ஆஸ்பத்திரியில் 18 பேர் பலியான சம்பவம்: ஒரே வழக்காக பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை..!!
சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில், தண்ணீர் புகுந்ததால் ஜெனரேட்டர் பழுதாகி செயற்கை சுவாசம் அளிக்கும் கருவி செயல்படாமல் போனதும், அதன் காரணமாக 18 நோயாளிகள் மூச்சுத் திணறி உயிரிழந்ததும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த 18 பேரில் 4 பேரின் உடல்களை உறவினர்கள் பெற்றுச் சென்று விட்டனர். மீதி உள்ள 14 பேரின் உடல்கள் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முடிந்து அவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக நந்தம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். 174 என்ற சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்கொலை மற்றும் மரணத்துக்கு காரணம் தெரியாமல் இருக்கும் நேரங்களில் இச்சட்டப்பிரிவை போலீசார் பயன்படுத்துவார்கள். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 14 பேருக்கும் சேர்த்து ஒரே வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவின் பேரில், தென் சென்னை கூடுதல் கமிஷனர் ஸ்ரீதர், இணை கமிஷனர் அருண் ஆகியோரது மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பரங்கிமலை போலீஸ் உதவி கமிஷனர் மன்சூர் அலி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தனது விசாரணையை உடனடியாக தொடங்கினார். உயிரிழந்த நோயாளிகளின் உறவினர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்திய போலீசார் அவர்கள் அளித்த தகவல்களை வாக்கு மூலமாக பதிவு செய்துள்ளனர். ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான அறிக்கையை உதவி கமிஷனர் மன்சூர் அலி உயர் போலீஸ் அதிகாரிகளிடம் இன்று அல்லது நாளைக்குள் சமர்ப்பிப்பார்.
அப்போது 18 நோயாளிகளின் மரணத்துக்கும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரின் கவனக்குறைவான செயல்பாடே காரணம் என்பது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, விசாரணை நடந்து கொண்டிருப்பதால் அதுபற்றி விவரமாக தெரிவிக்க முடியாது என்றார். அதே நேரத்தில் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதிகாரிகள் யாரும் இதனை உறுதிபடுத்த வில்லை.
இதற்கிடையே ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்க்பபட்டிருந்த 14 பேரின் உடல்களில் 10 பேரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்றே உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களது உடல்கள் சொந்த ஊர்களுக்கு அரசின் செலவிலேயே அனுப்பப்பட்டது. ஒருவரின் உடல் புதுச்சேரிக்கும், இன்னொருவரின் உடல் ஆந்திர மாநிலம் ஓங்கோலுக்கும் அனுப்பப்பட்டது.
மற்றொருவரின் உடல் ராணிப்பேட்டைக்கும் ஏனைய 7 பேரின் உடல்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டன.
ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மற்ற 4 பேரின் உடல்களும் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஒப்படைக்கப்படுகிறது.
Average Rating