ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் ஜெயிலில் இருந்து…
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் இலங்கை கைதி தன்னை சிறையிலிருந்து விடுவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். 1991-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இலங்கையை சேர்ந்த ராபர்ட் பயஸ் கைது செய்யப்பட்டார். அவர்மீது கொலை மற்றும் சதித்திட்டம் ஆகிய குற்றங்களின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து வேலூர் மத்திய சிறையில் ராபர்ட் பயஸ் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் அவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- நான் ஒரு வழக்கு தொடர்பாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன். அந்த வழக்கில் எனக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது. பொதுவாக ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகால சிறைவாசம்தான். ஆனால் ரிமாண்டு காலத்தையும் சேர்த்து பார்த்தால் நான் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன். இது மனித உரிமைகளை மீறும் செயலாகும்.
தமிழக அரசு விதிமுறைகள் அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். அதுபோன்ற விடுதலையை பெறுவதற்கு எனக்கும் தகுதி உள்ளது. எனவே என்னை விடுதலை செய்வது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் நன்னடத்தை அதிகாரியின் அறிக்கையை கேட்டு சிறை கண்காணிப்பாளர் கடிதம் எழுதினார்.
நான் இலங்கையை சேர்ந்தவன் என்பதால் இலங்கையில் உள்ள எனது இருப்பிடத்தை சார்ந்த நன்னடத்தை அதிகாரியின் அறிக்கையை கேட்டுப் பெற்று அதன் அடிப்படையில் தான் என்னை விடுதலை செய்ய வேண்டும் என்று ஜெயில் கண்காணிப்பாளருக்கு இங்குள்ள நன்னடத்தை அதிகாரி, கடிதம் எழுதியிருப்பதாக எனக்கு தெரிய வந்தது.
ஆனால் தமிழகத்தில் இதுபோன்ற ஒரு விதிமுறை இருப்பதாக எனக்கு தெரியவில்லை. வெளிநாட்டை சேர்ந்த ஆயுள் கைதி ஒருவரை தண்டனை காலத்தில் விடுதலை செய்வதற்கான விதிமுறை எதுவும் இங்கு வகுக்கப்படவில்லை. இதுதொடர்பாக 28.11.2004 அன்று சிறைக்கண்காணிப்பாளருக்கு நான் விண்ணப்பித்தேன். என்னை ஜெயிலில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். ஆனால் இலங்கையை சேர்ந்த நன்னடத்தை அதிகாரியின் அறிக்கை இல்லை என்ற காரணத்தைக் கூறி எனது விண்ணப்பத்தை கருத்தில் கொள்ளவில்லை.
3 காரணங்களின் அடிப்படையில் மட்டும் தான் ஆயுள் தண்டனை கைதியை விடுதலை செய்வார்கள். அவர் மீண்டும் குற்றம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளதா? அவர் மீண்டும் குற்றம் செய்வதற்கான பின்புலத்தை கொண்டுள்ளாரா? இந்த குற்றவாளி திருந்தி இருக்கிறாரா? என்பதை மட்டுமே ஆய்வு செய்யவேண்டும்.
ஆனால் எனது விவகாரத்தில் விதிமுறைகளுக்கு உட்படாத அறிக்கைகள் எல்லாம் கோரப்படுகின்றன. இலங்கை நன்னடத்தை அதிகாரியின் அறிக்கை கேட்பது தேவையில்லாதது ஒன்று. அந்த அறிக்கையை பெறுவதும் கடினமான காரியமாகும்.
மாவட்ட கலெக்டர், நன்னடத்தை அதிகாரி கொடுக்கும் அறிக்கையை நம்பாமல், இலங்கை நன்னடத்தை அதிகாரி கொடுக்கும் அறிக்கையை மட்டுமே நம்புவது போல் அதிகாரிகளின் செயல்பாடு உள்ளது. என்னை விடுதலை செய்யும் பட்சத்தில் செங்கல்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாமுக்கு அனுப்பலாம். இதற்காக அங்குள்ள நன்னடத்தை அதிகாரி மற்றும் அந்த முகாம் அமைந்துள்ள மாவட்ட கலெக்டரின் அறிக்கையை கேட்டுப் பெறலாம்.
தொடர்ந்து என்னை சிறையில் அடைத்து இருப்பது அரசியல் சாசனச் சட்டத்தின் 21-ம் பிரிவுக்கு எதிரானதாகும். எனவே என்னை சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் ராபர்ட் பயஸ் கூறியுள்ளார். இந்த மனுவை நீதிபதி ரவிராஜபாண்டியன் விசாரித்தார். அரசு சார்பில் சிறப்பு அரசுப் பிளீடர் பி.வில்சன் ஆஜரானார். இந்த மனுவுக்கு இன்னும் 2 வாரத்தில் பதிலளிக்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.