
யாழ்ப்பாணம் அத்தியடியில் இருந்த மக்கள் விடுதலைப்படை தலைமைக் காரியாலயத்தில் கலந்துரையாடல் நடந்தது.
புலிகள் அமைப்பின் சார்பில் திலீபன், ஈரோஸ் சார்பாக கைலாஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப் சார்பாக டக்ளஸ் தேவானந்தா, ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புளொட் அமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. வேறொரு அவசர காரியம் இருந்தமையால் வரமுடியாது போய்விட்டதாக புளொட் அமைப்பின் முக்கியஸ்தர் மென்டிஸ் பின்னர் அறிவித்திருந்தார்.
ரெலோ சார்பாக பொபியை அழைத்திருந்தும் அவர் கலந்து கொள்ளவில்லை.
இந்தியப் படை வந்தால் ஏற்படக்கூடிய நிலை தொடர்பாக ஈரோசும், ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பும் ஒரேவிதமான கருத்தைத் தெரிவித்தன.
புலிகள் சார்பாக திலீபன் சொன்ன கருத்துத்தான் ஆச்சரியமானது.
“இந்திய படை அதிகாரிகளோடு பயிற்சி முகாமில் நான் பழகியிருக்கிறேன். அவர்கள் பண்பானவர்கள். இந்தியப் படை வந்தால் நம் மக்களைக் கொடுமைப்படுத்துவார்கள் என்று நான் நினைக்கவில்லை.
ஆனால் தமிழீழத்தை உருவாக்கித் தருவார்களா என்பதுதான் சந்தேகம். அதனால் தான் இந்தியப்படை நேரடியாக வருவதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை” என்றார் திலீபன்.
திலீபன் சொன்னதைக் கேட்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈரோஸ் பிரதிநிதிகளுக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது.
“இந்திய படை வந்தால் பெண்களை பாலியல் வதைக்கு உள்ளாக்கும் என்று சுவரொட்டிகள் போட்டிருக்கிறீர்களே” என்று கேட்டார் டக்ளஸ் தேவானந்தா.
அதற்கு திலீபன் சொன்ன பதில்: “அப்படியானால்தான் சனம் பயப்படும். வேறு விதமாகச் சொன்னால் சனத்துக்கு புரியாது. இந்தியா ஒரு முதலாளித்துவ நாடு என்றெல்லாம் எழுதினால் விளங்குமோ? அதுதான் அப்படிப் போஸ்டர் போட்டனாங்கள்” என்றார் திலீபன்.
அதே திலீபன்தான் பின்னர் இந்திய அமைதிப்படைக்கு எதிராக உண்ணாவிரதமிருந்து பலியானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிட்டுவின் உறுதி
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை 1985ம் ஆண்டு இறுதிப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பும், புலிகள் அமைப்பினரும் நெருக்கமாகவே இருந்தனர்.
மாத்தையா தெடர்பாக கோபம் இருந்தாலும், கிட்டுவுடன் டக்ளஸ் தேவானந்தா அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொண்டே இருந்தார்.
அக் காலகட்டத்தில் கிட்டுவுக்கும் பிரபாகரனுக்கு இடையில் வெளியே தெரியாத வகையில் மனக்கசப்புக்கள் உருவாகியிருந்தன.
யாழ்ப்பாண பத்திரிகைகள் மூலமும், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் மூலமும் கிட்டு பிரபலமாகியிருந்தார்.
தனது மோட்டார் சைக்கிளில், இடுப்பில் பிஸ்டலோடு, முன்புறம் ஒரு குரங்குக் குட்டியோடு வலம் வரும் கிட்டு யாழ்ப்பாண மக்களுக்கும் சுவாரசியமான ஒருவராகவே தெரிந்தார்.
டக்ளஸ் தேவானந்தா தனது பாதுகாவலர்கள் சகிதம் ‘பிக்கப்’ வாகனம் ஒன்றில் வலம் வருவார். அவரது வாகனத்திலும் ஒரு குரங்குக் குட்டி பயணம் செய்யும்.
டக்ளஸ் தேவானந்தாவுக்கும் பத்மநாபாவுக்கும் இடையில் அப்போது மனக்கசப்பு தோன்றியிருந்தது.
