புலிகள் அமைப்புக்கு ஆரம்பகாலப் போஷகர் யார் தெரியுமா?? : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 56) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”
புளொட் தலைவர் உமாமகேஸ்வரனுக்கும் தனித் தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த பெரும்சித்தனாருக்கும் இடையே நல்ல நெருக்கம். இந்தியாவில் தனித தமிழ்நாடு உருவாக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தவர் பெரும் சித்தனார்.
பெரும் சித்தனாருக்கு தமிழ் மீது மட்டற்ற காதல். தமிழ் மொழியில் பிற மொழிச் சொற்கள் பலவாமை வேண்டும் என்று கூறி வந்தவர். கூறியதோடு நிற்காமல், தனிப்பட்ட ரீதியில் உரையாடும் போதும் தூய தமிழில்தான் பேசுவார்.
வீட்டுச் சென்றால் விருந்து போடுவார். உணவு தயாரானதும் நண்பர்களிடம் “உண்ண ஏகலாமா?” என்றுதான் கேட்பார். பெரும் சித்தனார் வெளியிட்ட பிரசுரமொன்றில் “கமுக்கக் காவலர்கள் துமுக்கியால் சுட்டனர்” என்று குறிப்பிட்டிருந்தது.
பழந் தமிழ் அகராதியின் உதவியோடு அந்தத் தழிழை மொழி பெயர்த்துப் பார்த்துத்தான் பலரும் அர்த்தத்தை புரிந்து கொண்டனர்.
தூய தமிழும் – உளன்றி வதையும்
கமுக்கம்= இரகசியம், துமுக்கம் = துப்பாக்கி. “இரகசியப் பொலிசார் துப்பாக்கியால் சுட்டனர்” என்பது தான் பொருள்.
பெரும்சித்தனாரின் நட்பு உமாமகேஸ்வரனுக்கு பிடித்தமாகி விட்டது. அவரது கொள்கைகளிலும் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார்.
புளொட் அமைப்பினர் வெளியிட்ட பிரசுரங்களிலும் தூயதமிழ் சொற்கள் தலைகாட்டத் தொடங்கியிருந்தன.
புளொட் அமைப்பினர் சென்னையில் ஆரம்பித்த அச்சகமும் பெரும் சித்தனாரின் மேற்பார்வையில்தான் இயங்கிவந்தது.
தூயதமிழ் சொற்களை பிரசுரங்களில் மட்டுமல்ல, இயக்கக் தண்டனைக் கூட்டத்திலும் உமாமகேஸ்வரன் அறிமுகம் செய்து வைத்தார்.
இதில் ஒன்றுதான் உழன்றி. உழன்றி என்றால் கப்பி. கிணற்றில் தண்ணீர் அள்ள பயன்படுத்தப்படும் கப்பி.
உழன்றி வதை
ஆளை உயரத்தில் கட்டித் தொங்கவிட்டு கப்பியின் உதவியால் உயர்த்தியும், இறக்கியும் வேடிக்கை காட்டலாம். கீழே நெருப்பு எரியும்.
அல்லது ஆளை பதியச் செய்து உருட்டுக் கட்டைகளால் அடித்துவிட்டு மீண்டும் உயரத்தில் தொங்கச் செய்யலாம்.
மிகப் பழமையான சித்திரவதை முறை அது. அதனால் தூய தமிழில் பெயர் சூட்டிவிட்டார் உமாமகேஸ்வரன்.
புளொட் இயக்க பயிற்சி முகாமகளில் சித்திரவதைகளை முன்னின்று நடத்தியவர்களில் முக்கியமானவர்கள் பரந்தன் ராஜன், வாமதேவன், சங்கிலி எனறழைக்கப்படும் கந்தசாமி ஆகியோராவார்.
ஒவ்வொரு இயக்கத்திலும் தமது தலைவர்களை பெயர் சொல்லி அழைக்கும் முறை வெவ்வேறாக இருக்கும்.
புலிகள் அமைப்பினர் பிரபாகரனை தம்பி என்று குறிப்பிடுவார்கள். தற்போது தலைவர் என்று குறிப்பிடுகிறார்கள். அண்ணை என்றும் சொல்லிக் கொள்வதுண்டு.
புளொட் அமைப்பில் உமாமகேஸ்வரன் பெரியவர் என்று அழைக்கப்பட்டார்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பில் பத்மநாபாவை ‘தோழர் எஸ்.ஜி.’ என்றுதான் குறிப்பிடுவார்கள். ‘எஸ்.ஜி’ என்பது செயலாளர் நாயகத்தின் சுருக்கம்.
