சட்டவிரோதமாக கரடியை சுட்டுக்கொன்றதாக முன்னாள் அழகுராணி மீது குற்றச்சாட்டு…!!
அமெரிக்க முன்னாள் அழகுராணியொருவர் கரடியொன்றை சட்டவிரோதமாக சுட்டுக்கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
25 வயதான தெரேஸா வெய்ல் எனும் இந்த யுவதி 2013 ஆம் ஆண்டு கான்சாஸ மாநில அழகுராணியாக முடிசூட்டப்பட்டவர். கடந்த வருடம் மிஸ் அமெரிக்கா 2014 அழகுராணி போட்டியிலும் பங்குபற்றினார்.
அப்போட்டியில் ‘டொப் 10’ பட்டியலில் இடம்பெற்ற அவர், ‘அமெரிக்காஸ் சொய்ஸ்’ எனும் விருதையும் சுவீகரித்தார்.
இப்போட்டிகளின் நீச்சலுடை சுற்றின்போது, தனது உடலில் பச்சை (டாட்டூ) குத்தியிருந்ததையும் தெரேஸா வெய்ல் வெளிப்படுத்தினார். இதன்மூலம் அமெரிக்க அழகுராணி போட்டிகளில், பச்சை குத்தியி ருப்பதை வெளிப்படுத்திய முதல் யுவதியானார் அவர்.
பொதுவான அழகுராணிகள் மத்தியிலிருந்து வித்தியாசமானவர் தெரேஸா வெய்ல். அமெரிக்க இராணுவ வீராங்கனைகளில் ஒருவர் இவர்.
ஏனைய அழகுராணிகள் மேக் அப், பெஷன் ஷோ போன்றவற்றில் ஈடுபாடு காட்டும் நிலையில், துப்பாக்கிச் சுடுதல், அம்பெய்தல் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவராக தெரேஸா வெய்ல் விளங்குகிறார்.
மிருகங்களை வேட்டையாடுவது அவருக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. சேற்றில் உருண்டுபுரண்டு பயிற்சிசெய்வதற்கும் தெரேஸா தயங்குவதில்லை.
இந்நிலையில், அமெரிக்க தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகும் சாகசத் தொடரொன்றில் பங்குபற்றும் தெரேஸா வெய்ல், இதற்கான படப்பிடிப்பின்போது, கரடியொன்றை சுட்டுக்கொன்றதாக அமெரிக்க வழக்குத் தொடுநர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த மே மாதம் இச்சம்பவம் இடம்பெற்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கரடியொன்றின் மீது அவர் சட்ட பூர்வமாக முதல் தடவை துப்பாக் கிப் பிரயோகம் செய்ததாகவும் ஆனால், பின்னர் அதைக் கொல்வதற்காக இரண்டாவது தடவையும் அதன் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது மற்றொரு கரடி மீது தற்செயலாக தோட்டா பாய்ந்ததாகவும் பின்னர் அதை தான் விலை கொடுத்து வாங்கியதைப் போன்று காட்டிக்கொள்ள அவர் முயன்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் மிஸ் அமெரிக்கா அழகுராணி போட்டிகளின்போது தெரேஸா வெய்லின் பெரிய அளவிலான டாட்டூக்கள் ஊடகங்களில் அதிகம் அலசப்பட்டன. அமெரிக்க இராணுவத்தின் சின்னத்தையும் அவர் தனது உடலில் பச்சை குத்தியுள்ளார்.
33 வருடங்களாக இராணுவத்தில் பல் மருத்துவராக பணியாற்றிய தனது தந்தையை கௌரவிப்பதற்காக அந்த சின்னத்தை தான் பச்சை குத்தியதாக அவர் தெரிவித்திருந்தார்.
தெரேஸா வெய்ல் பச்சை குத்தியிருப்பது குறித்து சிலர் எதிர்மறையாக விமர்சித்தமை குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், ”ரவுடிகளும் பைக்கில் செல்லும் இளைஞர்களும் தான் பச்சை குத்துகிறார்கள் என வயதான நபர்கள் சிலர் கருதக்கூடும்.
ஆனால். இப்போது உலகம் அப்படியானதாக இல்லை. அதனால் நான் பச்சை குத்திக்கொண்டதை மறைக்க முற்படவில்லை” என கூறியிருந்தார்.
Average Rating