அரசியல் வாதிகளை விட ஊடகங்களே இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கின்றன’
அரசியல் வாதிகளால் தீர்வு பெற்றுக் கொடுக்க முடியாத பல்வேறு பிரச்சினைகளுக்கு ஊடகங்கள் தீர்வு பெற்றுக் கொடுக்கின்றன. என்று தெரிவித்த தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மத்தியமாகாண உதவிப் பணிப்பாளர் டபிள்யூ.எம்.உடகெதர ஊடகங்கள் சக்திமிக்கவை என்பதை இதுவரை ஒருசிலர் உணராமல் இருப்பது விந்தையாக உள்ளதென்றும் தெரிவித்துள்ளார். அண்மையில் மாத்தளை கோப்பி ஹவுஸ் விடுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; தேசிய இளைஞர் சேவைமன்றத்தின் மாத்தளை மாவட்ட காரியாலயத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியை தகவல் தொழில்நுட்ப கல்லூரி அதிபர் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார். இதனால் எம்மால் அக்காணியை பயன்படுத்த முடியாமலுள்ளது. மாத்தளை மாவட்ட அரசியல் தலைமைத்துவத்திடம் இது தொடர்பாக பலமுறை எடுத்தியம்பியும் இது வரை எவ்வித பலனும் கிட்டவில்லை. எனவே, இது தொடர்பான பிரச்சினை இனியாவது தீர்த்து வைக்கப்பட உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மாத்தளை மாவட்ட உதவி செயலாளர் ஜி.ஜி.விஜேசேன பேசும்போது கூறியதாவது; எமது மாத்தளை மாவட்டகாரியாலயத்தில் தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் ஒருவரேனும் இல்லாதமையால் எமது அமைப்பின் மூலம் கிட்டும் நண்மைகளை தமிழ், முஸ்லிம் இளைஞர், யுவதிகளிடம் எடுத்துச் சொல்ல முடியாமலுள்ளது.
தற்போது மாத்தளை மாவட்ட காரியாலயத்தில் நான்கு வெற்றிடங்கள் உள்ளது. இவை நிரப்பப்படும் போது தமிழ் பேசும் உத்தியோகத்தர் ஒருவரை நியமித்துக் கொள்ள முயற்சிசெய்வது சாலச்சிறந்ததாகும்.
தமிழ்பேசும் உத்தியோகத்தரொருவர் நியமிக்கப்படாதவரை எம்மால் தமிழ், முஸ்லிம் இளைஞர், யுவதிகளுக்கு இந்த அமைப்பின் மூலம் கிட்டும் எந்தவித பலனையுமே பெற்றுக் கொடுக்க முடியாது.
தற்போது எமது மன்றத்தினால் நிருவகிக்கப்பட்டு வரும் ஐந்து தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்துவிட்டு தொழில் வாய்ப்பற்றிருக்கும் (சிங்கள) இளைஞர், யுவதிகளுக்கு பல்வேறு சுயதொழில் முயற்சிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகின்றது.
பயிற்சியின் பின் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட வங்கிக்கடனுதவிகளும் பெற்றுக் கொடுத்து வருகிறோம்.
இருப்பினும் எம்மிடம் தமிழ் பேசும் உத்தியோகத்தர் ஒருவர் இன்மையால் தமிழ், முஸ்லிம் இளைஞர், யுவதிகளை பயிற்சி வகுப்புகளில் இணைத்துக் கொள்ள முடியாதுள்ளது.
மேலும் நாம் டிசம்பர் மாத நடுப்பகுதியில் இளைஞர், யுவதிகளை சிறுகைத்தொழில் பொருட்களை உள்ளடக்கி தேசிய இளைஞர் சேவைமன்ற மகரகம காரியாலயத்தில் தேசிய மட்டதிலான போட்டியொன்றினை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர், யுவதிகள் இம்மாதஇறுதிக்குள் (நவம்பர்) தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைமையகத்துக்கு (மகரகம) அனுப்பி வைக்கலாம். இது சம்பந்தமான மேலதிக விபரங்களை எமது காரியாலயத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் எமது தொழிற்பயிற்சி நிலையங்களில் அடுத்த வருடம் (2008) தொழிற்பயிற்சி பெறத்தற்போது மாத்தளை மாவட்ட இளைஞர், யுவதிகளிடம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
சிங்கள மொழியில் மட்டுமே பயிற்சிகள் வழங்கப்படுவதால் சிங்கள மொழியில் தேர்ச்சிபெற்றுள்ள தமிழ், முஸ்லிம் இளைஞர், யுவதிகளும் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
இது சம்பந்தமான மேலதிக விபரங்களை எமது பிராந்திய காரியாலயத்தில் அல்லது தொழிற்பயற்சி நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினார்.