ஈரோசில் யார் தலைவர் என்பதே முதலில் குழப்பமாக இருந்தது. பொதுவாக தோழர் என்று தலைமையில் உள்ளவர்களும் அழைக்கப்பட்டார்கள்.
ரெலோவில் சிறிசபாரத்தினம் சிறி அண்ணா என்று அழைக்கப்பட்டார். தலைமையைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘மெயின்;’ என்றும் ரெலோ உறுப்பினர்கள் சொல்லிக் கொள்வார்கள்.
போஷகர்கள்
ஈழப் போராளி அமைப்புக்கள் ஒவ்வொன்றும் தமிழ்நாட்டில் தங்களுக்கென்று ஒவ்வொரு போஷகர்களைக் கொண்டிருந்தன.
புலிகள் அமைப்புக்கு ஆரம்பகாலப் போஷகர் நெடுமாறன். இவர் முதலில் இந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். காமராஜரும் இந்திராகாந்தியும் பிரச்சனைப்பட்டுக் கொண்டு காங்கிரஸ் இரண்டாக உடைந்தபோது காமராஜரோடு இருந்தவர்.
காமராஜர் மறைவுக்குப் பின்னர் இரண்டு காங்கிரசும் இணைந்துவிட்டன. நெடுமாறன் அதிலிருந்து விலகி காமராஜர் காங்கிரஸ் என்ற தனிக் கட்சியை ஆரம்பித்தவர். சொல்லிக் கொள்ளக்கூடிய அரசியல் செல்வாக்கு எதுவும் அவருக்குக் கிடையாது.
இலங்கைப் பிரச்சனையால் அடிக்கடி சிறை சென்று பிரபலம் பெற்றுக் கொள்ள முடிகிறது.
ரெலோவுக்கு கலைஞர் கருணாநிதிதான் ஆரம்பகால போஷகர். (தற்போதல்ல)
ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்கு கும்பகோணம் ஸ்டாலின்தான் போஷகர். இவா தந்தை பெரியாரின் தீவிரமான தொண்டர்.
திராவிக் கழக மாணவரணியில் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். பெரியார் மறைவுக்குப் பின்னர் திராவிடர் கழகத் தலைவரானார் கி.வீரமணி.
“இலங்கைத் தமிழருக்காக குரல் கொடுக்க வேண்டும். போராட்டம் நடத்த வேண்டும்” என்று வீரமணியிடம் சொன்னார் ஸ்டாலின். அதற்கு வீரமணி சொன்னார், “அது அந்த நாட்டின் உள்நாட்டுப் பிரச்சனையாச்சே. நாம் தலையிடவேண்டாம்.”
திராவிடர் கழகத்திற்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு வந்துவிட்டார் ஸ்டாலின்.
அதே வீரமணி பின்னர் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார். திராவிடர் கழகம் மூலமாக புலிகளுக்கு நிதி திரட்டல் நடந்தது. திரட்டிய நிதியில் திராவிடர் கழகத்துக்காக ஒர குறிப்பிட்ட வீதம் எடுக்கப்படும் என்று முன்நிபந்தனையோடுதான் நிதி திரட்டப்பட்டது.
திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் கோடி கோடியாக நிதி வைத்திருக்கும் கட்சிகள்.
எம்.ஜி.ஆரின் உதவி
எம்.ஜி.ஆர். தனது சொந்த நிதியிலிருந்தும் புலிகளுக்கு உதவியிருக்கிறார். எம்.ஜி.ஆர். புலிகளுக்கு உதவி செய்தது பற்றிய ஒரு சம்பவம் பரவலாக பேசப்பட்டது.
எம்.ஜி.ஆருடன் இருந்த நெருக்கத்தை வைத்தே பல கோடிகள் சம்பாதித்தவர் ஒரு தொழிலதிபர். ஒரு தடவை தனக்கு வியாபாரம் ஒன்றில் கிடைத்த லாபத்தை எம்.ஜி.ஆரிடம் குறைத்துச் சொல்லிவிட்டார்.
எம்.ஜி.ஆர். எப்படியோ மணந்து பிடித்து விட்டார். அந்தத் தொழிலதிபரிடம் ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்தை கொண்டுவருமாறு கூறினார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் கட்டளையை மீற முடியுமா? பெட்டியில் வந்தது பல லட்சங்கள். பெட்டியை வாங்கிக் கொண்டது பிரபாகரனின் ஆள்.
