கைது செய்யப் பட்டிருக்கும் அப்பாவி மக்களின் விடுதலை குறித்து ஐனாதிபதியுடனான சந்திப்பில் EPDP செயலாளர் நாயகம் டக்ளஸ் எடுத்துரைப்பு!
தலைநகர் கொழும்பில் புலிகளால் நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல்களினால் கைது செய்யப்பட்டிருப்போர் நிலைமைகள் குறித்து செயலாளர் நாயகமும் அமைச்சருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றார். நேற்றைய தினம் 03.12.2007 அன்று ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களையும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஐபக்ச அவர்களையும் சந்தித்திருந்த செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இருவருடனும் விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளார். புலித்தலைமையினால் திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்டு வரும் வன்முறை தாக்குதலினால் அரசாங்கம் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்த நிலைமைகளை தாம் கருத்தில் கொள்வதாகவும், ஆனாலும் இப்பாதுகாப்பு நடவடிக்கைகள் அப்பாவி மக்களின் மீது அவலங்களை சுமத்துவனவான அமைந்துவிடக்கூடாது என்றும் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எடுத்து விளக்கியிருந்தார்.
வெளிநாடு செல்லும் நோக்கிலும், மருத்துவ வசதிகள், வேலைவாய்ப்புக் கருதியும், மற்றும் புலித்தலைமையின் யுத்த வன்முறையினால் தமது சொந்த இடங்களில் வாழ முடியாத சூழலிலும் தலைநகர் கொழும்பில் ஆயிரக்கணக்கான தமிழ்பேசும் மக்கள் தற்காலிகமாக தங்கியிருந்து வருகின்றனர். தவிர, கொழும்பில் நீண்ட காலமாக நிரந்தரமாகவும் தமிழ்பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இந்நிலையில் அப்பாவி மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி, அப்பாவி மக்களுடன் மக்களாக வன்முறைகளை நடத்தும் நோக்கில் புலிகளும் ஊடுருவியிருக்கும் நிலைமைகள் குறித்து இச்சந்திப்பின் போது ஆராயப்பட்டது.
புலிகளின் நாசகார வன்முறை நடவடிக்கைகளினால் அப்பாவி மக்களே பெரிதும் அவலங்களை சந்திக்க நேரிடுவது குறித்து செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களிடமும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அவர்களிடமும் விரிவாக எடுத்து விளக்கியிருந்தார்.
இச்சந்திப்போது கைது செய்யப்பட்டிருப்பவர்கள் அனைவரும் துரித விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அப்பாவிமக்களை உடன் விடுவிப்பதற்கான நடவடிக்கையில் உடனடி அக்கறை செலுத்துவதாகவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
*****இதேவேளை, கைதுசெய்யப்பட்டிருப்பவர்களின் உறவினர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிவிப்பதற்காக, செயலாளர் நாயகமும் அமைச்சருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பணிப்புரையின் பேரில் தொலை பேசி இலக்கத்தினையும் ஈ.பி.டி.பி யின் தலைமைப்பணிமனை மக்களுக்கு அறியத்தருகின்றது.
011 – 2593515, 011 – 2503467 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு……
கைது செய்யப்பட்டிருப்பவரின் முழுப்பெயர்?
கைது செய்யப்பட்ட இடம்?
அறிந்திருந்தால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடம், திகதி?
அடையாள அட்டை இலக்கம்?
தொடர்பு கொள்பவரின் விபரம்?
எம்முடன் தொடர்பு கொள்வதற்கான சிபார்சு செய்யப்பட்டிருந்தால், சிபார்சு செய்தவரின் பெயர்?
போன்ற விபரங்களோடு தொடர்பு கொள்ளுமாறு ஈ.பி.டி.பியின் தலைமைப்பணிமனை எமது உறவுகளுக்கு அறிவிப்பு விடுக்கின்றது!
தகவல்;-….. தொடர்பு செயலாளர், ஈழ மக்கள் ஐனநாயக கட்சி (ஈ.பி.டி.பி)