மலையக இளைஞர் யுவதிகளை தடுப்புக்காவல் உத்தரவின்றி விடுதலை செய்ய ஜனாதிபதி இணக்கம்
தலைநகர் கொழும்பில் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொள்ளும் தேடுதல் நடவடிக்கைகளின்போது கைதுசெய்யப்பட்ட மலையக இளைஞர் யுவதிகளை தடுப்புக்காவல் உத்தரவின்றி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதையடுத்து பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விசாரணையின் பின்னர் தடுப்புக்காவல் உத்தரவின்றி விடுவிக்கப்படுவர் என ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ ஊடாக தமக்கு உறுதிமொழி அளித்துள்ளதாக சமூக அபிவிருத்தி சமூக அநீதி ஒழிப்பு அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான பெ.சந்திரசேகரன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அவசரச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் மேலும் தனது செய்தியில் தெரிவித்துள்ளதாவது; பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழ் மக்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பது இனமுறுகல்களுக்கு வழிவகுக்கும். நீதியான நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவேன் என்ற ஜனாதிபதியின் நோக்கத்திற்கு ஆதரவாக நாம் செயற்பட்டு வருகின்றோம். இந்நிலையில் காரணம் எதுவுமின்றி மலையக இளைஞர் யுவதிகள் விசாரணையின் பேரில் தடுத்து வைக்கப்படுவதால் அவர்கள் பொருளாதார ரீதியாகவும் உளரீதியாகவும் பெரும் பாதிப்புக்குளாகின்றனர். நாட்டின் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டியது நாட்டு பிரஜைகள் ஒவ்வொருவரினதும் கடமையாகும். ஆனால், தமிழர்கள் என்ற ரீதியில் பாகுபாடான தடுத்துவைப்புகளை மலைய மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
இவ்விடயம் தொடர்பாக மலையக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் வாழ்க்கைத் தொழில் நுட்ப பயிற்சி பிரதி அமைச்சருமான பெ.இராதாகிருஷ்ணனிடம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளேன்.
மலையகத்தில் நிலவும் வேலையில்லாப் பிரச்சினை வாழ்வாதார நெருக்கடிகளை சமாளிக்க கூடிய வருமானமின்மை போன்ற பிரச்சினைகளால் தொழிலுக்காக கொழும்பு மற்றும் நாட்டின் பிரதான நகரங்களில் தங்கியிருக்கும் மலையக இளைஞர் யுவதிகளை வகைதொகையின்றி தடுத்து வைப்பது ஜனநாயக அடிப்படை உரிமை மீறல் என்பதோடு இன ரீதியான பாரபட்சமான செயற்பாடாகவும் அமையும்.
சுதந்திர இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் மலையக மக்கள் தமது முழுமையான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இச் சமூகம் ஓரங்கட்டப்படுவதையோ இன ரீதியாக ஒடுக்கப்படுவதையோ எம்மால் அனுமதிக்கமுடியாது.
தலைநகரிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுவரும் தேடுதல்களின்போது கைதுசெய்யப்பட்டுள்ள மலையக இளைஞர் யுவதிகளை தடுப்புப் காவல் உத்தரவின்றி விடுவிப்பதாக ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவூடாக எனக்கு அறிவித்துள்ளார். எதிர்காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளின்போது ஜனநாயக மனித உரிமையை மீறும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெற ஜனாதிபதி இடமளிக்கக்கூடாது என்பதில் நாம் அழுத்தமாகவே நடந்துகொள்வோம்.