கும்பகோணம் ஸ்டாலின் தனது சொத்துக்களை விற்று ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்திற்காக உதவியவர். விளம்பரம் விரும்பாத மனிதர்.
கும்பகோணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். கால்வைக்க முன்னர் ஒரு அம்பாசிடர் கார், இரண்டு பெரிய பேக்கரிகள், சொந்த வீடு எல்லாம் இருந்தது.
இப்போது கால் நடையாகத்தான் திரிகிறார் ஸ்டாலின்.
புளொட் அமைப்புக்கு போஷகராக இருந்தவர் எஸ்.டி. சோமசுந்தரம்.
எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் பவர்ஃபுல்லாக இருந்தபோது புளொட்டுக்கு நல்ல பயன் கிடைத்தது. ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டதால் எம்.ஜி.ஆரோடு பிரச்சனைப்பட்டுக் கொண்டு வெளியேறினார்.
‘நமது கழகம்’ என்று தனிக்கட்சி ஆரம்பித்தார். இடைத்தேர்தலில் படுதோல்வி. மீண்டும் அ.தி.மு.கவுக்குத் திரும்பினார். இப்போது எஸ்.டி. சோமசுந்தரத்திற்கு ஜெயலலிதா ஆதிபராசக்தியாக தெரிகிறார்.
இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக தற்போது எஸ்.டி. சோமசுந்தரம் வாயே திறப்பதில்லை.
பொதுவான பெயர்
1985 காலப்பகுதியில் இலங்கையின் புலிகள் அமைப்பினர் நடத்திய தாக்குதல்கள் தமிழகப் பத்திரிகைகளில் பரபரப்பாக வெளியாகிக் கொண்டிருந்தன.
சகல ஈழப் போராளி அமைப்புக்களையும் பொதுவாக விடுதலைப் புலிகள் என்றே தமிழக மக்கள் அழைத்து வந்தனர்.
ரெலோ நடத்திய தாக்குதலாக இருந்தாலும் புலிகள் தாக்கிவிட்டார்களாம் என்றே தமிழக மக்கள் பேசிக் கொண்டனர்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ரெலோ, ஈரோஸ், புளொட் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பதைவிட புலிகள் என்று பொதுவாகக் குறிப்பிடுவதே அவர்களுக்கு வசதியாக இருந்தது.
ஈழப் போராளி இயக்கத் தலைவர்கள் மத்தியிலும் பிரபாகரனும், உமாமகேஸ்வரனுமே தமிழக மக்களிடம் அறியப்பட்ட பெயர்களாக இருந்தன. உமாமகேஸ்வரனை முகுந்தன் என்று சொன்னால்தான் தெரியும்.
பாண்டிபஜாரில் புளொட்டுக்கும், புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பிரபாகரனையும், முகுந்தனையும் பிரபலம் செய்திருந்தது.
சாதாரண மக்கள் மட்டுமல்ல தமிழக அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மத்தியில் கூட ஈழப் போராளி அமைப்புக்களின் பிரிவுகள் குறித்து தெளிவு இருக்கவில்லை.
அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். மதுரையில் ஒரு புகைப்பட கண்காட்சி நடத்தியது ஈ.பி.ஆர்.எல்.எஃப். கண்காட்சியை முன்னிட்டு ஒரு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்ள மதுரை மேயர் பழனிவேல்ராஜன் (பெயர் சரியாக நினைவில்லை) அழைக்கப்பட்டிருந்தார்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் சார்பாக டேவிற்சன் அவரை வரவேற்றார். மதுரை மேயர் கேட்ட முதல் கேள்வி: “உங்க தலைவர் பிரபாகரன் செயக்கியங்களா?”
அவருக்கு நீண்ட நேரமாக எல்லா விளக்கம் கொடுத்தார் டேவிற்சன். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, கூட்டத்திலும் உரையாற்றி முடித்துவிட்டு, விடைபெறும் போது டேவிற்சனிடம் சொன்னார் மதுரை மேயர்: “பிரபாகரனிடம் நான் ரொம்பக் கேட்டதாகச் சொல்லுங்கள்.” டேவிற்சன் முகத்தில் ஈயாடவில்லை.
உமாவின் விளக்கம்
ஈழப் போராளி அமைப்புக்கள் தமது பிரிவுகள் வேறுபாடுகள் பற்றிச் சொன்ன விளக்கங்கள் தமிழக மக்களுக்கு புரியவில்லை.
பொதுவாக இரண்டே இரண்டு கேள்விகள் கேட்பார்கள்.
“நீங்கள் அனைவரும் ஏன் ஒன்றுபடக்கூடாது?”
“புலிகள்தானே தாக்குதல் நடத்துகிறார்கள்? யார் பெரிய இயக்கம்?”
நான்கு இயக்க கூட்டமைப்பு உருவான பின்னர் புளொட் அமைப்பு தான் வெளியே நின்றது. எனவே, மேற்கண்ட இரு கேள்விகளுக்கும் புளொட் தான் கூடுதலாகப் பதில் சொல்ல வேண்டியிருந்தது.
1985 மே மாதம் 16ம் திகதி பெங்க@ரில் ஒரு பத்திரிகையாளர் மாநாடு நடத்தினார் உமாமகேஸ்வரன்.
ஏன் பரவலான தாக்குதல்களை புளொட் அமைப்பு நடத்தவில்லை என்பதற்கு உமா சொன்ன விளக்கம் இது:
“பொதுவாக கொரில்லா போர் முறை எல்லா நாடுகளிலும் வெற்றி பெற்றுவிடாது. இலங்கையைப் பொறுத்தவரை பூகோள அமைப்பு முறையை வைத்து கணித்தால் இங்கு கொரில்லா போர் வெற்றி பெற வழியில்லை. ஆகவேதான் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்களைத் திரட்டி மக்கள் யுத்தம் நடத்த வேண்டும் என்கிறோம்.
யாழ்ப்பாணத்திற்குள் தாக்குதல் நடத்துவது கூடாது. ஒரு சிறிய வெற்றிக்காக பெரிய இழப்புக்களை ஏற்படுத்திக் கொள்வது சரி இல்லை. இதில் தான் புலிகளோடு நாங்கள் வேறுபடுகிறோம்.” என்றார் உமாமகேஸ்வரன்.
புளொட் அமைப்புத் தான் பெரியது என்று சொல்லவும் அவர் மறக்கவில்லை.
“தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் 6 ஆயிரம் பேர் கொண்ட படை வைத்திருக்கிறது. ஏனைய இயக்கங்கள் அனைத்தும் 4ஆயிரம் பேர் இருக்கிறார்கள். மொத்தம் 10 ஆயிரம் பேர் கொண்ட படை இருக்கிறது” என்று சொல்லியிருந்தார் உமாமகேஸ்வரன்.
அதாவது எனைய இயக்கங்கள் அனைத்தும் சேர்ந்தால்கூட புளொட் அமைப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கு கிட்டவும் வரமுடியாது என்று மறை முகமாகச் சொல்லிவிட்டார்.
உண்மையில் அப்போது ஏனைய இயக்கங்களைவிட (தனித்தனியாக) புளொட் அமைப்பில்தான் உறுப்பினர்கள் தொகை அதிகம்.
ஆனால் அது உமா சொன்ன கணக்கல்ல. புளொட் மட்டுமல்ல சகல அமைப்புக்களுமே போட்டி காரணமாக தமது ஆட் பலத்தை மிகைப்படுத்தியே கூறி வந்தன.
துறைமுகத்துக்குள் புகுந்த கரும் புலிகள்
17-10-1995 அதிகாலை மூன்றுமணிக்கு திருமலை துறைமுகத்துக்குள் ஊடுருவி கடற்கரும் புலிகளால் இலங்கை கடற்படைக்கு சொந்தமான 3கடற்படகுகள் தாக்கப்பட்டன.
ஒரு தறையிறங்கு கப்பல், ஒரு அதிவே படை வீரர் கப்பல், ஒரு டோறா அதிவே பீரங்கிப் படகு என்பனவே தகர்க்கப்பட்ட படகுகளாகும். இத்தாக்குதலை சுலோஜன் நேரடி நீச்சல் பிரிவின் கரும்புலிகளும், அங்கயற்கண்ணி நேரடி நீச்சல் பிரிவின் கரும்புலியும் மேற்கொண்டு பலியாகினர்.
மூன்றாம் கட்ட ஈழுப்போரில் திருமலை துறைமுகத்தில் கடற்கரும்புலிகள் நடத்திய இரண்டாவது தாக்குதல் இது.
Average Rating