புதன் கிரகத்தில் உருகாத பனிக்கட்டிகள்…!!
புதன் கிரகத்தில் பனிக்கட்டிகள் வடிவில் தண்ணீர் உள்ளதாக இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதன் கிரகத்தைச் சுற்றி வந்த மெசஞ்சர் விண்கலம் இதைக் கண்டுபிடித்துள்ளது. இது அடுப்புக்கு அருகே ஐஸ் கட்டிகள் உருகாமலேயே இருப்பதற்கு ஒப்பாகும். சூரிய மண்டலத்தில் புதன் கிரகம் (Mercury) தான் சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. புதனில் வெயில் பொசுக்கி எடுக்க இது ஒன்றே போதும். தவிர, அந்த கிரகத்தில் பகல் என்பது சுமார் மூன்று மாதம். இரவு என்பது சுமார் மூன்று மாதம்.
பகலாக உள்ள பகுதியில் வெயில் 427 டிகிரி செல்சியஸ். புதன் கிரகத்தின் வானில் 11 சூரியன் பிரகாசித்தால் எப்படி? அந்த அளவு வெயில். இரவாக உள்ள பகுதியில் குளிர் ஆளைக் கொன்று விடும். மைனஸ் 173 டிகிரி. புதன் கிரகத்தில் செடி, கொடி, மரம் என எதுவும் இல்லை. எந்த உயிரினமும் இல்லை.புதன் பொசுங்கிப் போன கிரகம்.
ஆனால் புதன் கிரகத்தின் வட துருவப் பகுதியில், தண்ணீரானது பனிக்கட்டி வடிவில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏதோ உறைந்த பனிக்கட்டி வடிவில் இருப்பதாக ராடார் மூலம் கண்டறியப்பட்டிருந்தது என்றாலும் பனிக்கட்டி வடிவில் இருப்பது தண்ணீர் தானா என்பது நிச்சயமாகத் தெரிய வரவில்லை. ஏனெனில் வேறு வகை வாயுக்களும் உறை பனி வடிவில் இருக்க முடியும்.
பூமியில் வட,தென் துருவங்களில் உறைந்த பனிக்கட்டிப் பாளங்கள் உள்ளன. குளிர்காலத்தில் ரஷ்யா, சுவீடன்,போன்ற குளிர்ப் பிரதேசங்களில் கடும் குளிர் வீசும் போது விழுபனி(Snowfall) உறைபனியாக மாறுவதுண்டு. அதாவது பூமியில் உறைபனிக் கட்டிகள் பூமியில் தோன்றுபவை. ஆனால், புதன் கிரகத்தில் வடதுருவப் பகுதியில் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள உறை பனிக்கட்டிகள் வெளியிலிருந்து ‘இறக்குமதி’ஆனவை. அதாவது வால்நட்சத்திரங்கள் கொண்டு வந்து சேர்த்தவை.
வால் நட்சத்திரங்களைப் பனிக்கட்டி உருண்டைகள் என்றும் கூறலாம். அந்த பனிக்கட்டிகள் நீர் உறைந்ததால் ஏற்பட்டவை. பல சமயங்களிலும் வால் நட்சத்திரங்கள், கிரகங்களில் வந்து விழுவது உண்டு. பூமியில் உள்ள நீரில் கணிசமான பகுதி பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வந்து விழுந்த வால் நட்சத்திரங்கள் மூலம் கிடைத்ததாக ஒரு கருத்து உண்டு.
சூரியனின் வெப்பம் விண்கலத்தைத் தாக்காமல் தடுக்கவே இந்த கூரை போன்ற பகுதி. இதை உருவாக்கப் பல ஆண்டுகள் ஆகின. புதன் கிரகத்தின் வட பகுதியில் உள்ள ஆழமான பள்ளங்களில் இப்போது காணப்படுகின்ற எராளமான அளவிலான பனிக்கட்டிகள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இவ்விதம் வால் நட்சத்திரங்களால் வந்து விழுந்த பனிக்கட்டி உருண்டைகளே என்று கருதப்படுகிறது.
புதன் கிரக பனிக்கட்டி உருண்டைகள் வெண்மையாகக் காணப்படுவதற்குப் பதில் அவற்றின் மீது பல சென்ரிமீற்றர் கனத்துக்கு கரும் பொடி காணப்படுகிறது. இக்கரிய பொடி அஸ்டிராய்ட் மற்றும் வால் நட்சத்திரங்களிலிருந்து வந்தவையே.
புதன் கிரகத்தில் வடதுருவப் பனிக்கட்டிகள் உருகாததற்கு முக்கிய காரணம் உண்டு. பூமியானது தனது அச்சில் 23 டிகிரி சாய்ந்து உள்ளது. ஆகவே தான் வடதுருவத்தில் ஆறு மாதம் பகலும் ஆறு மாத இரவும் ஏற்படுகின்றன. தென் துருவப் பகுதியிலும் இது போன்று ஆறு மாதப் பகல், ஆறு மாத இரவு உண்டு. ஆனால் புதன் கிரகம் கிட்டத்தட்ட சாய்மானம் இன்றி தனது அச்சில் செங்குத்தாக அமைந்தபடி சுழல்கிறது. ஆகவே வடதென்துருவப் பகுதிகளில் என்றும் வெயிலே படாத சில பகுதிகள் உள்ளன. அங்கு தான் இந்த பனிக்கட்டிகள் காணப்படுகின்றன.
அமெரிக்க நாஸா 2004ஆம் ஆண்டில் அனுப்பிய மெசஞ்சர் விண்கலம் 2008 ஆம் ஆண்டு வாக்கில் புதன் கிரகத்தை அடைந்து அப்போதிலிருந்து அக்கிரகத்தை ஆராய்ந்து வருகிறது. அதில் பல வகையான கருவிகள் உள்ளன. அவை தான் புதன் கிரகத்தின் வடபகுதியில் தண்ணீரால் ஆன பனிக்கட்டிகளைக் கண்டுபிடித்துள்ளன.
புதன் கிரகத்தின் தென்துருவத்திலும் இதே போல பனிக்கட்டிகள் இருக்கலாம். புதன் கிரகத்தைச் சுற்றிச் சுற்றி வரும் மெசஞ்சர் விண்கலத்தின் நீள்வட்ட சுற்றுப்பாதை காரணமாக அதனால் புதன் கிரகத்தின் வடதுருவப் பகுதியை மட்டுமே ஆராய முடிந்துள்ளது.
mercury-310×180புதன் கிரகம் வடிவில் சிறியது. அது சூரியனை நீள் வட்டப்பாதையில் சுற்றுவதால் ஒரு சமயம் சூரியனிலிருந்து 46 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வேறு ஒரு சமயம் 70 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புதனுடன் ஒப்பிட்டால், பூமியானது சூரியனிலிருந்து சுமார் 150 மிலியன் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
Average Rating