தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது (அ)நியாயமா?… -தமிழ் மைந்தன்…!!
கடந்த ஒரு மாத காலமாக தமிழ் அரசியல் கைதிகள் தங்களுக்குள் ஒரு ஐக்கியத்தை உருவாக்கி, போராட்டாங்கள் நடத்தி, உலகத்தின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துக்கொண்டுள்ளார்கள் என்பது தமிழ் மக்களுக்கு சந்தோஷத்தை தரக்கூடிய செய்தியாக இருந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
‘சாவும் வரை உண்ணாவிரதம் இருந்து சாதித்ததுதான் என்ன’ என்று சந்தேகத்தில் கேட்பவர்களும் நமக்குள் இல்லாமல் இல்லை.
இலங்கை சிங்கள அரசாங்கத்தின் அணுகுமுறை தமிழ் மக்களுக்கு ஆதரவாக இருப்பதாகவே சிங்கள மக்களும் வெளியுலகமும் நம்பிக் கொண்டிருக்கிறது.
இந்த போராட்டத்தை ஒழுங்கு செய்தது யார்? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்ற கேள்விக்கெல்லாம் பதிலை தேடி நேரத்தை நீணடிக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வரலாம் என்று நினைக்கிறேன்.
10.12.2015 அன்று வெளிவிவகார அமைச்சில் நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் “விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களையும், சர்வதேச புலி இணைப்பாளர்களையும் பாதுகாத்துக் கொண்டு சாதாரண மக்களை தண்டித்தமை எந்த விதத்திலும் நியாயமற்றது. ஆகவே இவர்களை விடுவிக்கப்பட வேண்டும் என்பது நியாயமான கருத்தாகும்” என்று ஒரு சூடான செய்தியை வெளியிட்டார்.
அதே தினத்தில் இலங்கை அரசு இப்படியொரு செய்தியை அறிவிக்கிறது “இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை. எனினும், போர்க்குற்றச்சாட்டுகள் உரிய வகையில் நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்”.
இந்த இரண்டு செய்திகளையும் மேலோட்டமாக பார்க்கும் போது தமிழ் மக்களுக்கு நீதி கிடைத்து விட்டது என்று வெளியுலகத்துக்கு நம்பிக்கை பிறந்துவிடும் என்பதில் ஐயமில்லை. நம்மில் பலரும் பெருமூச்சிவிடலாம்.
ஆனால் திரைக்குப்பின்னால் ஏதோ ஒரு மர்மம் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. அதனை “அதிரடி”யாக மக்கள் முன் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.
மகிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கூடாது என்று கோஷமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பல சிறைச்சாலைகளிலிருக்கும் அரசியல் கைதிகள் ஒரே நேரத்தில் ஐக்கியமாக இயங்குகிறார்கள் என்றால் வெளியிலிருந்து ஒரு சக்தி அவர்களை இயக்குகிறது என்பதை மறுக்க முடியாது.
*வெளிவிவகார அமைச்சர், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது நியாம் என்று பகிரங்கமாக தெரிவிக்கிரார்.
*ஜனாதிபதி, பாராளுமன்றத்திலும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது நியாயம் என்று முன்னால் ஜனாதிபதியும் இந்நாள் மந்திரியுமான மகிந்தவுக்கு முன்னால் தெரிவிக்கிறார்.
*போர் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் படையினர் தண்டிக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் கூறுகிறது.
இவை அனைத்தும் அப்படியே நடந்தால், 2016 வருட ஆரம்பம் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையாகவும் அதே வருட இறுதி கடும் ஏமாற்றமாகவும் அமையும் என்று நினைக்கிறேன்.
சிங்கள மக்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் அரசியல் கைதிகள் விடுவிப்பு நாடகம் அரங்கேற்றப்படும். அப்பொழுது தமிழர்களும் வெளியுலகும் நிம்மதி மூச்சுவிட்டு, எல்லாம் தமக்கு சாதமாகவே அமைவதாக பகல் கனவு காண ஆரம்பிக்கும்.
போர் குற்ற விசாரணை முடிவுகள் வெளியாகும் போது அதே சிங்கள மக்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடாத்துவார்கள். அப்பொழுது அவர்கள் முன்வைக்கும் ஒரு வாதம் தான் “புலிகளுக்கு மன்னிப்புக் கொடுக்க முடியுமானால் ஏன் நாட்டை காப்பாற்றிய வீரர்களுக்கு பொது மன்னிப்புக் கொடுக்க முடியாது”.
இந்த வாதத்தை தமிழ் அரசியல்வாதிகளும் ஆதரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவார்கள். கடைசியில் அரசாங்கம் வேறு வழியின்றி அவர்களுக்கு பொது மன்னிப்பு கொடுப்பதாக ஒரு நாடகம் அரங்கேற்றப்படும்.
இந்த இரண்டு நாடகங்களும் ஏற்கனவே திட்டமிடப்பட்டு தான் இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். அதனால்தான் ஒவ்வொரு நகர்வும் மிகவும் கவனமாகவும் திறமையாகவும் நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
தமிழ் அரசியல்வாதிகளின் கவனயீர்ப்புப் போராட்டமோ அவர்கள் விடுவிப்பது தவறு என்றோ நான் சொல்லவில்லை. ஆனால் அதனைப் பயன்படுத்தி ஒரு பேராபத்து காத்திருக்கிறது என்ற உண்மையை சொல்லவே முயற்சிக்கிறேன்.
போர் குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டால், படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளின் ஆத்மா சாந்தியடையுமா? என்ற சிந்தனையோடு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகப் போராடுவோம்..!!
Average Rating