மலேசியாவில் இறந்த பரமக்குடி இளைஞர் சாவில் புது திருப்பம்
மலேசியாவில் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பரமக்குடி இளைஞர் சுசீந்தரன், தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது உடல் எரிக்கப்பட்டு விட்டதாகவும், மத்திய வெளியுறவுத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கை பைசல் செய்வதாக உயர்நீதிமன்றம் இன்று அறிவித்தது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சுசீந்திரன் சேதுராஜா. 22 வயதான இவர் மலேசியாவில் உள்ள ஒரு பிஸ்கட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த ஜனவரி மாதம் சுசீந்திரன் கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர உதவ வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். மேலும், மதுரை உயர்நீதிமன்றக் கிளையிலும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பித்த உத்தரவில் 3 வாரங்களுக்குள் சுசீந்திரனின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறைச் செயலாளருக்கு உத்தரவிட்டது.
இருப்பினும் இதுதொடர்பாக தமிழக அரசுத் தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு தானாக முன்வந்து, தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவு செய்தது.
நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை அமல்படுத்தாதது ஏன் என்று விளக்கம் கேட்டு தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய வெளியுறவுத்துறைச் செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
பின்னர் விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக அரசுத் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ராமசுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில், அண்டர் செக்ரெட்டரி காளியப்பன் அசோகன் விளக்க மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், சம்பந்தப்பட்ட சுசீந்திரன், 2007ம் ஆண்டு, ஜனவரி 28ம் தேதி மலேசியாவில் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை, அவரது நண்பர்கள் மலேசியாவிலேயே தகனம் செய்து விட்டனர்.
இதுதொடர்பான மலேசிய அரசின் பிரேதப் பரிசோதனை அறிக்கையும், மரணச் சான்றிதழும் மத்திய வெளியுறவுத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுசீந்திரன் கொலை செய்யப்படவில்லை. அவர் தற்கொலைதான் செய்து கொண்டார் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த விளக்கத்தை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். மேலும், இந்த வழக்கை இத்துடன் முடித்துக் கொள்வதாகவும், தமிழக அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் பைசல் செய்வதாகவும் நீதிபதிகள் அறிவித்தனர்.
முன்னதாக சுசீந்திரனின் உடல் மலேசிய மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகின. ஆனால் தற்போது மத்திய வெளியுறவுத்துறை தாக்கல் செய்துள்ள மனுவில், சுசீந்திரனின் உடல் எரிக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் தற்கொலை?:
இதற்கிடையே, சுசீந்திரன் இறப்பதற்கு முன்பு அவரது தந்தை சத்யேந்திரனிடம் போனில் பேசியுள்ளார். இதுகுறித்து சத்யேந்திரன் கூறுகையில், சுசீந்திரன் இறப்பதற்கு முன்னர் எங்களுக்கு போன் செய்தான். அப்போது அவன் வேலை பார்க்கும் பிஸ்கட் தொழிற்சாலையின் உரிமையாளர் மகளை காதலிப்பதாகவும், அது அவர்களுக்கு தெரிந்து விட்டதால் கொலை மிரட்டல் விடுவதாகவும் கூறினான்.
இதனால் அவன் பல இடங்களில் மாறி மாறி வேலை பார்த்து வந்தான். ஆனால் அவர்கள் என் மகனை கொன்று விட்டார்கள் என்று கூறியிருந்தார்.