தமிழகத்தில் உள்ள குடிகாரர்களின் எண்ணிக்கை ஒரு கோடி : ரூ.10 ஆயிரம் கோடிக்கு சரக்கு விற்க இலக்கு!!
தமிழக அரசின் `டாஸ்மாக்’ நிறுவனத்தின் மூலம் மாநிலம் முழுவதும் ஆறாயிரத்து 700 மதுக் கடைகள் இயங்கி வருகின்றன. தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஒன்பது நிறுவனங்களிடம் இருந்து பிராந்தி, விஸ்கி, ரம், ஒயின், வோட்கா மற்றும் பீர் வகைகள் வாங்கப்பட்டு டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அயல்நாட்டு இந்திய தயாரிப்பு மதுபான வகைகளில் 95 பிராண்டுகளும், பீர் வகையில் 12 பிராண்டுகளும் விற்பனையாகிறது. மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் தினந்தோறும் சராசரியாக 90 ஆயிரம் பெட்டிகள் அயல்நாட்டு மதுபானங்களும், 45 ஆயிரம் பெட்டிகள் பீரும் விற்பனையாகி வருகிறது. தமிழக டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு 25 கோடி ரூபாய் அளவுக்கு சரக்கு விற்பனை நடந்து வருகிறது. விடுமுறை நாளான ஞாயிறு அன்று மட்டும் ஒரு கோடியே 10 லட்சம் பெட்டிகள் `சரக்கு’ விற்பனையாகிறது. அன்று மட்டும் சராசரியாக தமிழகத்தில் 60 லட்சம் பேர் குடிப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற விழாக் காலங்களின் போது மதுபான விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. கடந்த தீபாவளியன்று ஒரு நாள் மட்டும் 60 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளின் விற்பனை ஆண்டுக்காண்டு அதிகரித்து வரும் நிலையில் அரசுக்கு கிடைக்கும் வருவாயும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2005-06ம் ஆண்டு ஏழாயிரத்து 338 கோடி ரூபாய்க்கு மதுபான விற்பனை நடந்தது. இதில் ஆறாயிரத்து 30 கோடி ரூபாய் ஆயத் தீர்வை மற்றும் விற்பனை வரி மூலம் அரசுக்கு வருவாயாக கிடைத்துள்ளது.
2006-07ம் ஆண்டில் எட்டாயிரத்து 900 கோடி ரூபாய்க்கு மதுபான விற்பனை நடந்துள்ளது. இதில் ஏழாயிரத்து 450 கோடி ரூபாய் அரசுக்கு வருவாயாக கிடைத்துள்ளது. தற்போது 2007-08ம் ஆண்டில் மதுபான விற்பனையை 15 சதவீதம் அதிகரித்து பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனை செய்ய டாஸ்மாக் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதற்கிடையே, `குளோபல் சர்வே’ என்ற அமைப்பினர் நாடு முழுவதும் உள்ள குடிகாரர்கள் குறித்து ஒரு சர்வே நடத்தியுள்ளனர். இதில் நாட்டில் அதிக அளவு `குடிமகன்கள்’ உத்தரபிரதேசத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வாழும் 16 கோடி பேரில் மூன்று கோடியே 50 லட்சம் பேர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றனர்.
உத்தரபிரதேச மொத்த மக்கள் தொகையில் 21 சதவீதம் பேர் குடிகாரர்களாக உள்ளனர். குடிக்கும் பழக்கம் அதிகம் உள்ளவர்கள் பட்டியலில் தமிழகம் இரண்டாமிடத்தில் உள்ளது. தமிழக மக்கள் தொகையான ஆறு கோடியில் ஒரு கோடி பேர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் இது 16 சதவீதம் .
குடிகாரர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைப் போல் மதுபான உற்பத்தி நிறுவனங்களின் லாபமும் பல மடங்கு உயர்ந்துள்ளது. உதாரணமாக `யுனைடெட் பிரூவரிஸ்’ மதுபான நிறுவனம் கடந்த 83ம் ஆண்டு 450 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. இதே நிறுவனம் நடப்பு ஆண்டு 12 ஆயிரத்து 200 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. `
நேஷனல் சர்வே ஆப் டிரக் அபியூஸ்’ என்ற அமைப்பினர் நடத்திய ஆய்வில் 65 சதவீதம் பேர் போதை காரணமாகவே விபத்தில் சிக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பெருகவும் போதைப் பழக்கம் முக்கிய காரணமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கோடிகளை கொட்டும் குடிமகனுக்கு அவமரியாதை : அரசும் மதுபான நிறுவனங்களும் கோடி கோடியாய் வருமானம் குவிக்க காரணமாக இருப்பவர்கள் `குடி’ மகன்கள். ஆனால், அவர்களை ஏமாற்றி டாஸ்மாக் ஊழியர்கள் கொள்ளையடிப்பது ஒருபுறம் தொடர்கிறது. `சரக்கு’ பாட்டிலின் மூடியை உடையாமல் கழட்டி தண்ணீர் கலந்து (ரிங் போடுதல்) விற்பது, கேட்ட `சரக்கை’ கொடுக்காமல் மாற்றிக் கொடுப்பது, பராமரிப்பில்லாத `பார்’களில் அதிக விலைக்கு தின்பண்டங்களை விற்பது, இலவச `பார்’ இடத்தை சுருக்கிவிட்டு கட்டணம் செலுத்தி குடிக்கும் இடத்தை அதிகரிப்பது என `குடிமகன்’களை வஞ்சிக்கும் செயல்கள் தொடர்கின்றன.
`குவார்ட்டர்’ பாட்டிலுக்கு ஒரு ரூபாய், `ஆப்’ பாட்டிலுக்கு இரண்டு ரூபாய் என அதிக விலை வைத்து விற்பது அனைத்து கடைகளிலும் தொடர்ந்து வருகிறது. இதன் மூலம் மட்டும் மாதம் ஒன்றுக்கு ஒரு டாஸ்மாக் ஊழியருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை கிடைத்து வருகிறது. இதனை தட்டிக் கேட்கும் `குடிமகன்களை’ அவமரியாதை செய்வது தொடர்கிறது. டாஸ்மாக் நிர்வாகம் தனிப்படை அமைத்து ஆய்வு மேற்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்ட இரண்டாயிரம் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும், இந்த முறைகேடுகள் குறையாத நிலை உள்ளது.