விமானக் குண்டு வீச்சு தாக்குதல்களினால் விவசாயிகளே அதிகளவில் பாதிப்பு
வடக்கு மாகாணத்தில் விவசாயிகள் 3 பாகங்களாக திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு- செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பேசும்போதே சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையில்; வடக்கு மாகாணத்தில் எமது மக்கள் 3 பாகங்களிலான திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். முதலாவதாக யாழ்.குடாநாட்டிலும் இரண்டாவதாக “ஏ-9” பாதை மற்றும் உயிலங்குளம் பாதை மூடப்பட்டிருப்பதால் வன்னியிலும் எமது மக்கள் 2 திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அதற்கு அப்பால் வவுனியாவுக்கான ரயில் சேவை மதவாச்சியுடன் நிறுத்தப்பட்டதன் மூலமும் இன்னுமொரு திறந்தவெளி சிறைச்சாலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது, விமானப்படையினரின் குண்டு வீச்சுக்களாலும் வன்னிப் பிரதேசத்தில் எமது விவசாயிகள் விவசாயங்களில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் கிராமப் புறங்களிலுள்ள 4 ஆயிரம் குடும்பங்கள் கடந்த 35 வருடங்களாக காணி அனுமதிப்பத்திரங்களை எடுக்க முடியாமல் இருக்கின்றனர். இதனால் இக்குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் பெயர்களுக்கு காணி உரிமைகளை எழுதிக் கொடுப்பதிலும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர்.
காணி அனுமதிப்பத்திரம் பெறப்போனால் மின் கட்டண பற்றுச்சீட்டு போன்ற உறுதிப்பத்திரங்கள் கோரப்படுகின்றன. அங்கு கிராமப்புறங்களுக்கு மின்சார வசதிகள் இல்லை. எனவே, இந்தக் கிராமப்புற மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்களை வழங்க காணி அமைச்சும் அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல், வவுனியா நகர்ப்புறங்களிலும் பல குடும்பங்கள் நீண்டகாலமாக குத்தகை அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் இருக்கின்றன. இதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் செயற்பட வேண்டும்.
வவுனியா மாவட்டத்தில் 162 குளங்கள் புனரமைக்கப்படாமல் இருக்கின்றன. இவற்றை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன்.
எதைச் சொன்னாலும் அங்கு எந்தப் பிரச்சினையும் இல்லையென்று அரசாங்கம் அசமந்தப் போக்குடன் செயற்படாமல் மனிதாபிமான அடிப்படையில் செயற்பட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மன்னார், வவுனியா மாவட்டங்களில் அரிசி ஆலைகள் தேவையாக இருக்கின்றன. இதற்கும் அரசாங்கம் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதவாச்சியில் புதிய சோதனைச்சாவடி அமைக்கப்பட்டிருப்பதால் விவசாயத்துக்கென எடுத்துச் செல்லப்படும் பொருட்கள் உரிய காலத்துக்குள் எடுத்துச் செல்ல முடியாமல் மேலும் தாமதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் வடக்கிலிருந்தே விவசாய உற்பத்திகள் தெற்கிற்கு எடுத்து வரப்பட்டன. ஆனால், இன்று அங்கிருக்கும் விவசாயிகள் திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணமாக அமைந்திருக்கும் யுத்தத்தை நிறுத்தி உரிய தீர்வினை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.