ரஷ்ய விமானத்தை தீவிரவாதிகள் தாக்கியதற்கு ஆதாரம் இல்லை: எகிப்து…!!
ரஷ்ய விமானத்தை தீவிரவாதிகள் தான் தாக்கி வீழ்த்தினர் என்பதற்கு இது வரை எந்த ஆதாரமும் இல்லை என எகிப்து அரசு தெரிவித்துள்ளது.
சிரியாவில் சன்னி, ஷியா இஸ்லாமிய பிரிவினர்களுக்கிடையே நீண்ட காலமாக பகை நீடித்து வருகிறது. தற்போதைய அதிபர் பஷார் அல்-ஆசாத் ஷியா பிரிவைச் சேர்ந்தவர். அவருக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அல்-காய்தா ஆதரவு தீவிரவாத குழுக்கள் போரிட்டு வருகின்றன.
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படைகள் சிரியா, ஈராக்கில் கடந்த பல மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றன. ஆனால் சிரியா அதிபர் ஆசாத்துக்கு அமெரிக்கா ஆதரவளிக்கவில்லை. அவர் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து நெருக்கடி அளித்து வருகிறது.
இந்நிலையில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக கடந்த செப்டம்பரில் ரஷ்ய ராணுவம் சிரியாவில் களமிறங்கியது. அங்கு 69 போர் விமானங்கள், அதிநவீன ரேடார் கருவிகள், ஏவுகணை தடுப்பு சாதனங்களை அமைத்துள்ள ரஷ்ய விமானப் படை, செப்டம்பர் முதல் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் அண்மைகாலமாக அதிபர் ஆசாத்தின் கை ஓங்கி வருகிறது. இதற்குப் பதிலடியாக அக்டோபர் 31-ம் தேதி எகிப்தில் இருந்து புறப்பட்ட ரஷ்ய பயணிகள் விமானமான கோகல்மாவியா ஏர்பஸ் 321-200 விமானத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் நடுவானில் வெடிகுண்டு மூலம் தகர்த்தனர். இதில் 224 பேர் உயிரிழந்தனர். விபத்து நிகழ்ந்த சில மணி நேரங்களில் ‘விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம்’ என ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர்.
ரஷ்ய விமானத்தை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப பொறியாளர்கள் வடிவமைத்ததால், விபத்து நிகழ்ந்த இடத்துக்குச் சென்ற அவர்கள் கருப்பு பெட்டியை மீட்டு எகிப்து, ஜெர்மனி மற்றும் அயர்லாந்து தொழில்நுட்ப பொறியாளர்களுடன் இணைந்து அதில் பதிவாகியுள்ள தகவல்களை சேகரிக்க முயன்று வந்தனர்.
இதற்கிடையில், கருப்பு பெட்டி குறித்து ஆராய்ந்து வந்தவர்களிடமிருந்து கடந்த வாரம் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதில், புறப்பட்ட நேரத்திலிருந்து விமானம் அமைதியாகவே பறந்துள்ளது. விமானத்தின் என்ஜின்களில் எந்த குறைபாடும் இல்லை என்பதும் நிரூபணமானது. அதேபோல், விமானிகள் மூலமும் எந்த தவறும் நிகழவில்லை என்பதும் அதில் பதிவாகியுள்ளது. ஆனால், பறந்துகொண்டு இருந்த விமானத்தில் திடீரென பலத்த ஓசை ஏற்பட்டவுடன் விமானமே அமைதியாக மாறியதாகவும் கருப்பு பெட்டியில் பதிவாகியிருப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து ஆராய்ந்து வந்த எகிப்து விசாரணைக் கமிட்டி, தனது முதற்கட்ட அறிக்கையை இன்று தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில், விமானத்தை தீவிரவாதிகள் தாக்கியதற்கான ஆதாரமோ, சட்டத்திற்கு புறம்பான வேறு நடவடிக்கைக்கான ஆதாரமோ இல்லை என்று விசாரணைக் கமிட்டி தெரிவித்துள்ளது.
மேலும், சினாய் மாகாணத்தில் விமானம் விழுந்த இடத்திலிருந்து 16 கி.மீ-க்கு ஆய்வு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த ஆய்வுப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இந்த அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளது. கருப்பு பெட்டி அறிக்கையில் விபத்துக்குள்ளான விமானம் அதே வழித்தடத்தில் ஐந்து நாட்களுக்கு முன்பாக பயணித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Average Rating