முரளிதரன் சொந்த மண்ணிலேயே உலக சாதனையைப் படைப்பாரா?

Read Time:4 Minute, 33 Second

muralitharanslanka.jpgமுத்தையா முரளிதரனின் உலக சாதனை விக்கெட் வேட்டை அவரது பிறந்த மண்ணிலே தான் நிகழப்போகின்றது. இந்த சாதனையை முரளி உலக சாதனைக்கு உரித்தான (708 விக்கெட்டுகள்) வீரர் ஷேன் வோர்னின் சொந்த மண்ணான அவுஸ்திரேலியாவிலேயே நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அதை அவுஸ்திரேலிய வீரர்கள் தடுத்து நிறுத்தி விட்டார்கள். ஆனாலும், இந்த சாதனையை முரளிதரன் தனது சொந்த மண்ணான கண்டியிலே நிகழ்த்துவதைத்தான் நாங்கள் பெரிதும் விரும்புவதாக முரளிதரனின் உற்றார், உறவினர், நண்பர்கள் தெரிவிக்கின்றார்கள். 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி கண்டி கட்டுகஸ்தோட்டையில் பிறந்த முரளிதரன் கட்டுகஸ்தோட்டை சென்.அன்ரனிஸ் கல்லூரியிலேயே கல்வி கற்றவர். இவரது கிரிக்கெட் வாழ்க்கையும் அங்கு தான் ஆரம்பமானது. மேற்படி கல்லூரிக்கும், கண்டி டிரினிட்டி கல்லூரிக்குமிடையில் வருடா வருடம் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகின்றது. போட்டி ஒருவருடம் சென். அன்ரனிஸ் கல்லூரி மைதானத்திலும், ஒரு வருடம் கண்டி அஸ்கிரிய மைதானத்திலும் நடைபெறும். இதனால், அஸ்கிரிய மைதானத்தின் தன்மையை முரளிதரன் சிறுவயதிலிருந்தே நன்கு அறிந்து வைத்துள்ளார். இதனால்தான் அஸ்கிரிய மைதானத்தில் முரளிதரன் தனது டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சில் மறக்கமுடியாத சில சாதனைகளைப் புரிந்துள்ளார்.

1997 ஆம் ஆண்டு இலங்கை, சிம்பாவே அணிகளுக்கிடையில் அஸ்கிரிய மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முரளிதரன் மொத்தம் 117 ஓட்டங்களைக் கொடுத்து 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதில் 1 ஆவது இனிங்ஸில் மட்டும் 94 ஓட்டங்களைக் கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

2001 ஆம் ஆண்டு இதே மைதானத்தில் மீண்டும் சிம்பாவே அணிக்கு எதிராக 1 ஆவது இனிங்ஸில் 51 ஓட்டங்களைக் கொடுத்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார். இலங்கை வீரர் ஒருவர் ஒரு இனிங்ஸில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது இது தான் முதல் தடவை. இச்சாதனை முரளிதரனுக்கு சர்வதேச தரத்தில் 5 ஆவது இடத்தைப் பெற்றுக் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

2003 ஆம் ஆண்டு அஸ்கிரிய மைதானத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக மொத்தம் 221 ஓட்டங்களைக் கொடுத்து 9 விக்கெட்டுகளையும், 2004 ஆம் ஆண்டு மே.இந்தியத் தீவு அணியுடனான போட்டியில் 1 ஆவது இனிங்ஸில் முரளிதரன் 46 ஓட்டங்களைக் கொடுத்து 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

தற்போது இலங்கை வந்திருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிராக 1 ஆவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 1 ஆம் திகதி கண்டி அஸ்கிரிய மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. டெஸ்ட் போட்டியில் முரளிதரன் இதுவரை 704 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ஷேன் வோனின் சாதனையை முறியடிக்க முரளிக்கு இன்னும் 5 விக்கெட்டுகள் தேவை. இந்த சாதனையை முரளிதரன் தனது சொந்த மண்ணிலேயே நிகழ்த்தக்கூடுமென்று இங்கிலாந்து அணியின் கப்டன் மைக்கல் வோனே தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

muralitharanslanka.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ரேஸ் கிளப்பில் விஜய், மாளவிகா!
Next post 7 பொலிஸாரின் தலையை வெட்டிய தலிபான்கள்