பிக் அப் வாகனத்தை தனியாக தூக்கி தந்தையை காப்பாற்றிய யுவதி…!!
அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயதான யுவதியொருவர் பிக் அப் வாகனமொன்றை தனியாக தூக்கி, அதன் அடியில் சிக்கியிருந்த தனது தந்தையை காப்பாற்றியதுடன் 3 சக்கரங்களை மாத்திரம் கொண்டிருந்த வாகனத்தை செலுத்திச் சென்று பெரும் தீ விபத்தையும் தவிர்த்தமைக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
வேர்ஜீனியா மாநிலத்தைச் சேர்ந்த சார்லட் ஹஃபெல்மீர் எனும் இந்த யுவதி கடந்த நவம்பர் 28 ஆம் திகதி இந்த சாகசத்தைப் புரிந்தார்.
அன்றைய தினம் சார்லட்டின் தந்தையான எரிச் ஹஃபெல்மீர் தனது வீட்டிலுள்ள கராஜில் பிக் அப் ட்ரக் ஒன்றை பழுதுபார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவ்வாகனம் திடீரென ஒரு புறமாக சரிந்தது. எரிபொருள் கசிந்துகொண்டிருந்ததால் கராஜில் தீ பரவ ஆரம்பித்தது.
வாகனத்தின் அடியிலிருந்து வெளிவர முடியாமல் எரிக் ஹஃபெல்மீர் தவித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரின் மகளான சார்லட் ஹபெல்மீர், பெற்றோல் மணம் மற்றும் மற்றும் புகை பரவுவதை உணர்ந்து ஓடி வந்தார்.
தனது தந்தை தீ பரவிய சூழலில் வாகனத்தின் அடியில் சிக்கியிருப்பதைக் கண்டு சார்லட் அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக செயற்படாவிட்டால் தந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதை அவர் உணர்ந்தார்.
எனினும் அயலில் எவரும் இருக்கவில்லை. இதனால் தானே அந்த பாரிய பிக் அப் வாகனத்தை தூக்குவதற்கு அவர் தீர்மானித்தார்.
திடீரென தனது உடலுக்கு பெரும் சக்தி கிடைத்தவரைப் போன்று, ஏதோ நம்பிக்கையுடன் பிக் அப்பை அவர் தூக்கினார்.
என்ன ஆச்சரியம்! பிக் அப் மேலே கிளம்ப, அவரின் தந்தை எரிக் ஹபெல்மீரை வாகனத்திலிருந்து வெளியே வந்தார்.
அது மாத்திரமல்ல, தீ பரவும் நிலையில் வாகனம் அங்கு இருப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்த சார்லட், உடனடியாக அந்த வாகனத்தின் சாரதி ஆசனத்தில் ஏறி அமர்ந்து அவ்வாகனத்தைச் செலுத்தி அப்பால் கொண்டு சென்றார்.
இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் அவ்வாகனம் அப்போது 3 சக்கரங்களை மாத்திரமே கொண்டிருந்தது.
எனினும் அவ்வாகனத்தை செலுத்திச் சென்று பாதுகாப்பான இடத்தில் நிறுத்திய அவர், தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார். பின்னர் தீயணைப்புத் துறையினர் உதவிக்கு வந்து சேர்ந்தனர்.
வீட்டிலிருந்து ஓடி வந்தபோது வெறுங்காலுடனேயே சார்லட் இருந்தார். தீயின் காரணமாக அவரின் பாதங்களில் காயங்கள் ஏற்பட்டிருந்தன.
அவரின் வீட்டிலிருந்த பாட்டியும் 3 மாத குழந்தையொன்றும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியிருந்தனர்.
ஐந்தரை அடி உயரமானவர் சார்லட். 54 கிலோகிராம் எடையைக் கொண்டிருந்தார். அவரால் எப்படி அந்த பிக் அப் வாகனத்தை தூக்க முடிந்தது என்பது குறித்து பலரும் வியப்படைந்தனர்.
அண்மையில் பெயார்பெக்ஸ் பிராந்திய தீயணைப்புத் துறையினர் சார்லட் ஹபெல்மீரின் மேற்படி நடவடிக்கையை பாராட்டும் விதமாக அவருக்கு ‘பிரஜைகள் உயிர்காப்பு விருது’ வழங்கி கௌரவித்துள்ளது.
மென்மையாக பேசும் சுபாவம் கொண்ட சார்லட், பாடசாலையில் கோலூன்றிப் பாய்தல் வீராங்கனையாக இருந்தவர். பிக் வாகனத்தை தூக்குவதற்குத் தீர்மானித்தவுடன், ”உஹ்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ” எனக் கூறிக்கொண்டு அவ்வாகனத்தை தான் தூக்கியதாக அவர் கூறுகிறார்.
மேற்படி சம்பவம் இடம்பெற்ற காலத்தில், அமெரிக்க விமானப் படைக் கல்லூரியில் இணைந்திருந்தார். ஆனால், காயம் காரணமாக அவரால் அக்கல்லூரிக்கு செல்ல முடியாதிருந்ததாம்.
படையில் இணைந்து செயற்பட முடியாவிட்டால் புலனாய்வுத் துறையிலோ அல்லது வேறு அரச பணியிலோ ஈடுபடுவதற்கு தான் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating