“உன்னை, கழுத்து வெட்டி கொலை செய்வேன்” யாழில் ஊடகவியலாரை மிரட்டிய துவாரகேஸ்வரன்; பொலிஸ் முறைப்பாடு பதிவு..!!
யாழில் உள்ள டான் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஊடகவியலாளராக பணியாற்றிய நடராஜா குகன் என்பவருக்கு ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் என கூறும் தியாகராஜா துவாரகேஸ்வரனால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஊடகவியலாளர் யாழில் உள்ள தொலைக்காட்சி நிறுவனமொன்றில் பணியாற்றி வரும் நிலையில் அவருக்கு சற்றுமுன்னர் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய “தானே ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரென” தன்னைத்தானே கூறிக் கொள்ளும் தியாகராஜா துவாரகேஸ்வரன் “உன்னை கழுத்து வெட்டி கொலை செய்வேன், நான்தான் யாழ்ப்பாணத்தில் தாதா, என்னை கேட்டுத்தான் எல்லாம் நடக்கும், உன்னை வீடு வந்து தூக்குவேன்”.என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஊடகவியலாளர், தற்பாதுகாப்பு காரணமாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். எனினும் குறித்த கொலை மிரட்டலுக்கான காரணம் உடனடியாக அறிய முடியவில்லையாயினும் நாளையதினம் போலிஸ் நிலையத்தில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக யாழ். போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்ளர் தெரிவித்தார்.
மேலும் இவ்ஊடகவியலாளர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் கடற்புலி போராளியாக இருந்து, குறித்த ஊடக நிறுவனத்தில் இணைந்து ஊடகத்துறையில் சிறப்பாக சேவையாற்றி வருகின்றார்.
அண்மையில் துவாரகேஸ்வரனால் யாழ் ஊடக அமையத்தில் நடாத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பு தொடர்பாக எந்த ஒரு ஊடகமும் செய்தியாக பிரசுரிக்கவில்லை. காரணம் அச்சந்திப்பில் ஊடக பிரதானி ஒருவரையும், ஊடகவியலாளர் ஒருவரையும் அவதூறு செய்யும் வகையில் கருத்துக்களை தெரிவித்தமையாகும்.
அத்துடன் ஆதாரமில்லாத கருத்துக்களை அண்மையில் ஊடகங்களிற்கு வழங்கி தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தியமையினால் துவாரகேஸ்வரனது செய்திகளை பிரசுரிப்பதில் ஊடகங்கள் பின்னிக்கின்றன.
அடுத்ததாக முகநூல் வாயிலாகவும் தொலைபேசி ஊடகவும் செய்தியாளர்களை விமர்சிக்கும், & தூற்றும் போக்கு இவரிடத்தில் காணப்பட்டது.
தற்போது இவரினால் அச்சுறுத்தலுக்குள்ளான ஊடகவியலாளர் குகராஜ் ஒரு சிறந்த செய்தி சேகரிப்பாளராவார். வட பகுதியில் இவரது செயற்பாடு குறித்து ஊடக நண்பர்கள் பலர் நல்லபிப்பிராயம் தெரிவித்துள்ளனர்.
இவ்ஊடகவியலாளர் துவாரகேஸ்வரனின் அண்ணியாரும், தற்போதைய சிறுவர் மகளீர் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரனின் உறவினர் என்பதுடன் அமைச்சரின் முக்கிய ஊடக செயற்பாட்டாளராகவும் இருந்து வருகின்றார்.
இந்நிலையில் சிறப்பாக ஊடகத்துறையில் கால்பதித்து வந்த இவரை துவாரகேஸ்வரன் மிரட்டியமை எமது “அதிரடி” ஊடகமும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
அதேவேளை இந்த கொலைமிரட்டல் விடுத்த துவாரகேஸ்வரனை “நல்லாட்சி புரிவதாகக்” கூறும், இலங்கை அரசும், யாழ். பொலிசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென “அதிரடி” இணையம் வேண்டுகிறது.
Average Rating