கடலூர் அருகே சிறுத்தை புலி பீதியால் வீட்டை காலி செய்த மக்கள்…!!
கடலூர் அருகே சாலைக்கரை பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது45).
விவசாய கூலித் தொழிலாளியான இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் அருகில் உள்ள ஒரு கூடாரத்தில் அடைத்து வைத்திருந்தார். நேற்று காலை சென்று பார்த்த போது 9 ஆடுகள் கழுத்து மற்றும் வயிறு பகுதிகளில் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மர்ம விலங்கு ஆடுகளை கடித்து குதறி இருப்பது தெரிய வந்தது. அந்த மர்ம விலங்கின் கால் தடயங்களும் அருகில் பதிந்து இருந்தன.
இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவியது. ஆடுகளை சிறுத்தை புலி கடித்து கொன்றிருக்கலாம் என கிராம மக்கள் பீதி அடைந்தனர். இதுபற்றி வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத் துறை அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கால் தடயங்களை பதிவு செய்தனர்.
மேலும் ஆடுகள் கட்டி இருந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள தைல மரதோப்பு மற்றும் சவுக்கு தோப்புக்கு வனத்துறை அலுவலர்கள் சென்று பார்த்தனர். அப்போது மர்ம விலங்கின் சாணம் இருந்தன. அந்த சாணத்தையும் வனத் துறை அலுவலர்கள் பரிசோதனைக்கு எடுத்து சென்றனர். ஆனால், ஆடுகளை கடித்து குதறியது சிறுத்தை புலியா? என்பதை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை.
மர்ம விலங்கு பயத்தால் அப்பகுதியில் குடியிருந்த உமையாள், சோமசுந்தரம், விமலா உள்ளிட்ட குடும்பத்தினர் நேற்று வீட்டை பூட்டி விட்டு வெளியூர்களில் உள்ள உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும் நேற்று மாலை அந்த கிராமத்தினர் யாரும் வீட்டை விட்டே வெளியே வரவில்லை. அதிகாலை 4 மணிக்கே இந்த கிராம மக்கள் எழுந்து வயல் வேலைக்கு செல்வது வழக்கம். ஆனால், இன்று காலை 7 மணி வரை வீட்டு கதவை அவர்கள் திறக்கவில்லை. நள்ளிரவில் மாடுகள் அலறல் சத்தம் கேட்டும், நாய்கள் குரைக்கும் சத்தம் வந்தும் யாரும் வீட்டு கதவை திறக்கவில்லை. ஒருசில இளைஞர்கள் கதவை திறக்க வந்த போது அவர்களை பெண்கள் தடுத்து நிறுத்தி விட்டனர்.
இரவு முழுவதும் அந்த கிராம மக்கள் தூங்காமல் விடிய, விடிய பீதியுடன் கண் விழித்தே இருந்தனர்.
இது குறித்து சாலைக்கரை கிராம மக்கள் கூறியதாவது:–
மர்ம விலங்கு பீதியால் நாங்கள் இரவு முழுவதும் தூங்காமல் தவித்துக் கொண்டு இருந்தோம். பல குடும்பங்கள் ஊரையே காலி செய்து சென்றுவிட்டனர். பெயரளவில் மட்டுமே வன அலுவலர்கள் எங்கள் கிராமத்தை பார்வையிட்டு சென்றனர்.
எங்களுக்கு எந்தவித பாதுகாப்பும் அளிக்கவில்லை. மேலும் ஆடுகளை கடித்து குதறியது எந்த விலங்கு என்றும் வனத்துறை அலுவலர்கள் விளக்கம் அளிக்கவில்லை. இனி வரும் காலங்களில் நாங்கள் எப்படி இரவு நிம்மதியாக தூங்க முடியும்?
இவ்வாறு அவர்கள் கண்ணீர் மல்க கூறினார்கள்.
மர்ம விலங்கு பற்றி வன ஆர்வலர் பூனம் சந்திடம்கேட்ட போது, அவர் கூறியதாவது:–
சிறுத்தை புலி கால் தடம் என்றால் 10 செ.மீட்டர் முதல் 12 செ.மீட்டர் வரை இருக்கும். ஆனால் சாலைக்கரை கிராமத்தில் பதிவாகி இருந்த கால் தடம் 5 செ. மீட்டர் முதல் 6 செ. மீட்டர் வரை உள்ளது. இதனால் ஆடுகளை கடித்து குதறியது சிறுத்தை புலியாக இருக்க முடியாது என்றே கருதுகிறோம். எனினும் இதனை சாதாரணமாக நாங்கள் எடுத்துக் கெள்ளவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே சாலைக்கரை கிராமத்தையொட்டி உள்ள சூப்பநாயக்கன் சாவடி கிராமத்தில் நேற்று முன் தினம் இரவு 4 ஆடுகள் மற்றும் ஒரு கன்று குட்டியும் இதே போன்று கழுத்தில் ரத்த காயங்களுடன் இறந்துள்ளது. அப்போது அந்த கிராம மக்கள் வெறிநாய் கடித்து இறந்து இருக்கலாம் என கருதி இதனை பெரிதாக கருதவில்லை.
இந்த நிலையில் சாலைக்கரை கிராமத்தில் 9 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து இறந்ததால் அவர்களது கிராமத்திலும் ஆடுகள் மற்றும் கன்று குட்டியை சிறுத்தை புலிதான் கடித்து குதறி இருக்கலாம் என அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Average Rating