பிரபாகரனின் அழிவு வெகு தூரத்தில் இல்லை! -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் சூளுரை
சர்வதேச நாடுகளிலும் உள்நாட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரபாகரனின் அழிவு வெகு தூரத்தில் இல்லையென சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றும் போது தெரிவித்தார். இந்த விசேட உரையை ஆற்றுவதற்காக அமைச்சர் எழுந்தபோது அரசாங்கத் தரப்பினரும் ஜே.வி.பி. உறுப்பினர்களும் பலத்த கரகோஷங்கள் வழங்கி அமைச்சரை உட்சாகமூட்டினர். தம்மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் முயற்சி தொடர்பாக விபரித்த அமைச்சர் மேலும் கூறியதாவது: இந்த நாட்டிலுள்ள ஏனைய சமூகத்தில் அவதானத்தை முழுமையாகப் பெறாத நிலையில் வாழ்ந்து வருகின்ற மக்களுக்கான பணிகளை எனது அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. முதியவர்கள், அங்கவீனமுற்றவர்கள், கணவரை இழந்தவர்கள் போன்றவர்களுக்கு இந்த சமூகத்தில் சுய முயற்சியுடன் நல்லதொரு வாழ்க்கையினை அமைத்துக் கொடுப்பதிலும் ஏனைய சமூகப் பணிகளிலும் எனது அமைச்சு அயராது பணியாற்றி வருகின்றது. இன்று வடக்கு கிழக்கிலே எமது மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி நிற்கும் சந்தர்ப்பத்தில் முதலில் அவர்களுக்கான அன்றாட பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டிய அவசர நிலையிலும் நாம் இருந்து வருகின்றோம். இம்மக்களது பிரச்சினைகளை இயன்றவரையில் தீர்ப்பதற்காகவே நான் அடிக்கடி யாழ் விஜயத்தை மேற்கொண்டு அம்மக்களை நேரில் சந்தித்தும் வருகின்றேன். அதுமட்டுமல்லாது, புலிகளின் பல்வேறு உயிரச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல அரசியல் அலுவலகங்களை அமைத்து அம்மக்களுக்கான பணிகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றேன்.
அத்துடன், வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமை நாளையும் முழுமையாக ஒதுக்கி இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்ற அனைத்து மக்களுக்குமான எனது அமைச்சின் பணிகளையும் என்னால் இயன்ற ஏனைய பணிகளையும் மேற்கொண்டு வருகின்றேன்.
மரணம் ஒரு முறைதான் வரும். மரணத்திற்கு அஞ்சி எமது மக்களையும் மண்ணையும் விட்டு ஓடுவதற்கு நான் ஒன்றும் கோழை அல்ல என்று பிரபாகரனிடம் போய் சொல்லுங்கள்.
மனிதவெடி குண்டுகளை என் மீது ஏவிவிடுவதால் எமது மகத்தான மக்கள் பணியையும், எமது மக்களுக்கான அரசியலுரிமைச் சுதந்திரத்திற்கான பயணத்தையும் இடைநடுவில் நிறுத்துவதற்கு நாம் ஒன்றும் கொள்கை கோட்பாடு அற்றவர்கள் அல்ல என்று பிரபாகரனிடம் போய் சொல்லுங்கள்.
நேற்றைய தினம் எமது அமைச்சின் வெகுஜன தொடர்பு அதிகாரியாக பணி புரிந்து வந்த எமது இன்னுயிர் தோழர் ஸ்டீபன் பீரிஸ் அவர்களை புலிப்பாசிசம் பலியெடுத்திருக்கின்றது. மக்களுக்காக உழைத்த அந்த மகத்தான தோழனுக்கு இந்த சபையில் நான் அஞ்சலியையும், மரியாதையையும் செலுத்துகின்றேன்.
கொழும்பு நுகேகொட பகுதியில் வைத்து பாசிசப்புலிகளின் குண்டு வெடிப்பினால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களையும், சிங்கள சகோதரர்களையும் இந்த சபையில் நினைவுகூர விரும்புகின்றேன். அவர்களது உறவினர்களுக்கும் சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கும் தமிழ்பேசும் மக்களின் சார்பாகவும், அவர்கள் சார்ந்துள்ள ஈ.பி.டி.பியின் சார்பாகவும் ஆறுதல் கூறுகின்றேன் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.