பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்க மாயமானோம்: நண்பன் வீட்டில் மீட்கப்பட்ட சிறுவர்கள் உருக்கம்…!!
திருப்பூர் மாவட்டம் வெள்ளிரவெளியை சேர்ந்தவர் செந்தில். வேன் டிரைவர். இவரது மனைவி இந்துமதி.
இவர்களுக்கு மணிகண்டன் (12), சுதர்சன் (10) என்ற 2 மகன்கள் உள்ளனர். ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மணிகண்டன் 7–ம் வகுப்பும், சுதர்சன் 5–ம் வகுப்பும் படித்து வந்தனர்.
கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்துமதி தனது 2 குழந்தைகளையும் வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள முருகன் புதூரில் உள்ள தனது உறவினர் மோகன வல்லி வீட்டுக்கு கடந்த 13–ந் தேதி தனது 2 சிறுவர்களையும் பாட்டி அழைத்து கொண்டு வந்திருந்தார்.
மறுநாள் 14–ந் தேதி 2 சிறுவர்களும் திடீரென மாயமாகி விட்டனர். வெளியே விளையாடி கொண்டிருந்த 2 சிறுவர்களும் திடீரென காணாமல் போனதை கண்டு உறவினர்கள் திடுக்கிட்டனர்.
மேலும் அவர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 2 மாணவர்கள் எங்கே போனார்கள்? என்ன ஆனார்கள்? என்று தெரியவில்லை.
இதுகுறித்து இந்துமதி கோபி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பள்ளி மாணவர்களை தேடி வந்தனர்
போலீசார் நடத்திய விசாரணையில் 2 சிறுவர்களும் பெருந்துறையில் உள்ள அவர்களது நண்பர் வீட்டில் தங்கி இருப்பது தெரிய வந்தது.
உடனே போலீசார் அந்த சிறுவர்களை கண்டுபிடித்து அவர்களை மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது சிறுவர்கள் மணிகண்டன், சுதர்சன் ஆகியோர், ‘‘எங்களது தந்தையும், தாயும் கருத்து வேறுபாட்டால் சண்டையிட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். பெற்றோர் இப்படி தனியார் இருந்து வருவது எங்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் பெற்றோருடன் நாங்கள் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறோம். அதற்காக தான் நாங்கள் 2 பேரும், நண்பர் வீட்டில் தங்கி இருந்தோம். நாங்கள் காணாமல் போனதாக பெற்றோர் அறிந்தால் ஒருவருக்கொருவர் பேசி சேர்ந்து விடுவார்கள். அதன்பிறகு நாம் வீட்டுக்கு செல்வோம் என்று நினைத்திருந்தோம். ஆனால் அதற்குள் போலீசார் எங்களை மீட்டு விட்டனர்’’’ என்று தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகம், சப்–இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் நேற்று மாலை 2 சிறுவர்களின் பெற்றோர் செந்தில், இந்துமதியையும் வரவழைத்தனர்.
பின்னர் அவர்களிடம், நீங்கள் பிரிந்து வாழ்ந்து வருவதால் உங்களது பிள்ளைகள் இப்படி ஒரு செயலை செய்திருக்கிறார்கள். எனவே நீங்கள் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து, குழந்தைகளுடன் சேர்ந்து வாழ வேண்டும்’’ என்று போலீசார் அறிவுரை கூறினர்.
இதை ஏற்று செந்திலும், இந்துமதியும் கண்ணீர் வீட்டு அழுது கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் போலீசாரிடம் கூறும் போது, ‘‘எங்களை மன்னித்து விடுங்கள். நாங்கள் இனி எங்கள் குழந்தைகளுக்காக சேர்ந்து வாழ்வோம்’’ என்று கண்ணீர் மல்க உணர்ச்சி பெருக்குடன் தெரிவித்தனர்.
அப்போது அங்கு இருந்த சிறுவர்கள் மணிகண்டனும், சுதர்சனும் பெற்றோர் அழுவதை கண்டு அவர்களும் அழுதனர். இந்த காட்சி போலீஸ் நிலையத்தில் உருக்கமாக இருந்தது. விசாரணை நடத்திய போலீசாருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அதன்பின்னர் செந்தில், இந்துமதியுடன் 2 சிறுவர்களையும் அனுப்பி வைத்தனர்.
Average Rating