டக்ளஸ் தேவானந்தாவும், கிட்டுவும் பிரபலமானதும், அவர்களை மீறி யாழ்ப்பாணத்தில் அவர்களது தலைமைகளால் செயற்படமுடியாதளவுக்கு செல்வாக்குப் பெற்றிருந்ததும், இரு இயக்கங்களுக்கும் அவர்கள் இருவரையும் சர்ச்சைக்குரியவர்களாக்கியது.
கிட்டு ஒரு முறை உறுதியோடு சொன்ன கருத்து இதுதான்.
“தமிழீழத்தைக் கைவிட்டுப் போட்டு தம்பி வந்தாலும் வெடிதான்.” தம்பி என்றழைத்தது பிரபாவை. அப்போது தமிழ் நாட்டில் தங்கியிருந்தார் பிரபாகரன்.
ரொலோவோடு பிரச்சனைகள்
புலிகள் அமைப்பிற்கும் ரெலோவுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் எப்போதும் பிரச்சனைதான்.
கிட்டுவை ‘மொட்டை’ என்று அழைத்து கேலி செய்வார்கள் ரெலோ உறுப்பினர்கள். கிட்டு அதைக் கேட்டும் கேட்காதவர் போலச் சென்றுவிடுவார்.
யாழ் கோட்டை இராணுவ முகாமில் இருந்து வெளியேற முற்படுவார்கள் படையினர்.
உடனே சகல இயக்கங்களும் விரைந்து சென்று பதிலடி கொடுப்பார்கள்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப் அடிக்கும் மோட்டார் ஷெல்லுக்கு கோட்டை இராணுவத்தினரிடம் நல்ல மரியாதை.
உடனடியாகப் பின்வாங்கி விடுவார்கள். அப்போது ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பிடம் மட்டுமே மோட்டார் ஷெல்கள் இருந்தன. சொந்தமாகத் தயாரிக்கப்பட்டவை.
புலிகள் அமைப்பினர் பதில் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடாதளவுக்கு தொல்லை கொடுப்பார்கள் ரெலோ அமைப்பினர்.
இராணுவத்தினரை நோக்கி புலிகள் அமைப்பினர் முன்னேறிச் சென்று விட்டால், ரெலோ பின்னால் நின்று சுட்டுப் பயம்காட்டும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் புலிகள் அமைப்பினரும், கிட்டுவும் காட்டிய சகிப்புத் தன்மை உண்மையில் மெச்சத்தக்கதுதான்.
ரெலோவைப் பொறுத்தவரை அதன் உறுப்பினர்கள் கட்டுப்பாடு விடயத்தில் மிக மோசமாக இருந்தனர்.
மிரட்டும் பெயர்கள்
பொறுப்பாளர்களுக்கு மற்றவர்களைப் பயமுறுத்தக்கூடிய பெயர்களாக வைத்துக் கொண்டார்கள்.
தோட்டுத்தில்லை, மொட்டை மாமா என்றெல்லாம் பெயர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இயக்கங்கள் உருவாக முன்னர் வீதிக்கு வீதி நின்ற சண்டியர்களும் அப்படித்தான் பெயர்களை வைத்திருந்தார்கள்.
உதாரணமாகச் சில பெயர்கள்: கொட்டடிமணி, சுருள்வாள் சின்னத்தம்பி.
சண்டித்தனப்பாணியில் கட்டுப்பாடு இல்லாமல் செயற்பட்ட ஒரு அமைப்பாகத்தான் ரெலோ இயங்கிக் கொண்டிருந்தது.
ரெலோவுக்கு யாழ்ப்பாண பொறுப்பாளராக இருந்தவர் தாஸ்.
தனது உறுப்பினர்கள் சகிதம் கள்ளுத்தவறணைகளில் வாகனத்தை நிறுத்தி வயிறுமுட்டக் குடிப்பார் தாஸ்.
தாஸ் மீது விசுவாசங் கொண்ட ஒரு பெரிய அணியே ரெலோவுக்குள் இருந்தது,
அவர்கள் அனைவரும் தாஸின் ஊரவர்களாகவோ, அயலவர்களாகவோ இருந்தனர்.
தாசுக்கு கிடைத்த மரியாதையை ஒரு பிரபல சண்டியனுக்கு முன்பிருந்த மரியாதையோடும் ஒப்பிடலாம்.
புலிகள் மேற்கொண்ட தாக்குதல் பற்றி வரும் வாரம் சொல்கிறேன்.
Average Rating