தேர்தலில் போட்டியிட நவாசுக்கு தடை? மேலும் 2 இடங்களில் பெனசிர் போட்டி
பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்ப அனுமதிக்கப்பட்டாலும், பொதுத் தேர்தலுக்கு அவர் தாக்கல் செய்த வேட்பு மனு தள்ளுபடி செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே, நவாஸ் ஷெரீப்புக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால், அவரது வேட்பு மனு ஏற்கப்படுவது சந்தேகமே என்று அட்டர்னி ஜெனரல் மாலிக் கயூம் கூறியுள்ளார். அதே நேரத்தில், நேற்று முன்தினம் ஒரு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ, நேற்று மீண்டும் இரண்டு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.ஏழு ஆண்டு நாடு கடத்தலுக்கு பின், சர்வதேச நெருக்கடி காரணமாக, நவாஸ் ஷெரீப் பாக்., திரும்ப, அந்நாட்டு சர்வாதிகாரி முஷாரப் அனுமதி அளித்தார். நேற்று நாடு திரும்பிய நவாஸ் ஷெரீப், டாடா தர்பார் வழிபாட்டுத் தலத்தில் பிரார்த்தனை செய்தார். அங்கு திரண்டிருந்த பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -என் பிரிவு கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசிய நவாஸ், முஷாரப்பை கடுமையாக தாக்கினார்.
அவர் பேசியதாவது:பாக்.,கை அழிவின் விளிம்புக்கு கொண்டு வந்துள்ளார் முஷாரப். உடனடியாக அவசர நிலை பிரகடனத்தை வாபஸ் பெற வேண்டும். குடிமக்களின் அரசியலமைப்பு உரிமை, அடிப்படை உரிமை மறுக்கப்படும் நிலையில், மக்கள் கடினமான நிலையில் வாழ்க்கை நடத்தும் நிலையில், அரசியலமைப்புச் சட்டப்படி செயல்பட்ட நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் மோசடி இருக்காது என்று எப்படி கருத முடியும்? அது போன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டாமா?இவ்வாறு நவாஸ் கூறியபோது, சுற்றியிருந்த கட்சியினர், `ஆமாம்’ என்று கோஷம் எழுப்பினர். விமான நிலையத்தில் இருந்து பேரணியாக புறப்பட்ட நவாஸ், டாடா தர்பார் வழிபாட்டுத் தலம் வழியாக தனது வீட்டை சென்றடைய ஒன்பது மணி நேரம் ஆகியது.நவாஸ் ஷெரீப் வேட்புமனு தாக்கல் செய்திருந்தாலும், அவரது மனு நிராகரிக்கப் படுவதற்கு தான் பெரிதும் வாய்ப்பு இருப்பதாக பாக்., அட்டர்னி ஜெனரல் மாலிக் கயூம் தெரிவித்துள்ளார்.
பெனசிர் போட்டி: பாக்., பொதுத் தேர்தலில், கராச்சியில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில், நேற்று முன் தினம் பெனசிர் புட்டோ வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், தனது சொந்த பகுதியை சேர்ந்த சிந்து மாகாணத்தின் தென்பகுதி தொகுதியான லார்கனாவை சேர்ந்த மேலும் இரண்டு பார்லிமென்ட் தொகுதிகளிலும் நேற்று பெனசிர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ராணுவ தளபதி யார்? விரைவில் அறிவிப்பு :பாக்., ராணுவத்தின் புதிய தளபதியின் பெயரை, அதிபர் முஷாரப் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பாக்., அதிபர் தேர்தலில் முஷாரப் வெற்றிபெற்றதை அறிவிக்கையாக வெளியிட தேர்தல் கமிஷனுக்கு, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து வரும் வியாழக்கிழமை, மீண்டும் அதிபராக பதவிப்பிரமாணம் ஏற்க உள்ளார் முஷாரப்.
மீண்டும் அதிபராக பதவி ஏற்கும் முன் ராணுவ தலைமை தளபதி பதவியை ராஜினாமா செய்யப் போவதாக ஏற்கனவே அறிவித்த உறுதி மொழியின் படி, தனது பதவியை முஷாரப் ராஜினாமா செய்துள்ளார். அவர் ராணுவ தளபதி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக ராணுவம் அறிவித்துள்ளது. இந்த அறிவிக்கை, அதிபராக முஷாரப் பதவியேற்றதும் வெளியிடப்படுகிறது. அப்போது, புதிய தளபதியின் பெயரும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாக்., ராணுவ தளபதியின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள்.