லெபனான் மீது 12 போர் விமானங்கள் 23 டன் குண்டுகள் வீச்சு
லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட் மீது 12 போர்விமானங்கள் 23 டன் குண்டுகளை வீசித்தாக்கின. இதில் ஹெஸ்புல்லா தீவிரவாதிகளின் தலைவர்கள் பலியானதாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது. இதை ஹெஸ்புல்லா தீவிரவாதிகள் மறுத்தனர். இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 2 பேரை பாலஸ்தீனத்தீவிரவாதிகள் கடத்திச்சிறைபிடித்து உள்ளனர். அவர்களை விடுவிப்பதற்காக இஸ்ரேல் ராணுவம் தொடக்கத்தில் பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது தாக்குதல் நடத்தியது.
இந்தக்கடத்தலில் லெபனானின் ஹெஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பிய இஸ்ரேல், லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் விமானத்தாக்குதல் நடத்தியது. கடந்த 12-ந் தேதி முதல் இந்தத்தாக்குதல் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மட்டும் விமானத்தாக்குதலில் 63 அப்பாவிப்பொதுமக்கள் பலியானார்கள். நேற்று 12 போர் விமானங்கள் 23 டன் குண்டுகளை வீசித்தாக்குதல் நடத்தின.
தலைவர்கள் பலியா?
இந்தத்தாக்குதலின்போது ஹெஸ்புல்லா தீவிரவாதிகளின் தலைவர் சையது ஹாசன் நஸ்ரல்லாவும், சில தலைவர்களும் ஒரு பதுங்குமிடத்தில் தங்கி இருந்தார்கள் என்றும் அவர்கள் இதில் சிக்கிக்கொண்டு இறந்து போய்இருக்கலாம் என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது. இதை ஹெஸ்புல்லா தீவிரவாதிகள் மறுத்து உள்ளனர். எங்கள் தலைவர்கள் யாரும் இந்தத்தாக்குதலில் பலியாகவில்லை என்று அவர்கள் கூறினார்கள்.
இஸ்ரேல் தாக்குதலில் புதிதாக கட்டப்பட்டு வரும் மசூதி ஒன்றுதான் சேதம் அடைந்தது என்றும் அவர்கள் கூறினார்கள். ஹெஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேல் நாட்டின் நாசரத் நகர் மீது ராக்கெட் வீசித்தாக்கியது. இதில் 2 சிறுவர்கள் பலியானதாக கூறப்படுகிறது.
துறைமுகம் சேதம்
பெய்ரூட்நகரின் துறைமுகம், கலங்கரைவிளக்கம், கடற்கரை ஆகியவை மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தின. இதில் அவை பலத்த சேதம் அடைந்தன. இந்ததாக்குதல் காரணமாக 5 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு இடங்களில் தஞ்சம் புகுந்தனர் என்று லெபனான் பிரதமர் பவுத் சினியோரா தெரிவித்தார். அவர்களுக்கு உதவ சர்வதேச சமுதாயம் உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார். போர்நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார். அவர் டெலிவிஷனில் பேசியபோது இந்த கோரிக்கையை விடுத்தார்.
தெற்கு லெபனானில் உள்ள பல கிராமங்களில் உணவு குடிநீர், மருந்து ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாகவும் சாலைகள் பாலங்கள் குண்டுவீசி தகர்க்கப்பட்டதால் உணவுப்பொருள் சப்ளை துண்டிக்கப்பட்டது
10 பாலஸ்தீனியர்கள் பலி
லெபனான் மீது தாக்குதல் நடந்து வரும் அதேநேரத்தில் காசா பகுதியிலும் தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 10 பாலஸ்தீனியர்கள் பலியானார்கள்.அவர்களில் 5 பேர் தீவிரவாதிகள். 10 சிறுவர்கள் உள்பட 60 பாலஸ்தீனியர்கள் காயம் அடைந்தனர்.
இதற்கிடையில் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று ஐ.நா.சபை கேட்டுக்கொண்டது.போர் நிறுத்தம் செய்வதை அமெரிக்கா விரும்பவில்லை. அதனால் போர்நிறுத்தம் செய்யவேண்டும் என்று ஐ.நா.அழைப்பு விடுவதை அமெரிக்கா எதிர்த்து வந்தது. இதனால் இதுவரை அமைதிகாத்த ஐ.நா. இப்போது அமெரிக்காவை மீறி போர்நிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்து உள்ளது.
கப்பல்களில் வெளியேறினர்
லெபனானில் உள்ள லார்னகா துறைமுகத்தில் 3 கப்பல்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.அமெரிக்கக்கப்பல் ஆயிரத்து 44 அமெரிக்கர்களை ஏற்றிக்கொண்டு லெபனானை விட்டு வெளியேறியது. இன்னொரு கப்பல் ஐ.நா.சபைக்கு சொந்தமானது. 3-வது பிரான்சு நாட்டுக்கு சொந்தமானது. அதில் 320 பேர் ஏற்றப்பட்டனர்.லெபனானில் உள்ள 8 ஆயிரம் அமெரிக்கர்களை வெளியேற்றும் பணியில் 9 போர்க்கப்பல்கள், ஒரு ஹெலிகாப்டர் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக ஒரு அமெரிக்க அதிகாரி கூறினார்.
கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் ஐரோப்பா சுற்றுப்பயணத்தில் இருந்தார். அவர் தன் விமானத்தை சைப்ரஸ் நாட்டுக்கு திருப்பச் சொன்னார். லெபனான் நாட்டில் இருந்து தப்பி வந்த கனடா நாட்டினர் அங்கு தங்கி உள்ளனர். அவர்களில் எவ்வளவு பேர் முடியுமோ அவ்வளவு பேரை தன் விமானத்தில் ஏற்றிக்கொண்டு கனடா திரும்பினார்.
இங்கிலாந்து நாடு பெய்ரூட்டில் உள்ள 5 ஆயிரம் பிரிட்டிஷாரை வெளியேற்றுவதற்காக 6 கப்பல்களையும், 2 விமானங்களையும் பயன்படுத்தி உள்ளது.