விஜயகாந்த்துக்கு ரஜினி வாழ்த்து!
அரசியல் குதிரையில் ஏறி உட்கார்ந்துள்ள விஜயகாந்த் முதல் சுற்றில் வெற்றி பெற்று விட்டார். தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. எதையோ எதிர்பார்த்து அத்தனை பேரும் காத்திருந்தார்கள். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ரஜினிகாந்த், விஜயகாந்த்தை வாழ்த்திப் பேசினார்.
ரஜினியின் பேச்சு:- 50 ஆண்டுகளுக்கு முன்பு துடிப்பான 2 இளைஞர்கள் நெஞ்சில் துடிப்பு, ஆர்வம், லட்சியங்களோடு இந்தக் கடற்கரைக்கு வந்தனர். காதலித்த பெண்ணை மணந்து கொண்டு, மனம் போல பணம் சம்பாதித்து வாழ்க்கையில் செட்டில் ஆகி விட வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், இந்த மண்ணுக்கு , நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து அந்த இரண்டு இளைஞர்களும் இந்த வங்கக் கடலோரத்தில் நடந்தார்கள்.
அப்போது இங்கு 2 அல்லது 3 சிலைகள்தான் இருந்திருக்கும். அதில் ஒரு இளைஞர் இன்னொருவரிடம் சொன்னார். இந்த இடத்தில் ஒரு காலத்தில் எனது சிலையும் இருக்கும்.
அந்த அளவுக்கு நான் வாழ்ந்து காட்டுவேன் என்றார். நீ அந்த மாதிரி செய்தால் உனக்கு நானே சிலை வைக்கிறேன் என்று இன்னொரு இளைஞர் கூறினார்.
அதற்கு முதல் இளைஞர், பைத்தியக்காரா, நீ எனக்கு சிலை வைக்க வேண்டும் என்றால், நீ என்னை விட தகுதியானவனாக இருக்க வேண்டும், என்னை விட பெரிய ஆளாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
அந்த இளைஞர்களில் ஒருவர் பெயர் கருணாநிதி, இன்னொருவர் வி.சி.கணேசன். காலப்போக்கில் அவர்கள் பெயர்கள் மாறின, உருவங்களும் மாறின. இவர் கலைஞர் ஆனார், அவர் சிவாஜி கணேசன் ஆனார்.
ஒரு மனிதனைப் பற்றி அவனது மனைவிக்குக் கூட 50 சதவீதம்தான் தெரியும். ஆனால் ஒரு நண்பனுக்குத்தான் அவனை முழுமையாகத் தெரியும். அப்படி முழுமையாகத் தெரிந்த நண்பர் இங்கு சிலையாக இருக்கிறார்.
அரசியல் என்பது ஒரு மாதிரி குதிரை, சினிமா என்பது இன்னொரு மாதிரி குதிரை. எம்.ஜி.ஆர். அந்த இரண்டு குதிரைகளிலும் ஏறிப் பழக்கப்பட்டவர்.
இப்போது விஜயகாந்த் அரசியலில் இறங்கி இருக்கிறார். முதல் சுற்றில் அவர் வெற்றி பெற்று விட்டார். அவர் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகள். அந்தக் குதிரையை ஓட்டுவதற்கு மிகப் பெரிய திறமை வேண்டும். நல்ல ஜாக்கி வேண்டும்.
இங்கு மஞ்சள் துண்டு போட்டு இருப்பவரைப் பாருங்கள். இவர் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அரசியலிலும் சிறந்தவர். அரசியலில் எம்.ஜி.ஆர். கருணாநிதி இருவரும் 2 குதிரைகளை ஓட்டுவதற்கு மிகச் சிறந்த திறமை பெற்றவர்கள் என்றார் ரஜினிகாந்த்.
நிகழ்ச்சிக்கு அதிமுகவைச் சேர்ந்த நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, பாண்டியன், நடிகைகள் விந்தியா, கோவை சரளா உள்ளிட்ட யாருமே வரவில்லை. அதேபோல இயக்குநர் பாரதிராஜா, பாலச்சந்தர் உள்ளிட்ட பிரபலங்களும் வரவில்லை.
திரையுலம் ஒட்டுமொத்தமாக திரண்டு வந்து நடிகர் திலகத்தை வாழ்த்தும் என்ற எதிர்பார்ப்பு இவர்கள் வராததால் பொய்த்துப் போனது.