சர்ச்சையில் சிக்கி உள்ள `இந்தி நடிகை மாதுரி தீட்சித் படத்துக்கு தடை விதிக்க முடியாது’ மத்திய அரசு அறிவிப்பு
நடிகை மாதுரி தீட்சித் நடித்து வெளியாகி உள்ள இந்தி படத்துக்கு நாடு முழுவதும் தடை விதிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரபல இந்தி நடிகை மாதுரி தீட்சித், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி வெளிநாடு சென்றார். இந்த நிலையில் தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தி திரை உலகில் மறு பிரவேசம் செய்துள்ளார். அவர் நடித்த `ஆஜா நச்லே’ என்ற இந்திப் படம் சமீபத்தில் வெளியானது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் உட்பட உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. மாதுரி தீட்சித்தின் தீவிர ரசிகரான ஓவியர் உசேன், துபாயில் உள்ள ஒரு தியேட்டரில் மொத்த டிக்கெட்டுகளையும் வாங்கி குவித்துள்ளார். இந்த நிலையில், `ஆஜா நச்லே’ படத்தின் ஒரு பாடலில் தலித் இனத்தை சேர்ந்தவர்களை இழிவு படுத்தும் விதமாக வரிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அந்த படத்தை உத்தரபிரதேச மாநிலத்தில் திரையிடுவதற்கு தடை விதித்து அந்த மாநில முதல் மந்திரி மாயாவதி, நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதையடுத்து அங்குள்ள அனைத்து தியேட்டர்களிலும் படம் நிறுத்தப்பட்டது. மேலும் நாடு முழுவதும் இந்த படத்துக்கு தடை விதிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மாயாவதி கடிதம் எழுதினார்.
இந்த சூழ்நிலையில், மக்களவையில் நேற்று இந்த பிரச்சினை எழுந்தது. `ஜீரோ நேர’த்தின்போது, இந்திய குடியரசு கட்சியை (ஆர்.பி.ஐ.) சேர்ந்த ராம்தாஸ் அதவாலே எழுந்து, `தாழ்த்தப்பட்ட மக்களை இழிவு படுத்தும் விதமாக பாடல் வரிகள் அமைந்துள்ள `ஆஜா நச்லே’ இந்தி படத்துக்கு நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதிலளித்த மத்திய தகவல் ஒளிபரப்பு துறை மந்திரி பி.ஆர்.தாஸ்முன்ஷி கூறியதாவது:- சர்ச்சைக்குரிய பாடல் வரிகளில் மாற்றம் செய்வதற்கு படத்தின் தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா ஒப்புக் கொண்டுள்ளார். தணிக்கை குழுவின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிட முடியாது. ஆனால் அது தொடர்பாக புகார் கூற விரும்பினால் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை தலைவராக கொண்ட மறு ஆய்வு கமிட்டியிடம் அளிக்கலாம்.
மேலும் ஒரு திரைப்படம் தயாரிக்கும் நிலையில் இருக்கும்போது மட்டுமே மத்திய அரசு தலையிட முடியும். திரைப்படம் தயாரிக்கப்பட்டு, தணிக்கை குழுவின் அனுமதியை பெற்று விட்டால் அந்த படத்தை ஒளிபரப்பவோ அல்லது தடை செய்யவோ மாநில அரசுகளுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. எனவே இந்த படத்தை நாடு முழுவதும் தடை செய்வதற்கு மத்திய அரசால் உத்தரவு பிறப்பிக்க முடியாது.
பஞ்சாப், அரியானாவில் தடை
இதற்கிடையே, பஞ்சாப் மாநிலத்திலும் `ஆஜா நச்லே’ படத்துக்கு நேற்று தடை விதிக்கப்பட்டது. முதல் மந்திரியின் பத்திரிகை ஆலோசகர் ஹர்சரண் பெயின்ஸ் இந்த தகவலை தெரிவித்தார். இந்த தடையைத் தொடர்ந்து லூதியானா, ஜலந்தர், பாட்டியாலா, அமிர்தசரஸ் உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள தியேட்டர்களில் அந்த திரைப்படம் உடனடியாக நிறுத்தப்பட்டது.
இதுபோல, அரியானா மாநிலத்திலும் `ஆஜா நச்லே’ இந்திப் படத்துக்கு நேற்று தடை விதிக்கப் பட்டது. மறு உத்தரவு வரும் வரை அந்த திரைப்படத்தை அரியானாவில் திரையிடக் கூடாது என்று அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தயாரிப்பாளர் மன்னிப்பு
`ஆஜா நச்லே’ படத்துக்கு மற்றொரு சிக்கலும் ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், பாடல் ஆசிரியர் மற்றும் நடிகர், நடிகை உட்பட அனைவருக்கும் நோட்டீசு அனுப்ப தாழ்த்தப் பட்டோருக்கான தேசிய கமிஷன் நேற்று முடிவு செய்தது. இதற்கான நோட்டீசு இன்று அனுப்பப்படுகிறது. இந்த தகவலை, கமிஷனின் தலைவர் பூட்டாசிங் தெரிவித்தார்.
பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து படத் தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா மன்னிப்பு கேட்டார். அவர் கூறுகையில், “நம்முடைய நாட்டில் உள்ள எந்தவொரு சமுதாயம் மற்றும் தனி நபரையோ புண்படுத்தும் எண்ணம் எங்களுக்கு கிடையாது. அவ்வாறு யாருடைய மனதும் புண் பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். `ஆஜா நச்லே’ பட பாடலில் உள்ள வரிகள் நாடு முழுவதும் நீக்கப்படும்” என்றார்.