குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழாவில் கோஷ்டி மோதல்: போலீஸ் ஜீப் உடைப்பு…!!
தக்கலை அருகே உள்ள கீழ கல்குறிச்சியைச் சேர்ந்தவர் டென்னிசன் (வயது 52). கூலித்தொழிலாளி. இவர் தனது வீட்டு முன்பு கிறிஸ்துமஸ் குடில் அமைத்திருந்தார்.
நேற்று நள்ளிரவு இந்த குடிலை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். இன்று காலை விழித்தெழுந்த டென்னிசன், குடில் எரிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி அவர் தக்கலை போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும், தனக்கும் தகராறு இருந்து வந்தது. இந்த தகராறில் தான் அவர்கள் என் வீட்டு முன்பு இருந்த குடிலுக்கு தீ வைத்து இருக்க வேண்டும் என சந்தேகிக்கிறேன் என குறிப்பிட்டு இருந்தார். அதன்பேரில் போலீசார் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல மண்டைக்காடு அருகே கிறிஸ்துமஸ் விழாவில் ஏற்பட்ட பிரச்சினையில் போலீஸ் ஜீப் கல் வீசி உடைக்கப்பட்டது. லெட்சுமிபுரம் அழகன்பாறை விளையைச் சேர்ந்தவர் சகாய ரெபின் (வயது 25). டெல்லியில் கார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
தற்போது கிறிஸ்துமசை கொண்டாட விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று இரவு இவர் தனது நண்பர் ரீகனுடன் நெய்யூரில் வைக்கப்பட்டு இருந்த கிறிஸ்துமஸ் குடிலை பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் சென்றார். குடிலை பார்த்து கொண்டு இருந்தபோது சகாய ரெபினுக்கும், நெய்யூரைச் சேர்ந்த சில வாலிபர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நெய்யூர் வாலிபர்கள் சகாய ரெபின், ரீகன் ஆகியோரை தாக்கியதுடன் அவர்கள் வந்த மோட்டார்சைக்கிளையும் கைப்பற்றி தங்கள் வசம் வைத்துக் கொண்டனர்.
இதுபற்றி சகாய ரெபின் இரணியல் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்து தலைமையிலான போலீசார் ஜீப்பில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு நின்ற சில வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்து கொண்டு இருந்தனர். அப்போது சிலர் போலீஸ் ஜீப் மீது சரமாரியாக கற்களை வீசி விட்டு தப்பிச் சென்றனர். இதில் ஜீப்பின் முன் பக்க கண்ணாடி உடைந்து விழுந்தது.
அதிர்ச்சி அடைந்த போலீசார் ஜீப்பை மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அந்த பகுதியைச் சேர்ந்த சிலரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
குளச்சல் அருகே வாணியக்குடியைச் சேர்ந்தவர்களுக்கும், அருகே உள்ள பனவிளை கிராமத்தினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பனவிளையைச் சேர்ந்த ஜான்பிரிட்டோ, கிருஷ்ணன், சுபாஷ், சிவகுமார், முத்தையா, ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து ஜான் பிரிட்டோ குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாணியக்குடியைச் சேர்ந்த வினோத் சஜ்ஜித் (20), காட்சன் ரெஜி (23), விஷால் சாம் (19), அனிஸ், ராபி என்ற அபி ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Average Rating