அறந்தாங்கி அருகே பணம் கேட்டு கடத்தப்பட்ட நண்பரை மீட்க சென்ற வெல்டர் படுகொலை…!!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள வம்பரன்பட்டி பகுதியில் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடுவதாக கே.புதுப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு திருச்சி துவாக்குடியை சேர்ந்த வெல்டரான ராஜ்குமார் என்பவர் கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே ராஜ்குமார் இறந்தார். அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்தது. அதன் விவரம் வருமாறு:–
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள ராயிறான்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 40). ரியல் எஸ்டேட் புரோக்கர். இவரது மனைவி பானுமதி. இவர் அங்குள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 3–ந்தேதி கருப்பசாமிக்கு ஒரு போன் அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் பேசியவர்கள், நாங்கள் வனத்துறை அலுவலகத்தில் இருந்து பேசுகிறோம், உங்களிடம் ஒரு பிரச்சினை தொடர்பாக பேச வேண்டியுள்ளது. எனவே நாங்கள் கூறும் இடத்துக்கு வாருங்கள் என்று கூறி, ஒரு இடத்தின் பெயரை கூறி விட்டு போனை வைத்து விட்டனர். இதையடுத்து கருப்பசாமி வீட்டை விட்டு சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இதனிடையே கருப்பசாமியின் மனைவி பானுமதியின் செல்போனுக்கு மர்மநபர்கள் சிலர் போன் செய்துள்ளனர். அதில் பேசிய நபர்கள், நாங்கள் உங்கள் கணவரை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள வம்பரன்பட்டி பகுதிக்கு கடத்தி வந்து வைத்துள்ளோம். அவரை விடுவிக்க வேண்டும் என்றால் எங்களுக்கு ரூ.2 லட்சம் தரவேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பானுமதி, தனது பக்கத்து வீட்டை சேர்ந்த மணி, கருப்பசாமியின் நண்பரான திருச்சி துவாக்குடியை சேர்ந்த ராஜ்குமார் ஆகியோருடன் கடந்த 4–ந்தேதி வம்பரன்பட்டிக்கு சென்றார். அங்கு சென்றதும் ‘மர்ம’ நபர்கள் கூறிய இடத்துக்கு பானுமதியும், மணியும் மட்டும் சென்றுள்ளனர். ராஜ்குமார் செல்லவில்லை.
சிறிது நேரம் கழித்து அவரது செல்போனுக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர்கள், கருப்பசாமியின் மனைவி ரூ.2 ஆயிரம் மட்டுமே பணம் தந்துள்ளார். ரூ.2 லட்சம் பணத்தையும் தந்தால் மட்டுமே கருப்பசாமியை விடுவிப்போம் என்று கூறியுள்ளனர். பின்னர் பானுமதியும், மணியும் திரும்பி வந்து விட்டனர்.
இதையடுத்து நண்பர் கருப்பசாமியை மீட்பதற்காக ராஜ்குமார் ரூ.2 லட்சம் பணத்தை திரட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்தார். தன்னிடம் உள்ள நகைகளை அடகு வைத்து ரூ.2 லட்சத்தை திரட்டினார்.
இதையடுத்து அந்த பணத்துடன் நேற்று மதியம் ராஜ்குமார், பானுமதி, மணி, கருப்பசாமியின் உறவினர்கள் செந்தில்குமார், கோகிலன், செல்வராஜ் ஆகிய 6 பேரும் வம்பரன்பட்டிக்கு சென்றனர். அங்கு சென்றதும் ராஜ்குமார் மட்டும் கருப்பசாமி கடத்தி வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு பணத்துடன் தனியாக சென்றுள்ளார். மற்ற அனைவரும் செல்லவில்லை.
நீண்ட நேரம் ஆகியும் ராஜ்குமார் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பானுமதி மற்றும் 4 பேரும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு ராஜ்குமார் கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடியுள்ளார். உடனே இதுகுறித்து கே.புதுப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜ்குமாரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போதுதான் அவர் இறந்து விட்டார்.
மேலும் ‘மர்ம’ நபர்களால் கடத்தப்பட்ட கருப்பசாமியை போலீசார் மீட்டனர். அவரை மீட்க சென்ற போது மர்ம நபர்கள் ராஜ்குமாரை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக கருப்பசாமியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடி வில் மேலும் பரபரப்பு தகவல் வெளியாகும் என தெரிகிறது.
Average Rating