டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் இளம்வயது குற்றவாளி 20-ம் தேதி விடுதலையாவதை தடுக்க முடியாது: டெல்லி ஐகோர்ட்…!!
டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் பிடிபட்ட இளம்வயது குற்றவாளி நாளை மறுநாள் (20-ம் தேதி) சிறார் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து விடுதலை ஆவதை உறுதிப்படுத்தி டெல்லி ஐகோர்ட் இன்று அறிவித்துள்ள நிலையில் அவனது அடுத்த இலக்கு யாராக இருக்குமோ? என டெல்லிவாசிகள் கலக்கமடைந்துள்ளனர்.
நாட்டையே உலுக்கிய இந்தவழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் ராம்சிங் என்ற குற்றவாளி திகார் சிறையில் தற்கொலை செய்துகொண்டான்.
இவர்களில் ஒரு குற்றவாளிக்கு 17 வயதே ஆவதால் அவன் மீதான வழக்கு மட்டும் டெல்லியில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வாத-பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் அவனை மூன்றாண்டுகள் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கும்படி கடந்த 31-8-2013 அன்று நீதிபதி தீர்ப்பளித்தார். அப்போது அவனுக்கு வயது 18.
தற்போது 21 வயது வாலிபனாக தண்டனை காலம் முடிந்து அவன் நாளை (15-ம் தேதி) விடுதலையாகவுள்ள நிலையில் சமூகத்துக்கு அவன் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்து விடுவான் என்பதால் அவனை சுதந்திரமாக நடமாட விடக்கூடாது என பலியான மாணவியின் பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர். அவனை விடுதலை செய்யவே கூடாது. விடுதலை செய்வதானால், நிச்சயமாக அவனது முகத்தை உலகுக்கு அடையாளம் காட்ட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
இதற்கிடையில், மூன்றாண்டுகள் சீர்திருத்தப் பள்ளியில் தண்டனை அனுபவித்த அந்த இளம்வயது குற்றவாளி முழுமையாக திருந்தி விட்டான் என்பது உறுதியாகும்வரையும் அவனால் சமூகத்துக்கு அச்சுறுத்தல் இருக்காது என்பது தெளிவாகும்வரையும் அவனை விடுதலை செய்யகூடாது என பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும் பிரபல வழக்கறிஞருமான சுப்பிரமணியசாமி டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதேபோல், விடுதலைக்கு பின்னர் அவனை நெருக்கமாக கண்காணித்து வரவேண்டும் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தியும் கோரிக்கை விடுத்துள்ளார். விடுதலைக்கு பின்னர் தன்னை சுதந்திரமாக நடமாட விடவேண்டும். எவ்வித கண்காணிப்போ, கட்டுப்பாடோ விதிக்க கூடாது என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அந்த குற்றவாளி வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஊடக வட்டாரங்கள் மோப்பம் பிடித்துள்ளன.
சுப்பிரமணியசாமி தொடர்ந்த வழக்கில் உரிய விளக்கம் அளிக்குமாறு மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. விடுதலையாகும் குற்றவாளியிடம் கிரிமினல் சட்டப்பிரிவு 107-ன்கீழ் நன்னடத்தை பத்திரத்தை எழுதி வாங்கிக்கொண்டு அவனை விடுவிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த டெல்லி ஐகோர்ட், இளம்வயது குற்றவாளி வரும் 20-ம் தேதி விடுதலையாவதற்கு தடைவிதிக்க முடியாது என தெரிவித்துள்ளது.
அவனுக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு தண்டனையை அவன் அனுபவித்தபிறகு எக்காரணத்தை முன்னிட்டும் அவனை அடைத்துவைக்க தற்போதைய சட்டங்களின்படி சாத்தியக்கூறுகள் இல்லாததால் இளம்வயது குற்றவாளியின் விடுதலையை தடை செய்ய முடியாது. விடுதலைக்கு பின்னர் அவனுக்கு அளிக்கப்பட வேண்டிய மறுவாழ்வு குறித்து இளம்வயது குற்றவாளி மற்றும் அவனது பாதுகாவலர்களுடன் டெல்லி அரசு அதிகாரிகள் கலந்துபேசி முடிவு செய்ய வேண்டும்.
பிறவழக்குகளிலும் இதுபோன்ற தண்டனை பெறும் இளம்வயது குற்றவாளிகள் விடுதலைக்கு பின்னர் அவர்களது மறுவாழ்வு தொடர்பாக ஒரு செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
Average Rating