ஜிடேனுக்கு வக்காலத்து வாங்க வேண்டாம்; துராமுக்கு மெட்டராஸி காட்டமான பதில்

Read Time:3 Minute, 6 Second

Foot-Italy.jpgஉலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜிடேன் நடந்து கொண்ட விதத்துக்கு லிலியன் துராம் வக்காலத்து வாங்க வேண்டாம் என பாதிக்கப்பட்ட இத்தாலி வீரர் மெட்டராஸி கூறியுள்ளார். “பிரெஞ்சு கால்பந்து அணியின் காப்டன் ஜினெடின் ஜிடேன் ஒன்றும் புனிதர் அல்ல; முரட்டுத்தனமான ஆட்டத்துக்காக முதல் தர போட்டிகளில் 12 முறை சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டவர் அவர் என்பதை மறக்க வேண்டாம்.

“ஆரம்ப காலத்தில் நான்கூட தவறுகளைச் செய்திருக்கிறேன். ஆனால் உலக கோப்பை இறுதிப் போட்டி போன்ற முக்கியமான ஆட்டத்தில் பண்பாடே இல்லாமல் நடந்துகொண்ட ஜிடேன் போன்ற ஆட்டக்காரருக்கு வக்காலத்து வாங்கி, லிலியன் துராம் மதிப்பை இழக்க வேண்டாம்’ என்று அன்சா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார் மெட்டராஸி.

என்னுடைய அம்மாவையும் சகோதரியையும் கேவலமாகத் திட்டியதால்தான் மெட்டராஸியை மார்பில் முட்டினேன் என்று ஜிடேன் கூறியிருந்தார். ஜிடேனின் அம்மாவைத் திட்டவில்லை என்று கூறினார் மெட்டராஸி. ஆனால் சகோதரியைத் திட்டவில்லை என்று கூறவில்லை.

ஆட்டத்தில் ஆட்டக்காரருடன் நேருக்கு நேர் மோதுவதே தவறு, பந்தைத்தான் அடிக்க வேண்டும். அப்படியிருக்க ஆட்டக்காரரின் குடும்பத்தவர்களை மைதானத்தில் ஏசுவது அநாகரீகமான செயல் அல்லவா? இந்த விவகாரம் குறித்து விசாரிக்கவிருக்கும் சர்வதேச கால்பந்து சம்மேளனம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று தெரியவில்லை.

துராம் பேட்டி: பிரெஞ்சு கால்பந்து வீரரான லிலியன் துராம், சக வீரரான ஜிடேனுக்காகப் பரிந்து பேட்டி அளித்திருந்தார். அதில் மெட்டராஸியை நாகரிகம் இல்லாதவர் என்று கண்டித்திருந்தார். ஜிடேன் பதிலடி நடவடிக்கையில் இறங்கியிருக்க வேண்டாம் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

உலக கோப்பையைவிட இந்த விவகாரம்தான் எல்லோர் நெஞ்சிலும் நீண்ட நாளைக்கு நிலைத்திருக்கும் போலத் தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மருதனார்மடத்தில் கிளைமோர் தாக்குதல்: 3 இராணுவம் பலி- 14 பேர் படுகாயம்
Next post வடகொரியாவில் வெள்ளத்துக்கு 100 பேர் பலி