அயனாவரத்தில் கடத்தப்பட்ட சிறுமி கடலாடியில் மீட்பு: வாலிபர் கைது…!!
சென்னை அயனாவரம் நியூ ஆவடி ரோட்டில் சாலையோரமாக வசித்து வருபவர் கார்த்திக். கூலி தொழிலாளி. இவரது மனைவி சுப்பம்மாள். இவர்களுக்கு 3 வயதில் பவித்ரா என்ற குழந்தை உள்ளது.
நேற்று இரவு கார்த்திக், மனைவி, குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலையில் எழுந்து பார்த்த போது குழந்தையை காணவில்லை. இதனால் கார்த்திக்கும், சுப்பமாலும் அதிர்ச்சி அடைந்தனர்.
2 பேரும் அந்த பகுதி முழுவதும் பதட்டத்துடன் தேடிப் பார்த்தனர். ஆனால் குழந்தையை கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து அயனாவரம் போலீசில் இது பற்றி புகார் செய்தனர். அதில் எங்களுடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை பவித்ராவை காணவில்லை. அவளை யாரோ கடத்திச் சென்று விட்டனர். கண்டு பிடித்து தாருங்கள் என்று கூறியிருந்தனர்.
இதையடுத்து குழந்தை பவித்ராவை கண்டு பிடிக்கும் பணியில் உதவி கமிஷனர் சங்கரன், இன்ஸ்பெக்டர் யுவராஜ், சப்–இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் தீவிர நடவடிக்கையில் இறங்கினர்.
கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்கள் ஆகியவற்றில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் குழந்தையை பற்றி எந்தவித துப்பும் துலங்காமலேயே இருந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி போலீசார், அயனாவரம் போலீசாரை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது உங்கள் பகுதியில் கடத்தப்பட்ட குழந்தை பவித்ரா, எங்களிடம் உள்ளது. போலூரை சேர்ந்த ரமேஷ் (35) என்ற வாலிபர் தான் குழந்தையை கடத்தி வந்துள்ளார் என்று கூறினர்.
கடத்தப்பட்ட குழந்தை பவித்ராவின் போட்டோவை செல்போனில் படம் பிடித்து வாட்ஸ்–அப் மூலமாகவும் அனுப்பி வைத்தனர்.
இதன் மூலம், கடலாடியில் மீட்கப்பட்டது பவித்ராதான் என்பது உடனடியாக உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அயனாவரம் போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தை பவித்ரா மற்றும் அவளை கடத்திய ரமேஷ் ஆகியோரை இன்று சென்னைக்கு அழைத்து வந்தனர்.
கடத்தல் வழக்கில் வாலிபர் ரமேஷ் கைது செய்யப்பட்டார். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரது பின்னணியில் குழந்தை கடத்தல் கும்பல் எதுவும் செயல்பட்டு வருகிறதா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குழந்தையை கடத்திய வாலிபர் ரமேஷ் சிக்கியது எப்படி என்பது பற்றியும், குழந்தை பவித்ரா மீட்கப்பட்டது குறித்தும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது பற்றிய விவரம் வருமாறு:–
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள கட்டவரம் காலனியை சேர்ந்த ரமேஷ், பூண்டு வியாபாரம் செய்து வருகிறார். இவரது தந்தை முனுசாமி, விபத்தில் சிக்கி காயம் அடைந்து அயனாவரம் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக ரமேஷ் வந்தார்.
பின்னர் நேற்று அதிகாலையில் இவர் கோயம்பேடு செல்வதற்காக நியூ ஆவடி சாலை வழியாக நடந்து சென்றார்.
அந்த நேரத்தில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை பவித்ராவை நைசாக தூக்கிக் கொண்டு அங்கிருந்து கடத்திச் சென்றார்.
குழந்தையுடன் ரமேஷ் வீட்டுக்கு வந்திருப்பதை பார்த்ததும், அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிரச்சினை ஏதும் ஆகிவிடக்கூடாது என்று கருதிய அவர்கள் ரமேசையும், குழந்தையையும் கடலாடி போலீசில் ஒப்படைத்தனர்.
இதை தொடர்ந்தே கடலாடி போலீசார், அயனாவரம் போலீசாரை தொடர்பு கொண்டு, தகவல் தெரிவித்தனர். குழந்தை பவித்ரா மீட்கப்பட்டாள்.
Average Rating