கோவையில் ஓடும் பஸ்சில் பிக்பாக்கெட்: இளம்பெண் கைது…!!
கோவையில் சமீப காலமாக பஸ்களில் செல்லும் பெண்களிடம் நகை மற்றும் பணம் பறிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தன. இதில் பெண்களே கைவரிசை காட்டலாம் என போலீசாருக்கு சந்தேகம் நிலவியது.
இதைத்தொடர்ந்து பஸ்சில் கைவரிசை காட்டும் பெண்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தர வின்பேரில் துணை கமிஷனர், நிஷாபார்த்திபன், உதவி கமிஷனர் ஜனார்த்தனன் ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, ஏட்டுகள் உமா, கிருஷ்ணமூர்த்தி, போலீஸ்காரர்கள் கார்த்தி, ஷர்மிளா ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் பஸ்களில் சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது ஓடும் பஸ்சில் பெண்ணிடம் கைவரிசை காட்டிய இளம்பெண்ணை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இதுகுறித்த விவரம் வருமாறு:–
கோவை பிரஸ்காலனி பாலாஜிகார்டன் பகுதியை சேர்ந்தவர் வீரமணி. முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி பாண்டி மீனா (வயது 48). இவர் நேற்று மாலை துடியலூரில் இருந்து உக்கடம் செல்லும் பஸ்சில் சென்றார். அப்போது பாண்டிமணி ஒரு கைப்பை வைத்திருந்தார். அதில் 4 பவுன் நகை இருந்தது. பஸ்சில் பாண்டிமணியின் அருகே ஒரு இளம்பெண் அமர்ந்திருந்தார்.
அந்த பெண் நைசாக பாண்டிமணி கையில் வைத்திருந்த கைப்பையை திருடி விட்டு தப்பி ஓட முயன்றார். இதை கவனித்த பாண்டிமணி சத்தம் போடவே பஸ்சில் பயணம் செய்த தனிப்படை போலீசார் நகைபறித்த இளம் பெண்ணை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை உக்கடம் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அவர் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த ஜானு(வயது 29) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து திருட்டு நகையை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
ஜானுவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:–
தற்போது கைது செய்யப்பட்ட ஜானு கடந்த 2008–ம் ஆண்டிலேயே கோவை சாய்பாபாகாலனி போலீசாரால் கைது செய்யப்பட்டவர். இவர் மீது கோவையில் சில வழக்குகள் இருந்ததால் குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைத்தனர். பின்னர் வெளியே வந்த இவர் ஈரோட்டில் தங்கி கைவரிசை காட்டினார். அங்கு பிரமாண்ட பங்களாவில் மாதம் ரூ.15 ஆயிரம் வாடகைக்கு தங்கினார். அங்கிருந்து அடிக்கடி கோவைக்கு வந்து பஸ்சில் சென்று பெண்களிடம் நகை மற்றும் பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். பார்ப்பதற்கு வசீகரமாக இருக்கும் ஜானு அக்கம்பக்கத்தினரிடம் தன்னை டி.வி. நடிகை என கூறி உள்ளார். திருடும் பணத்தில் விலை உயர்ந்த ஆடைகள் மற்றும் உயர்தர மேக்கப் சாதனங்கள் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இவருடன் மேலும் சில பெண்களும் சேர்ந்து பஸ்களில் பெண்களிடம் கைவரிசை காட்டி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களையும் மடக்கிப்பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
Average Rating