மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த சிறுவன் கொலை: லாரி அதிபர் கைது– வாக்குமூலம்…!!
திருப்பூர் மாவட்டம் திப்பம்பட்டி கண்ணப்பன் நகரை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 30). லாரி டிரைவர். இவருக்கும் குடிமங்கலம் அருகே உள்ள மெட்ராத்தியை சேர்ந்த தீபிகாவிற்கும் (25) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தீபிகா கர்ப்பமாக இருக்கும்போது கருப்புசாமி தற்கொலை செய்து கொண்டார். அதன்பிறகு தீபிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த சிறுவன் கிருஷ்வினுக்கு 4½ வயது ஆகிறது.
இந்த நிலையில் குடிமங்கலம் அருகே உள்ள ஏ.நாகூரை சேர்ந்த ஜெயபிரகாஷ் (32) என்பவரை, கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு தீபிகா 2–வதாக திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் தீபிகா தனது மகன் கிருஷ்வினுடன், ஜெயபிரகாஷ் வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையில் கடந்த 3 மாதத்திற்கு முன் தீபிகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் கடந்த 5–ந்தேதி வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த கிருஷ்வினை திடீரென்று காணவில்லை. அதிர்ச்சி அடைந்த தீபிகா அக்கம், பக்கத்தில் தேடியும் கிருஷ்வினை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தீபிகா குடிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர்.
இதற்கிடையே குண்டடம் அருகே வெறுவேடம்பாளையம் வழியாக செல்லும் பி.ஏ.பி.வாய்க்காலில் ஒரு சிறுவனின் உடல் மிதப்பதாக குடிமங்கலம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் தீபிகாவை அழைத்துக்கொண்டு வெறுவேடம்பாளையத்திற்கு சென்றனர். அங்கு பிணமாக கிடந்தது தனது மகன் கிருஷ்வின்தான் என தீபிகா அடையாளம் காட்டினார். சிறுவனின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து குடிமங்கலம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஜெயபிரகாசும், அவரது அண்ணன் குருசாமியும் (35) சேர்ந்து கிருஷ்வினை காரில் கடத்தி கொலை செய்தது தெரியவந்தது. போலீசில் ஜெயபிரகாஷ் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:–
நான் சொந்தமாக லாரி வைத்து உள்ளேன். இந்த நிலையில் எனக்கு தீபிகாவை 2–வது திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பின்னர் தீபிகா, தனது முதல் கணவர் கருப்புசாமிக்கு பிறந்த கிருஷ்வினை தன்னுடன் அழைத்து வந்திருந்தார். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் கிருஷ்வினை, கருப்புசாமியின் பெற்றோரிடம் விட்டுவிடும்படி பலமுறை கூறினேன். ஆனால் அவர் மறுத்து விட்டார்.
எனவே கிருஷ்வினை கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி கடந்த 5–ந்தேதி வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த கிருஷ்வினை நானும் எனது அண்ணன் குருசாமியும் சேர்ந்து ஒரு காரில் கடத்திக்கொண்டு பூசாரிபட்டி பி.ஏ.பி.வாய்க்காலுக்கு சென்றோம்.
பின்னர் குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்று பிணத்தை பி.ஏ.பி.வாய்க்காலில் வீசிவிட்டு வீட்டிற்கு வந்து விட்டோம். இந்தநிலையில் வீட்டில் கிருஷ்வினை காணவில்லை என்று எனது மனைவி தேடியபோது நான் எதுவும் தெரியாதது போல் இருந்து கொண்டேன். இப்போது போலீசில் மாட்டிக்கொண்டோம்.
இவ்வாறு ஜெயபிரகாஷ் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் ஜெயபிரகாஷ் மற்றும் அவரது அண்ணன் குருசாமி ஆகிய இருவரையும் கைது செய்தனர். சிறுவனை கடத்த பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Average Rating