தங்கர்பச்சான் வீட்டு முன் அழுத பெரியவர்!
தங்கர்பச்சான் இயக்கி சத்யராஜ் நடித்துள்ள ஒன்பது ரூபா நோட்டு படத்தைப் பார்த்துவிட்டு அவரை வெகு நேரம் ஏகத்துக்கும் பாராட்டித் தள்ளிவிட்டார் முதல்வர் கருணாநிதி. போர் பிரேம்ஸ் ப்ரிவியூ தியேட்டரில் அவருக்காக இந்தப் படம் சிறப்பாக திரையிடப்பட்டது. கருணாநிதியுடன் தங்கரும், சத்யராஜும் படம் பார்த்தனர். படத்தைப் பார்த்துவிட்டு சத்யராஜையும் தங்கரையும் பாராட்டிய முதல்வர், இது மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும் என்றாராம். மகன்களால் புறக்கணிக்கப்படும் ஏழைத் தந்தை மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறி பல வருடங்களுக்கு பின் மீண்டும் தன் குழந்தைகளைப் பார்க்க சொந்த ஊருக்கு திரும்பி வருவதே கதை. வயதான கேரக்டரில் சத்யராஜ் கலக்கியுள்ள இந்தப் படத்தின் கதையும், அதன் அழுத்தமும், மெசேஜும், ரியலிசமும் கருணாநிதியை மிகவும் கவர்ந்துவிட்டதாம். மாதவன் படையாச்சி என்ற கேரக்டரில் சத்யராஜ் மிக அழகாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு பரத்வாஜின் இசை மிகப் பெரிய பக்கபலமாக அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்தப் படம் நிச்சயம் பெரிய பெயர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை சமீபத்தில் பார்த்து அசந்து போனவர்களில் பிரமிட் நடராஜனும் ஒருவர். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நெடு நேரம் அழுதாராம் சாய் மீரா அதிபர். பின்னர் தங்கரிடம் உனக்கு என்ன வேணும் என்று கேட்டுவிட்டு, தனது 100 தியேட்டர்களில் படத்தின் ஒரு காட்சியை இலவசமாக திரையிட அவராகவே முன் வந்தாராம்.
அடுத்து தனக்காகவும் ஒரு படத்தை இயக்கச் சொல்லியிருக்கிறாராம்.
தமிழகம் முழுவதும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள 100 தியேட்டர்களில் ஒன்பது ரூபாய் நோட்டை மக்களுக்காக திரையிட்டது பிரமீட் சாய்மீரா நிறுவனம்.
சென்னையில் உட்லண்ட்ஸ் தியேட்டரிலும் இந்த இலவச சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது. மதுரையில் 6 தியேட்டர்களிலும், கோவையில் 4 தியேட்டர்களிலும், திருநெல்வேலியில் 2 தியேட்டர்களிலும், காஞ்சியில் 3 தியேட்டர்களிலும், திருப்பத்தூரில் 3 தியேட்டர்களிலும், திருவண்ணாமலையில் 4 தியேட்டர்களிலும், திருப்பூரில் 4 தியேட்டர்களிலும், குடியாத்தத்தில் 3 தியேட்டர்களிலும் இந்த இலவச காட்சி திரையிடப்பட்டது.
படம் குறித்து மக்களிடையே ஒரு விழிப்பை ஏற்படுத்திவிட்டு பின்னர் இதை முறையாக ரிலீஸ் செய்ய உள்ளார்களாம். இந்த இலவச காட்சியைப் பார்த்துவிட்டு, வெளியே வைக்கப்பட்டிருந்த உண்டியலில் விரும்பிய பணத்தை போட்டால் போதும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ப்ரிவியூ ஷோவில் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நேராக தங்கரின் வீட்டுக்கு வந்த ஒரு பெரியவர், நேற்றிரவு அவரது வீட்டு வாசலில் அமர்ந்து அழுதபடி இருந்திருக்கிறார். ஒரு பக்கம் அந்த பெரியவர் குறித்த கவலையுடனும் மறு பக்கம் தனது படம் ஏற்படுத்திய பாதிப்பின் பூரிப்பையும் கலந்தபடி உணர்ச்சிவசப்பட்டவராய் இதைச் சொல்லும்போது தங்கரின் கண்களும் கலங்குகின்றன.
இந்தப் படத்தின் டிரைலர், பாடல் காட்சிகளைப் பார்க்கும்போதே மனம் அடித்துக் கொள்கிறது.
ஹேட்ஸ் ஆப் தங்கர், சத்யராஜ்.