ஸ்ரீபெரும்புதூர் அருகே பஸ்–ஆம்புலன்ஸ் மோதல்: 3 பேர் பலி…!!
ஸ்ரீபெரும்புதூர் ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60). இவர் அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். ராஜேந்திரனின் மகன் சத்தியநாராயணா (27). இவர் தந்தைக்கு உதவியாக ரியல் எஸ்டேட் தொழிலை மேற்பார்வை செய்து வருகிறார்.
நேற்றிரவு ராஜேந்திரன் திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாக துடித்தார். உடனே மனைவி விஜயாவும் மகன் சத்தியநாராயணாவும் அவரை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ராஜேந்திரன் உடல்நிலை மேலும் மோசமானதால் அவரை பூந்தமல்லியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். இதையடுத்து ஆம்புலன்சில் ராஜேந்திரனை ஸ்ரீபெரும் புதூரில் இருந்து பூந்தமல்லி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு ராஜேந்திரன் உடலை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்துவிட்டதாக கூறினார்கள். இதை கேட்டதும் விஜயாவும் சத்தியநாராயணாவும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
ராஜேந்திரன் உடல் பரிசோதனைக்கு பிறகு அதே ஆம்புலன்சில் உடலை ஸ்ரீபெரும்புதூர் வீட்டுக்கு எடுத்து வந்தனர். அந்த ஆம்புலன்சில் விஜயா, சத்தியநாராயணாவும் உடன் வந்தனர்.
இன்று அதிகாலை அந்த ஆம்புலன்ஸ் இருங்காட்டுக் கோட்டை கூட்டு ரோடு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து வெளியூருக்கு சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று வேகமாக வந்து கூட்டு ரோடு திருப்பத்தில் திரும்பியது.
கண் இமைக்கும் நேரத்தில் எதிரே வந்த பஸ்சும் ஆம்புலன்சும் நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இதில் ஆம்புலன்ஸ் நொறுங்கியது.
ஆம்புலன்சுக்குள் இருந்த விஜயா, சத்தியநாராயணா மற்றும் டிரைவர் பெரிய சாமி மூவரும் உடல் நசுங்கி துடி துடித்தனர். சிறிது நேரத்தில் சம்பவம் இடத்திலேயே 3 பேரும் இறந்தனர்.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் சம்பவ மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கடும் போராட்டத்துக்குப் பிறகு விஜயா, சத்தியநாராயணா, டிரைவர் பெரியசாமி ஆகிய 3 பேர் உடல்களும் வாகன இடிபாடுகளில் இருந்து அகற்றப்பட்டது.
பிறகு 3 பேர் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆம்புலன்சுடன் மோதி விபத்துக்குள்ளான தனியார் பஸ் டிரைவர் நடராஜன் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விபத்து காரணமாக சென்னை – ஸ்ரீபெரும்புதூர் காலையில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
விபத்தில் பலியான சத்திய நாராயணாவுக்கு சுஜிதா என்ற மனைவியும், 1 மகனும், 1 மகளும் உள்ளனர். அவர்கள் ஒரே நேரத்தில் தங்கள் குடும்பத்தில் 3 பேரை இழந்து தவித்தது பரிதாபமாக இருந்தது.
ராஜேந்திரன், அவர் மனைவி விஜயா மகன் சத்திய நாராயணா மூவரும் அடுத்தடுத்து உயிரிழந்தது ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவர்களது உறவினர்களிடம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating