நீரிழிவைக் கட்டுப்படுத்தும் கொய்யா..!!
கொய்யாக்கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மிகக் குறைந்த விலையில் அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்ட பழம் ஆகும்.
கொய்யாவில் பலவகைகள் உள்ளன. தற்போது விற்பனைக்கு வரும் பழங்களில் உள் சதைப்பகுதி வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் காணப்படுகின்றன.
ஒரு சில வகை கொய்யாவின் சதைப்பகுதி இளச்சிவப்பு நிறத்தில் காணப்படும். இவை அனைத்தினதும் மருத்துவப் பயனும் ஒன்றாகும்.
இதில் அதிகளவு விட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக நெல்லிக்கனிக்கு அடுத்த நிலையில் விட்டமின் சி சத்து கொண்ட பழம் கொய்யா ஆகும்.
அனைத்து நோய்களின் தாக்கமும் மலச்சிக்கலில் இருந்துதான் ஆரம்பிக்கும். மலச்சிக்கலைப் போக்கினாலே நோயில்லா நல்வாழ்வு வாழலாம் என்பது சித்தர்களின் கூற்று ஆகும். நன்கு கனிந்த கொய்யாப் பழத்தை இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். குடலின் செரிமான சக்தி அதிகரிக்கும்.
தற்போதைய உணவுகளில் அதிகம் வேதிப் பொருட்கள் கலந்திருப்பதால் அவை அஜீரணத்தை உண்டாக்கி வயிற்றுப் புண்ணை ஏற்படுத்துகிறது. இதனைப் போக்க உணவுக்குப்பின் கொய்யாப்பழம் சாப்பிடுவது மிக நல்லது. மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் இப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் மூல நோயிலிருந்து விடுபடலாம்.
கல்லீரலை பலப்படுத்த கொய்யாப்பழத்தை அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.
நீரிழிவு நோயாளிகளுக்கு: நீரிழிவு நோயின் தாக்கம் கண்டாலே அதை சாப்பிடக் கூடாது இதை சாப்பிடக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் பாடாய்ப்படுத்தும். ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகும் பாதிப்புகளை குறைக்க கொய்யாப்பழம் உகந்தது. மேலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் தன்மையும் உண்டு.
இரத்தச்சோகை மாறும்: இரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதால் இரத்தச்சோகை உண்டாகிறது. கொய்யாப்பழம் இரத்தச்சோகையை மாற்றும் தன்மை கொண்டது.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு: குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான விட்டமின் சி சத்து கொய்யாப்பழத்தில் அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு அளவோடு கொய்யாப்பழத்தைக் கொடுத்து வந்தால் குழந்தைகளின் எலும்புகள் பலப்படும். பற்கள் பலமடையும். நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.குழந்தைகளுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும். சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொய்யாவுக்கு உண்டு. நரம்புகளைப் பலப்படுத்தும். உடலின் உஷ்ணத்தைக் குறைக்கும்.
கொழுப்பைக் குறைக்கும்: அதிக இரத்த அழுத்தம், அதிக கொழுப்பை குறைக்கும் தன்மை கொய்யாவுக்கு உண்டு. தினமும் இரண்டு கொய்யாப்பழம் உண்டு வந்தால் கொலஸ்ட்ரோல் குறையும் என இந்திய இருதய ஆராய்ச்சி நிறுவனம் ஆராய்ச்சி செய்து தெரிவித்துள்ளது.
இதய படபடப்பு நீங்கும்: ஒரு சிலருக்கு சிறிது வேலை செய்தால் கூட இதயம் படபடப்பு உண்டாகிவிடும். உடலில் வியர்வை அதிகம் தோன்றும். இது இதய நோயின் அறிகுறியாகக்கூட அமையலாம். இந்த படபடப்பைக் குறைக்க கொய்யாப் பழம் மிகவும் உகந்தது. இதய படபடப்பு உள்ளவர்கள் தினம் ஒரு கொய்யாப்பழம் உண்பது நல்லது.
Average Rating