குன்னத்தூர் அருகே 10–ம் வகுப்பு மாணவி கொலையில் பரபரப்பு தகவல்கள்…!!
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் நல்லிகவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் அமல்ராஜ் கூலி தொழிலாளி. இவரது மகள் பூரணி(வயது 16). பாட்டி வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார்.
அமல்ராஜின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் வண்ணாரை. இவரது மகன் ஆனந்தன்(23). பெயிண்டராக வேலைபார்த்து வருகிறார். 4–ம் வகுப்பு வரை படித்துள்ளார். ஆனந்தன் கடந்த 2 ஆண்டாக பூரணியை ஒருதலையாக காதலித்து வந்தார்.
இந்த விவகாரம் இருவரின் பெற்றோருக்கும் தெரியவரவே அவர்கள் ஆனந்தனை கண்டித்தனர்.
பூரணி உனக்கு தங்கை முறை. அவளை நீ காதலிப்பது முறை அல்ல. எனவே காதலை கைவிட்டு விட்டு ஒழுக்கமாக வாழும் வழியைப்பார். உனக்கு வேறு இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம் என்றனர்.
ஆனந்தன் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் பூரணியை ஒருதலையாக தீவிரமாக காதலித்து வந்தார். ஆனால் பூரணி, ஆனந்தனை ஏறெடுத்து பார்க்கவில்லை.
இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக வீட்டுக்கு வந்திருந்த பூரணியை ஆனந்தன் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். பின்னர் அவரும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள ஆனந்தன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மாணவி கொடூர கொலை குறித்து குன்னத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:–
பெயிண்டராக வேலை பார்க்கும் ஆனந்தனுக்கு சரியாக காது கேட்காது. எனவே அவர் தனது காதலை கடிதம் மூலமாக பூரணிக்கு தெரிவித்திருக்கிறார். பக்கத்து வீடு என்பதால் தனது உள்ளத்து ஆசைகளை கடிதமாக எழுதி அதனை பூரணியின் வீட்டுக்குள் வீசியிருக்கிறார். அந்த கடிதத்திலேயே பூரணி தனது எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்.
நான் உனக்கு தங்கை முறை. ‘நீ வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழும் வழியைப் பார். நானும் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்கிறேன்’ என்று எச்சரித்திருக்கிறார்.
இது ஆனந்தனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. என்னை காதலிக்கா விட்டால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்று எச்சரித்திருக்கிறார். ஆனால் பூரணி அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் பூரணி சூரியப்பம்பாளையத்தை சேர்ந்த வாலிபரை காதலித்திருக்கிறார். இந்த தகவல் ஆனந்தனுக்கு தெரிய வரவே கொதித்துப்போனார்.
என்னை காதலிக்க மறுத்து விட்டு வேறு ஒருவரை காதலிக்கிறாயா? உன்னை என்ன செய்கிறேன் பார் என்று மனம் புழுங்கினார்.
சரி கடைசியாக இன்னும் ஒரு தடவை கேட்டுப் பார்ப்போம் என்று புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக வந்த பூரணியிடம் தனது உள்ளத்து ஆசைகளை கூறியிருக்கிறார். அவர் முகத்தில் அறைந்தாற் போல நீ திருந்தவே மாட்டாயா? என்று கோபமாக திட்டியிருக்கிறார். இதனால் ஆனந்தன் ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து பூரணியை கொலை செய்திருக்கிறார்.
பின்னர் போலீசார் எப்படியும் நம்மை கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
குற்றுயிராய் கிடந்த அவரை போலீசார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர் ‘என்னை காப்பாற்ற வேண்டாம். தயவு செய்து என்னையும் கொன்று விடுங்கள்’ என்று மன்றாடியிருக்கிறார்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சிகிச்சை முடிந்த பின்னர் ஆனந்தனிடம் போலீசார் முழுமையாக விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
Average Rating