இழப்புகள் ஏராளம் தேவை தாராளம்: தலையங்கம்…!!
அடுத்தவன் பசித்திருக்க தான் மட்டும் உண்டு களிப்பதல்ல மனிதப்பண்பு. இந்த உன்னதமான பண்பு மக்களிடம் மறைந்து விடவில்லை என்பதை மழை வெள்ளம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.
தண்ணீரில் நனைந்து கண்ணீரில் ஊறி சென்னை வாசிகள் பசியோடு துயரத்தில் துடித்ததும் ஆயிரம் ஆயிரம் கரங்கள் அணைத்து காக்க ஓடிவந்தது.
விதவிதமான உணவுகள் விதியெங்கும் குவிந்தன. சாப்பிடத்தான் வயிறு வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு பஞ்சமில்லாமல் உணவுகள் பரிமாறப்பட்டன.
லாரி லாரியாக குவிந்த நிவாரண பொருட்கள் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு சேகரமாகிவிட்டது.
வீதிதோறும் வந்த அன்ன லாரிகளால் பல வீடுகளில் பாத்திரங்கள் அட்சய பாத்திரங்களாக மாறிவிட்டது. சொல்லப்போனால் பலரை சோம்பேறியாக்கிவிட்டது என்பது தான் உண்மை.
புளியோதரை சாப்பிட்டு கொண்டிருப்பார்கள். அப்போது வேனில் வெஜிடபிள் பிரியாணி வரும். உடனே புளியோதரையை வீசி எறிந்து விட்டு வெஜிடபிள் பிரியாணி பக்கம் திரும்புகிறார்கள். பின்னர் அதை சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே அசைவ பிரியாணி வந்துவிடுகிறது. உடனே அதையும் வீசி எறிந்து விட்டு அசைவ பிரியர்களாகிவிடுகிறார்கள்.
மனமுவந்து உதவி செய்பவர்கள் கண்ணெதிரிலேயே இத்தனை அவமதிப்பும் நடக்கிறது. அவர்களுக்கும் அது சும்மா கிடைத்ததா? உழைத்து உழைத்து குருவிபோல் சேர்த்த பணத்தை அடுத்தவர் துயர்துடைக்க எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செலவழிக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.
ஒரு வாரம் பசி இல்லாமல் காப்பாற்றிவிட்டோம். அடுத்து அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுவோம் என்ற எண்ணத்தோடு இப்போது உதவிப்பொருள்களும் மாறிவிட்டன. ஒரு மாதம் வரை தேவையான மளிகை பொருட்கள், அரிசி, எண்ணெய், பாத்திரங்கள் என்று அடுத்த கட்டமாக நிவாரண பொருட்களை வாரி வழங்கி வருகிறார்கள்.
பாதிப்பே இல்லாதவர்களும் ஓசியில் தானே கிடைக்கிறது. கிடைத்தது லாபம் என்று கிடைப்பதையெல்லாம் வாங்கி பதுக்குகிறார்கள். ஓரிரு மாதம் பட்ஜெட் குறையுமே என்ற எண்ணம் அவர்களுக்கு!
சாப்பாட்டை வாங்கி வீசுபவர்கள் ‘நான் சாப்பிட்டு விட்டேன்’ வேறு யாருக்காவது கொடுங்கள் என்று சொல்வது இல்லை. வெள்ளத்தால் பாதிக்கப்படாதவர்களுக்கு நிவாரண பொருட்களை வேண்டாம் என்று சொல்லவும் மனம் வருவதில்லை.
உதவி செய்வதற்கு மனம் இருக்கிறது. அந்த மனங்கள் காயப்படக்கூடாது உதவி செய்தால் மட்டும் போதாது அதற்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்கள் துயரங்களில் இருந்து முற்றிலுமாக மீளுவதற்கு இன்னும் எவ்வளவோ பணிகள் செய்ய வேண்டி உள்ளது. அடுத்து அந்த பணிகளில் கவனம் செலுத்துவோம்!
நாற்றமெடுக்கும் தெருக்களில் மீண்டும் நறுமணம் வீச வேண்டும்! ஆசை, ஆசையாய் வாங்கி சேர்த்த அத்தனை பொருட்களும் மீண்டும் வீட்டை அலங்கரிக்க வேண்டும்! சிதைந்து உருக்குலைந்த அத்தனையும் சிங்காரமாய் உருப்பெற வேண்டும். வெள்ளம் வந்த சுவடு தெரியாமல் சென்னை காட்சியளிக்க வேண்டும்.
இதற்கு பெரும்பங்கு அரசின் கையில்தான் உள்ளது. இழந்த எலக்ட்ரானிக் பொருட்களான டி.வி., ரெப்ரிஜிரேட்டர், வாஷிங் மெஷின், கம்ப்யூட்டர்கள் மற்றும் மின்சாதன பொருட்களையும் வாங்குவதற்கு குறைந்த பட்சம் ஒரு லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவைப்படலாம்.
துயரத்தில் கைகொடுத்ததுபோல் இந்த செலவினங்களுக்கும் கைகொடுக்க வேண்டியது அவசியம்.
ஏற்கனவே இந்த மாதிரியான பொருட்கள் சலுகை விலையில் கிடைப்பதற்கு ஆவண செய்யும்படி முதல்–அமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசும் மேற்கொள்ள வேண்டும்.
சலுகை விலை, வட்டி இல்லாத நீண்டகால கடன் போன்ற உதவிகளை செய்யலாம். இதில் அரசு மட்டுமின்றி தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனையாளர்கள், எல்லோரும் இணைந்து நம்மவர்கள் இழந்ததையெல்லாம் பெற்று எழுந்து நிற்க துணை நிற்க வேண்டும். உண்டி கொடுத்து, உடை கொடுத்து நிர்கதியாய் தவித்தவர்களை மீட்டு நிரந்தரமாய் அவர்கள் மனதில் இடம் பிடித்த கர்ண பரம்பரைகளை சென்னை வாசிகள் என்றும் மறக்க மாட்டார்கள்.
அடுத்த கட்டமாக அவர்களுக்காக மாத்தியோசிக்க வேண்டிய தருணம் இது…! இழப்புகள் ஏராளம்! தாராளமான உதவி தேவை.
Average Rating