புற்றுநோய் ஏற்பட்டதாக பொய் கூறி நிதி சேகரித்த அமெரிக்க அழகுராணிக்கு எதிராக வழக்கு…!!
தனக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக பொய் கூறி, நிதி சேகரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அமெரிக்க அழகுராணி ஒருவருக்கு எதிராக வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
பிராண்டி லீ வீவர் கேட்ஸ் எனும் யுவதி இவ்வருடம் பென்சில்வேனியா மாநில அழகுராணியாக முடிசூட்டப்பட்டிருந்தார்.
தற்போது 23 வயதான வீவர் கேட்ஸ் தனக்கு புற்றுநோய் ஏற்பட்டதாகக் கூறி தனது சிகிச்சைகளுக்காக நிதி சேகரிக்க ஆரம்பித்தார். கடந்த இரு வருடகாலமாக இவர் தொடர்ச்சியாக நிதி திரட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாகக் கிடைத்த இரகசியத் தகவல்களையடுத்து, பென்சில்வேனியா மாநில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். அதன்பின் கடந்த ஓகஸ்ட் மாதம் வீரர் கேட்ஸ் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. வஞ்சகமாக பணம் திருடியதாக வீவர் கேட்ஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, வீவர் கேட்ஸுக்கு நிதி வழங்கி பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்தால் அவருக்கு எதிராக மேலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம் என பென்சில்வேனியா மாநில பொலிஸ் அதிகாரியான தோமஸ் ஸ்டொக் தெரிவித்துள்ளார்.
“புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களை தமது குடும்பத்தினராக, நண்பர்களாக, அயலவர்களாக கொண்ட மக்கள் பலர் உள்ளனர்.
துரதிஷ்டவசமாக அவர்களின் அனுதாபத்தை பயன்படுத்தி முறையற்ற விதமாக நன்மையடைவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்” எனவும் மேற்படி அதிகாரி தெரிவித்துள்ளார்.
தலையை மொட்டையடித்துக்கொண்டு முகமூடி அணிந்த நிலையில் புற்றுநோய் நிதி சேகரிப்பு நிகழ்வுகளில் வீவர் கேட்ஸ் கலந்துகொண்டிருந்தார். அவரை பார்த்து பரிதாபமடைந்த பலர் அவருக்கு நிதி வழங்கினர்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிகழ்வொன்றில் 14,000 டொலர்களை சுமார் (20,00,000ரூபா) வீவர் கேட்ஸ் சேகரித்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
அந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த நன்கொடையாளர்கள் முன்னிலையில் வீவர் கேட் உரையாற்றுகையில், “எமது சமூகத்தினர் எவ்வளவு சிறந்தவர்கள் என்பதை இது வெளிப்படுத்துகிறது.
வாழ்க்கையில் மிகக் கடினமான தருணத்தை எதிர்கொண்டுள்ள ஒருவருக்கு உதவுவதற்காக இவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள்” எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தனக்குப் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
புற்றுநோய் ஏற்பட்டிருப்பதை தனது குடும்பத்தினரிடம் எவ்வாறு தெரிவிப்பது என்பது குறித்து தான் கவலை கொண்டிருந்ததாகவும் அவர் கடந்த வருடம் பத்திரிகையொன்றுக்கு அளித்த செவ்வியில் கூறினார்.
வீவர் கேட்டின் அழகுராணி பட்டம் பறிக்கப்பட்டுள்ளதாக மிஸ் பென்சில்வேனியா யூ.எஸ். இன்டர்நெஷனல் அழகுராணி போட்டியின் இணைப்பாளர்களான பட்லர்ஸ் பியூட்டிஸ் நிறுவனத்தினர் ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வீவர் கேட்ஸ் 150,000 டொலர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது. ஆனால், அவர் பிணையில் வெளிவருவார் என நான் எண்ணவில்லை.
மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். அவர் விடுவிக்கப்பட்டால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என பொலிஸ் அதிகாரி தோமஸ் ஸ்டொக் தெரிவித்துள்ளார்.
தற்போது வீவர் கேட்ஸ் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
Average Rating