மறுபடி ஒரு முறை சிதைக்கப்பட்ட மாவீரர் தினம்..!!
இலங்கைப் பேரினவாத அரசாலும், உலக அதிகார வர்க்கங்களின் ஆதிக்கத்தாலும் படுகொலை செய்யப்பட நூற்றுக்கணக்கான போராளிகளின் நினைவு தினம் நேற்று ஈழத் தமிழர்கள் வாழும் புலம்பெயர் நாடுகளில் பெரும் பணச் செலவில் கொண்டாடப்பட்டது.
ஆயிரக்கணக்கான மக்களின் தேசப் பற்றை பயன்படுத்திக் கொண்ட வியாபாரிகள் கூட்டமும் அதற்கு தத்துவார்த்த முலாம் பூசும் பிழைப்புவாதிகளின் கூட்டமும், ஊடக வியாபாரிகளும் மாவீரர் தினத்தை வெறும் சடங்காக மாற்றியுள்ளன.
இதனால் ஏற்படும் பலன் என்ன? அடிப்படையில் மாவீரர் தினத்தை ஒழுங்கு செய்யும் ஒரு சில வியாபார வெறியர்கள் இலாபமீட்டிக் கொள்கிறார்கள். கலந்து கொண்டவர்களைப் பார்வையாளர்களாக்க வர்த்தக ஊடகங்கள் முண்டியடித்துக் கொள்கின்றன. சில தனிநபர்களும், குழுக்களும் தமது பங்கிற்கு குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வலை வீசுகின்றனர். இலங்கைப் பேரினவாத அரசிற்கு இதனால் எதாவது பாதிப்பு ஏற்படுமா அன்றி, அதனை இயக்கும் பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கும் ஏகாதிபத்திய அரசுகளுக்கும் ஏதாவது பின்னடைவு ஏற்படுமா என்ற கேள்விகளுக்கு இல்லை என்பதே பதில்.
மரணித்துப் போன போராளிகள் எதற்காகத் தியாகம் செய்தார்கள். ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி வெற்றி பெற வேண்டும் என்பதே அவர்களின் ஒரே நோக்கமாகவிருந்தது. அவர்கள் வித்துக்களாக விழுந்த போது புதிய ஆலமரங்கள் முளைத்தெழும் என்று கனவு கண்டிருப்பார்கள். ஆனால் வித்துக்களிலிருந்து விசக் கிருமிகளே தோன்றின. அவை விழை நிலத்தை நாசப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இன்று இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் அவர்களின் மதம் குறித்தோ அன்றி ஓசாமா பின் லாடன் போன்றவர்கள் குறித்தோ விமர்சிப்பது தண்டனைக்குரிய குற்றம். அதே போன்ற ஒரு சமூகத்தை உருவாக்கும் தமிழ் ‘ஐ.எஸ்.எல்’ கருத்தை மக்கள் மத்தியில் விதைக்கும் சமூகவிரோதிகள் கூட்டம், கடந்தகாலப் போராட்டத்தை விமர்சன சுயவிமர்சங்கள் ஊடாக மீளாய்வுக்கு உட்படுத்தக்கூடாது என்கின்றது.
பிரபாகரனுக்குப் பின்னால் ஒளிவட்டம் கட்டி, அவரைக் கடவுளாக்கி நந்திக்கடல் வரை நகர்த்திச் சென்று கொலை செய்வதற்குத் துணைசென்ற அதே கயவர் கூட்டமே இன்று மாவீரர் தினத்தை வியாபார நாளாக்கியுள்ளது.
மாவீரர் தினத்தை அடிப்படைவாதிகளின் சடங்காக மாற்றிய இக்குழுக்களில் பெரும்பாலானவர்கள் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடியவர்களில்லை. வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்வதற்கு முன்பு வரை புலிகள் இயக்கத்திற்கு எதிரணியில் புலியெதிர்ப்பாளர்களாகச் செயற்பட்டவர்கள், இறுதிப் போராட்ட காலத்தில் மக்களிடம் திரட்டிய பெர்ந்தொகையான பணத்தைக் கொள்ளையடித்து கொண்டவர்கள்
இன்று அடிப்படைவாதிகள் போல வேடமிட்டுக் கொள்கின்றனர்.
இவர்கள் மக்கள் மீண்டும் போராடுவதை விரும்புகிறார்களா?
இதுகாலம் வரை “பிரபாகரன் மீண்டுவந்து போராட்டம் நடத்துவார்” என மக்களை மாயைக்குள் வைத்திருந்த இக்குழுவினர், இலங்கை அரசிற்குச் செய்த சேவை அளப்பரியது.
“பிரபாகரன் இல்லை, மீண்டும் கிளர்ந்தெழுந்து போராடுங்கள்” என இவர்கள் நேர்மையாகக் கூறியிருந்தால் மக்களின் கூட்டுணர்வு ஒடுக்குமுறைக்கு எதிரான புதிய தலைவர்களை உருவாக்கியிருக்கும்.
போராட்டம் எங்கு சரியான திசைவழியில் சென்றது, எங்கு தவறுகளைக் கொண்டிருக்கிறது என்று ஆய்வுக்கு உட்படுத்தியிருந்தால் எதிர்கால சந்ததி தவறுகளைத் திருத்திக் கொண்டு புதிய வழிமுறைகளை ஆராய்ந்திருக்கும்.
மாவீரர் தினம் உலகின் ஒடுக்கப்பட்ட மக்களையும் ஜனநாயகவாதிகளையும், மனிதாபிமனிகளையும் ஒருங்கிணைக்கும் நாளாக எமக்க்குப் பயன்படுகிறதா?.. அவர்களை அன்னியப்படுத்தும் வியாபார நிகழ்வாக மட்டுமே கொண்டாடப்படுகின்றது.
புரட்சிகரமான மாவீரர் நிகழ்வு மட்டுமல்ல, புதிய அரசியல் இயக்கமும் தோன்றும் வரை.. பிழைப்புவாதிகளின் பணப்பைகள் வீங்கிப் பெருத்துக் கொண்டேயிருக்கும்.
Average Rating